PUBLISHED ON : டிச 19, 2021

அன்புள்ள அம்மா —
இஸ்லாமிய பெண்ணயாகிய எனக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. செருப்புக்கடை வைத்திருக்கிறார், கணவர். 18 வயதில் ஒரு மகன்; 10 வயதில் ஒரு மகள். மாமனார், மாமியார், கணவனை இழந்த நாத்தனார் என, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாய் வசிக்கிறோம்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர், நாத்தனார். திருமணமான ஆறு மாதத்திலேயே அவளது கணவர், விபத்தில் இறந்து விட்டார். அவளுக்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தாரும் முன்வரவில்லை. தெற்றுப்பல், இடுங்கிய கண்களுடன் காட்சியளிப்பாள். சிரிப்பு என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.
நான்கு வேளை சாப்பிடுவாள். தினம் ஐந்து வேளை தொழுவாள். குர் - ஆன் ஓதுவாள். வீட்டுக்கு உறவினர் யாராவது திருமண அழைப்பிதழ் வைக்க வந்தால், முகத்தில் துக்கம் கவிழ்ந்து கொள்ளும். எதையோ இழந்தது போல ஆகிவிடுவாள்.
திருமண அழைப்பிதழை அடிக்கடி எடுத்து பார்ப்பாள். நடுராத்திரியில் எழுந்து குளித்து, ஈரப்புடவையுடன் வெறும் தரையில் தொழுது, சத்தமாக அழ ஆரம்பிப்பாள்.
'இன்னைக்கி திருமண பத்திரிக்கை கொண்டு வந்து கொடுத்துட்டு போனவங்க சந்தோஷமா இருக்கக் கூடாது. அவங்க திருமணத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடு இறைவனே...' என, ஒப்பாரியாய் வேண்டுவாள்.
அவளது செய்கையை பார்த்து திகிலடித்து போவேன்.
எங்கள் வீட்டில் நல்லது எது நடந்தாலும் அது நாசமாய் போக, நள்ளிரவில் ஈரச்சேலை தொழுகை நடத்துவாள், நாத்தனார்.
பகலில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிப்பாள். 'அழைப்பிதழ் கொடுத்தவரின் விழா சிறப்பாக நடக்க, இறைவனிடம் பிரார்த்தித்தேன்...' என, பொய் கூறுவாள். அடிக்கடி எதாவது முணுமுணுத்தபடி விரல்களில் நெட்டி முறிப்பாள்.
குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழா என்று கூப்பிட்டால், அவர்களையும் சபிப்பாள். பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகும், தொடர்ந்து போராடி உயிர் பிழைக்க வைப்பர்.
மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டாள், விழா வைத்திருக்கிறோம் என, யாராவது கூப்பிட்டால், அவர்களை சபிப்பாள். பெரிய மனுஷி ஆனவள் குளியலறையில் வழுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்வாள்.
சுன்னத் கல்யாணத்துக்கு கூப்பிடுவர். சபிப்பாள். சுன்னத் பண்ணிய பையனுக்கு காயமே ஆறாது; நான்கைந்து மாதம் சிரமப்படுவான்.
புது வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிடுவர். சபிப்பாள். கொல்லைப்புற சுவர் இடிந்து விழும்.
பொறுத்திருந்து பார்த்து, 'மதனி நீங்க செய்றது ஆண்டவனுக்கே பொறுக்காது. நல்லதுக்கு கூப்பிடுறவங்களை வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, சபிக்கலாமா... நள்ளிரவு தொழுகையை கெட்டதுகளுக்கு பயன்படுத்தாதீங்க...' என்றேன்.
'நான் மட்டும் நாறி கிடக்க எல்லாரும் சந்தோஷமா இருக்க விடுவேனா... நான் அப்படிதான்டி செய்வேன். உன் வேலைய பார்த்துக்கிட்டு போடி...' என, வசவுவாள்.
கணவனிடம் முறையிட்டால், 'வெளில யார்கிட்டயும் இத சொல்லிடாத...' என்கிறார்.
பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்தான், மகன். 'நீட்' தேர்வில், 39வது ரேங்க். மதுரை மருத்துவக் கல்லுாரியில், 'அட்மிஷன்' கிடைத்திருக்கிறது.
நடு நிசி தொழுகைகளை ஆரம்பித்து, 'என் அண்ணன் மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வைத்து விட்டாயே நியாயமா? அவன் ஒருக்காலும் டாக்டர் ஆகக்கூடாது, டாக்டர் ஆகக்கூடாது...' என ஓலமிடுகிறாள், நாத்தனார்.
விக்கித்துப் போனேன். எவ்வித அசம்பாவிதமும் சந்திக்காமல் காலேஜ் சேர்ந்து மகன் படிக்க வேண்டும். என்ன செய்தால் நாத்தனாரின் விஷ வேண்டுதலை முறியடிக்கலாம்...
கண்ணீரில் மூழ்கியிருக்கும் எனக்கு தகுந்த ஆறுதலை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
பிக்பாக்கெட் அடிப்போர் தொழிலுக்கு போவதற்கு முன், இறைவனை வழிபட்டு தான் செல்கின்றனர். மொத்தத்தில் குற்றம்புரிவோர் இறைவனை தங்களது குற்றங்களுக்கு பங்குதாரர் ஆக்குகின்றனர்.
மனிதர்களிடமிருந்து எவ்வித பிரதியுபகாரமும் எதிர் பாராதவன், இறைவன். மனிதருக்கு எதை, எப்போது கொடுப்பது என, அவனுக்கு தெரியும். மனித மன விகாரங்களை உள்ளும் புறமும் அறிந்தவன்.
இஸ்லாமியரின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான, மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான், தொழுகை. உரையாடலின் நோக்கம் மிக முக்கியம்.
தொழுகையின் போது, தன், பிறர் மற்றும் உலகின் நன்மைக்கு வேண்டலாம். பிறரின் அழிவுக்கு வேண்டுதல் முறையல்ல. எதிர்மறை வேண்டுதல்களை இறைவன் ஒருநாளும் நிறைவேற்ற மாட்டான்.
இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
கணவனை இழந்த நாத்தனாருக்கு அவர் விதவையான சில மாதங்களிலேயே, மறுமணம் செய்து வைத்திருக்க வேண்டும். செய்யத் தவறி விட்டனர், கணவன் வீட்டார். சகோதரன் வீட்டில் ஒரு காயலான் கடை பொருளாக கிடக்கிறோம் என்கிற எண்ணம், நாத்தனாருக்கு இருக்கும். அவரை இனியாவது கண்ணியபடுத்துங்கள். கல்லுாரியில் சேரப்போகும் முதல் நாள் உன் மகனை, நாத்தனாரிடம் வாழ்த்து பெற சொல்.
உன் மகன் காலேஜில் சேரப் போவதற்கு முன், உன் வீட்டில், 11 மத குருமார்களை வைத்து, 4,444 தடவை, ஸலாத்துன் நாரியா ஓது. உங்கள் பள்ளிவாசல் ஹஜ்ரத்திடம் சொல்லி மகனுக்கு ஓதி, மந்திரித்த தாயத்தை இடது மணிக்கட்டில் கட்ட வை.
உங்கள் மஹல்லாவில் ஓதரம்மா என்கிற குர் - ஆன் சொல்லித்தரும் பெண்மணி இருப்பார். அவரிடம் நாத்தனாரை கூட்டிப்போய் மனப்பாரங்களை இறக்கி வைக்க சொல். மத ரீதியான, 'கவுன்சலிங்' நாத்தனாருக்கு மிகவும் உதவும்.
நள்ளிரவு தொழுகையின் பெயர் தஹஜ்ஜத் என்பர். நாத்தனாரை, தன் மீதி வாழ்நாள் மன நிம்மதிக்கு இறைவனிடம் வேண்ட சொல்.
பிறரின் அழிவு, நம் சந்தோஷத்தை எந்த விதத்திலும் மீட்டு தந்துவிடாது என்பதை நாத்தனாருக்கு அன்பான, பரிவான, மதிப்பான நடவடிக்கைகள் மூலம் உணர்த்து.
சுய பச்சாதாபம் எந்த விதத்திலும் நன்மை தராது என்பதை நாத்தனாருக்கு புரியவை. ஈர புடவையுடன் கட்டாந்தரையில் வாய்விட்டு புலம்பி, நள்ளிரவு தொழுகை தொழுவது இறைவனுக்கு உவப்பானதல்ல என, ஆணித்தரமாக அறிவி.
இறைவன், நாத்தனாரை நன்மையின் பக்கம் திருப்பட்டும் ஆமீன்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
