sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 28, 2022

Google News

PUBLISHED ON : ஆக 28, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

நான், 32 வயது ஆண். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இரண்டு வயதில் மகள் இருக்கிறாள். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மற்றும் தங்கை என்னோடு இருக்கின்றனர்.

மனைவி வயது: 30. லட்சணமாக இருப்பாள். 'மேக் - அப்' செய்து கொள்ள மாட்டாள். சேலை மற்றும் சுடிதார் மட்டுமே உடுத்துவாள். நான் சிறு வயதிலிருந்தே கூச்ச சுபாவம் மிக்கவன். பெண்களிடம் பேச ரொம்ப யோசிப்பேன். அதனால், எனக்கு ஆண் நண்பர்கள் நிறைய உண்டு. அவர்களிடம் நெருங்கி பழகுவேன். நாளடைவில் ஏனோ ஆண்கள் மீது மோகம் கொள்ள ஆரம்பித்தேன்.

என், 20 வயதில், ஆண்களோடு உடல் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. 28 வயது நெருங்கியபோது, வீட்டில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர்.

என்னால் ஒரு பெண்ணோடு சந்தோஷமாக வாழ முடியுமா என்று யோசித்தேன். எனவே, திருமணம் வேண்டாம் என்று, அம்மாவிடம் கூறி பார்த்தேன். ஆனால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார், அம்மா. வேறு வழியின்றி ஒப்புக் கொண்டேன்.

நினைத்ததை விட வாழ்க்கை ஆனந்தமாய் துவங்கியது. திருமணம் ஆன சில நாட்களிலேயே மனைவியோடு தாம்பத்தியத்தில் இருக்க முடிந்தது. அவளுக்கு நான் தான் உலகம் என்று அடிக்கடி கூறுவாள். எனக்கும் முதல் முறையாக ஒரு பெண் மீது, அதீத காதல் தோன்றியது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆண்களுடனான தவறான பழக்கத்தை முழுவதுமாக கை விட்டேன்.

எனக்கு பிரச்னையே, மனைவியின் ஒரு செயல் தான். அவளுடன் வெளியே எங்கு சென்றாலும், அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர், ஆண்கள்; பதிலுக்கு இவளும் அவர்களை பார்ப்பாள். ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இதுவே வாடிக்கையாகி போனதும், அவளின் இந்த செயல் எனக்கு பிடிக்காமல் போனது. அவளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்த்தேன்.

ஒருநாள் மனைவியிடம், 'ஆண்கள் உன்னை, 'சைட்' அடித்தால், பதிலுக்கு நீயும் ஏன் அவர்களை பார்க்கிறாய். உனக்கு திருமணம் ஆகி விட்டது என்பது நினைவில் உள்ளது தானே? பொறுப்பாக நடந்து கொள்...' என்றேன்.

'எந்த தவறான நோக்கத்திலும் அவர்களை நான் பார்க்கவில்லை. அப்படி அந்த செயல் உங்களை காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இனி, உங்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ள மாட்டேன்...' என்று அழுது, சத்தியம் செய்தாள்.

சில காலம் நகர்ந்தது. ஆனால், மறுபடியும் ஆண்களை பார்க்கும் பழக்கம், அவளிடம் தென்படவே, சண்டை போட்டேன்; வசை சொற்களால் அவளை புண்படுத்தினேன். 'கடைசியாக நான் திருந்த வாய்ப்பு கொடுங்கள்...' என்றாள். நானும் மன்னித்தேன். ஆனால், இன்றளவும் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.

எந்த ஆணுடனும் எனக்கு தெரியாமல் பேசவோ, பழகவோ இல்லை. இருந்தாலும், மனைவியின் இந்த ஒரு செயல், மனம் நோக வைக்கிறது. சிறு வயதில், என் அம்மா வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்தார். அப்பாவின் இறப்பிற்கு பிறகும், அந்த பழக்கம் அரசல் புரசலாக இருந்து வருகிறது. என் தங்கை, கல்லுாரி படிக்கும்போது காதல் வயப்பட்டு, அந்த பையனோடு வீட்டை விட்டு ஓடினாள். போலீசில் புகார் செய்து, பத்திரமாக மீட்டு வந்தோம்.

ஒருவேளை, இதனால் உண்டான பாதிப்பு தான் மனைவியையும் அப்படி சந்தேகிக்க தோன்றுகிறதா அல்லது நான் திருமணத்திற்கு முன் ஆண்களுடன் தவறான பழக்கத்தில் இருந்ததால் இப்படி எல்லாம் தோன்றுகிறதா? என் மனம் வேதனைப்படுகிறது.

மனைவியின் இந்த பழக்கத்தை மாற்ற ஏதேனும் வழி உண்டா... இதிலிருந்து நான் மீண்டு வர வழி கூறுங்கள், அம்மா.

இப்படிக்கு,

அன்பு மகன்.


அன்பு மகனுக்கு —

பொதுவாகவே ஆண் - பெண்களுக்கு ஒரு குணம் உண்டு. அழகான எதிர்பாலினரை நாம் கண்டு ரசிக்க வேண்டும். எதிர்பாலினர் நம்மை கண்டு ரசிக்க வேண்டும். இது ஒரு பரஸ்பர அங்கீகாரம். இதில், காமம், 10 சதவீதம் இருக்கலாம்.

உன் அம்மாவின் திருமணபந்தம் மீறிய உறவு, தங்கையின் காதல் ஓட்டம், நீ, ஓரின சேர்க்கையாளனாக இருந்தது இவைகளை தாண்டி, மனைவி மீதான மிதமிஞ்சிய காதலே, அவளது பட்டிக்காட்டானின் மிட்டாய்கடை பார்வையை கண்டிக்க வைக்கிறது. ஒரு கணவன் இப்படிதான் நடந்து கொள்வான்.

மகள் பருவமடையும் போது, பெண்கள் ஏறக்குறைய வறண்டு போய் விடுவர். அவர்களின் கவனம் முழுக்க, மகளை பாதுகாப்பதிலேயே செலவழியும். நிழலில் சாதாரண கண்ணாடியாகவும், வெயிலில் கூலிங் கிளாஸாக மாறும் கண்ணாடியை உன் மனைவி சில பல நாட்கள் அணியலாம். பார்வை எங்கு போகிறது என, யாருக்கும் தெரியாது.

'ஒரு ஆண், ஒரு பெண்ணையும், ஒரு பெண், ஒரு ஆணையும், 14 நொடிகளுக்கு மேல் வெறித்தால், அது ஒரு பாலியல் வன்முறை...' என்கின்றனர், சில சமூகவியல் அறிஞர்கள். வெறித்தல், இரு பக்கமும் கூர்மையான கத்தி.

மனைவியை ஒரு பெண் மன நல நிபுணரிடம் அழைத்து போ. அவர் நான்கைந்து அமர்வுகளில் மனைவிக்கு தேவையான மன நல ஆலோசனைகளை வழங்குவார். மனைவியை ஒரு கண் மருத்துவரிடம் அழைத்து போய், வெறித்து பார்க்க ஏதாவது மருத்துவ காரணங்கள் உள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில், மனைவியின் பார்வையில் எந்த விஷமமான உள்நோக்கமும் இல்லை என, திடமாக நம்புகிறேன். இருவரின் மனமொத்த வாழ்க்கைக்கும், வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us