
அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம். பின்னணி பாட வந்த டி.எம்.சவுந்தர்ராஜன், 'முத்தைத்தரு பத்தித் திருநகை... பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம்?' என்றார். ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தவர்கள், பதில் சொல்ல தெரியாமல், மவுனமாக இருந்தனர்.
'அர்த்தம் தெரியாவிட்டால், இதை நான் எப்படி உணர்வோடு பாட முடியும்? அந்தப் பாடலை கேட்பவர்கள் தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும்...' என்றார்.
சுற்றி இருந்தவர்களின் மவுனம் தொடர்ந்தது. ஏனெனில், எந்த ஒரு பாடலையும், அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாட மாட்டார், டி.எம்.எஸ்., என்பது, அவர்களுக்கு தெரியும்.
பாடல் எழுதியிருந்த காகிதத்தை கீழே வைத்தவர், 'அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான், இந்த சவுந்தர்ராஜன்...' என்று சொல்லி, ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து வெளியே வந்தார்.
அவரது பிடிவாதம் அறிந்த படக்குழுவினர், செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
அப்போது, அருகிலிருந்த ஒருவர், 'வாரியார் சுவாமிகளை கேட்டால், இதன் பொருள் புரியும்...' என்றார்.
'அப்படியா...' என்ற டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டிற்கு புறப்பட்டார். வரவேற்றார், வாரியார்.
பணிவோடு தன் அருகில் வந்தமர்ந்த, டி.எம்.எஸ்.,க்கு, அப்பாடலின் பொருளை விளக்கினார், வாரியார்.
முத்தைத்தரு பத்தித் திருநகை - வெண்முகத்தை நிகர்த்த, அழகான பல் வரிசையும், இளநகையும் அமைந்த...
அத்திக்கு இறை - தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...
சத்திச் சரவண - சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...
முத்திக்கொரு வித்துக் குருபர - மோட்சத்துக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே...
இப்படியாக ஒவ்வொரு வரிக்கும் பொருளை, விளக்கமாக எடுத்துச் சொன்னார், வாரியார்.
அதை கவனமாக கேட்ட பிறகே, அந்த பாடலை பாடினார், டி.எம்.எஸ்.,
அதே பாடலை, வாரியாரின் உயிரற்ற உடல் அருகில் அமர்ந்து பாட வேண்டிய சூழ்நிலை, அப்போது வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை, டி.எம்.எஸ்., வாரியாரின் இறுதிச் சடங்கு, வேலுாரை அடுத்துள்ள, அவரது சொந்த ஊரான, காங்கேயநல்லுாரில் நடைபெற்ற போது, அந்த பாடலை உருக்கத்துடன் பாடினார், டி.எம்.எஸ்.,
லண்டன் சென்றிருந்த வாரியார், சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நவ., 7, 1993ல், வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே, இறந்து போனார்.
தன் இறுதிக் காலம் நெருங்குவதற்கு பல காலம் முன்பே, 'என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை, என் அப்பன் முருகப்பெருமான் என்றோ எனக்கு சொல்லி விட்டான். தன் வாகனமான மயிலை அனுப்பி, எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான், என் அப்பன் முருகன்...' என்று கூறியிருந்தார், வாரியார்.
அவர் சொன்னபடியே நடந்தது.
வானத்தில் பறக்கும்போதே, அவர் உயிர் பிரிந்து, இறைவனோடு இரண்டற கலந்தது.
நடுத்தெரு நாராயணன்