
பேசும்போது, மிகவும் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். இதைப் பற்றிய தகவலை, விவரிக்கும் வரலாறு இது:
ஒரு சமயம், கலைமகளின் அருளை முழுமையாகப் பெற்ற, கம்பர், சோழ நாட்டில் இருந்து புறப்பட்டு, போய் கொண்டிருந்தார். கைகளில் காசு, பணம் இல்லை. கம்பரின் அருமை பெருமை அறிந்து, ஆதரிப்பவர்களும் இல்லை.
போகும் வழியில் ஓர் ஊரில், வேலி என்பவள், ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்ததைக் அறிந்தார், கம்பர்.
அதாவது, வேலி என்பவள், ஒரு வீடு கட்ட முயற்சி செய்தாள். ஆனால், என்ன காரணத்தாலோ தெரியவில்லை, வீட்டின் புறச்சுவர் இடிந்து கொண்டே இருந்தது. கட்டுமான வேலையில் திறமைசாலிகள் பலர் முயன்றும், சுவர் எழும்பி, கட்டி முடிக்கும் வேளையில், அப்படியே முழுமையாக சரிந்து விழுந்தது.
'இந்தச் சுவரை நல்லவிதமாகக் கட்டிக் கொடுப்பவருக்கு, 8 படி நெல் கொடுப்பேன்...' என்று விளம்பரப்படுத்தினாள், வேலி.
அந்தப் பெண்ணின் விளம்பரம், கம்பர் காதில் விழுந்தது. 8 படி நெல் என்பது, அந்த காலத்தில் பெரும் செல்வமாக மதிக்கப் பெற்றது. ஆகையால், கைகளில் காசு, பணம் இல்லாத நிலையில் இருந்த கம்பர், 'இந்தச் சுவரை நான் கட்டித் தருகிறேன்...' என்று சொல்லி, சுவர் கட்டும் வேலையில் இறங்கினார்.
மண் பிசைந்து, குழைத்து, கற்களை அடுக்கிப் பூசி, சுவரைக் கட்டி முடித்தார். சுவரும் வழக்கப்படி விழத் துவங்கியது. அதைப் பார்த்த கம்பர், 'வேலி தரும் கூலி, நெற் கொண்டு போம் அளவும் நில்லாய் நெடுஞ்சுவரே...' என, பாடினார்.
சுவர் நின்று விட்டது; விழவில்லை.
அதைப் பார்த்த வேலி, ஆச்சரியப்பட்டு, 8 படி நெல்லைக் கம்பரிடம் கொடுத்தாள். நெல்லைப் பெற்ற கம்பர் நகரத் துவங்கினார். 'தொப்'பென்று சுவர் விழுந்து விட்டது.
அதிர்ச்சி அடைந்தாள், வேலி.
கம்பரோ கலங்கவில்லை. கலைமகளைத் தியானித்து, பழையபடியே சுவரை எழுப்பி, 'நெற் கொண்டு போனாலும் நில்லாய் நெடுஞ்சுவரே...' என, பாடலை மாற்றிப் பாடினார்.
சுவர் விழவில்லை; உறுதியாக நிலை பெற்று நின்றது.
அனைவரும் வியந்தனர்.
சொல்லும் சொல்லுக்கு, பேசும் பேச்சுக்கு வலிமை உண்டு, சக்தி உண்டு என்பதை, விளக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
அமாவாசையும், திங்கட் கிழமையும் இணையும் நாளில் அரச மரத்தை சுற்றி வழிபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.