
கமல் படத்தில், 80 - 90ன் நாயகர்கள்!
விக்ரம் படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராஜ் என, இப்போதைய இளவட்ட நடிகர்களை கூட்டணி சேர்த்து நடித்த, கமலஹாசனுக்கு அப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில், 'ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும், இந்தியன் - 2 படத்தில், 1980 - 90களில் முன்னணியில் இருந்த, சத்யராஜ், கார்த்திக் ஆகியோருடன் கூட்டணி அமைத்து நடிக்கப் போகிறேன்.
'இவர்கள் மட்டுமின்றி, மேலும் சில முன்னாள், 'ஹீரோ - ஹீரோயினி'களையும், இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க வைப்பேன். இனி, ஜூனியர் - சீனியர் என, என்னுடன் போட்டி போட்டு நடிக்கக் கூடிய திறமையான நடிகர்களை தேடிப் பிடித்து, என் படங்களில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், கமல்.
— சினிமா பொன்னையா
சென்னையில், 'ரெஸ்டாரன்ட்' நடத்தும், சிம்ரன்!
வட மாநில நடிகையான, சிம்ரன், திருமணத்திற்கு பிறகு சென்னையிலேயே, 'செட்டில்' ஆகிவிட்டார். அவ்வப்போது படங்களிலும் நடித்தும் வருகிறார். மேலும், சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை வைத்து, சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், 'கோட்கா சிம்ரன்' என்ற பெயரில், 'ரெஸ்டாரன்ட்' நடத்தி வருகிறார்.
இந்த, 'ரெஸ்டாரன்டு'க்கு அடிக்கடி சிம்ரனும், 'விசிட்' அடிப்பதால், அவரை காண வேண்டும் என்பதற்காகவே, இளைஞர் பட்டாளம் படையெடுக்கிறது. இதனால், சமீப காலமாக சினிமாவை விட, இந்த, 'ரெஸ்டாரன்ட்' மூலம் தான் பெரிய அளவில் சம்பாதித்து கொண்டிருக்கிறார், சிம்ரன்.
— எலீசா
இளவட்ட நடிகையரை உஷார் பண்ணும், ஆண்ட்ரியா!
ஆரம்பத்தில் இருந்தே நிர்வாண காட்சிகளில் ஆட்சேபனையின்றி, துணிந்து நடித்ததால், அதன்பிறகு, ஆண்ட்ரியாவை நடிக்க வைத்த, பல இயக்குனர்கள், அவரை நிர்வாணமாக நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினர். அது இப்போது, பிசாசு - 2 படம் வரை தொடர்கிறது. இந்த, 'இமேஜில்' இருந்து தப்பிக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார்.
யாராவது இளவட்ட நடிகையரை நிர்வாணமாக நடிக்க சொல்லி, இயக்குனர்கள் வற்புறுத்தும் தகவல், தன் காதுக்கு வந்தால், உடனே மேற்படி நடிகையரை தொடர்பு கொள்கிறார்.
'தப்பித் தவறி கூட, இது போன்ற காட்சிகளில் நடித்து விடாதீர்கள். அதன்பின், உங்களிடத்தில் கதை சொல்ல வரும் ஒவ்வொரு இயக்குனர்களுமே, ஒரு காட்சியிலாவது நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவர். எனக்கு ஏற்பட்ட இந்த பிரச்னை, உங்களுக்கு வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதை சொல்கிறேன்...' என்று, அந்த நடிகையரை உஷார் படுத்துகிறார், ஆண்ட்ரியா. ஆனால், இதை கேள்விப்பட்ட, சில இயக்குனர்கள், ஆண்ட்ரியா மீது, 'செம காண்டில்' இருக்கின்றனர்.
— எலீசா
'மெகா ஹீரோ'களை கலாய்க்கும், யோகிபாபு!
காமெடி காட்சிகளில் முன்வரிசை, 'ஹீரோ'களை, கலாய்ப்பதில் அடக்கி வாசித்து வந்த யோகிபாபு, தர்பார் படத்தில், ரஜினியுடன் நடித்தபோது, 'காமெடி காட்சிகளில் தாராளமாக கலாய்க்கும் போது தான், ரசிகர்களை குஷிபடுத்தும்; வாய் விட்டு சிரிப்பர். அதனால், உன்னால் முடிந்தவரை என்னை கலாய்த்துக்கொள்...' என்று, யோகிபாபுவுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார், ரஜினி.
அப்படி கலாய்த்த காட்சிகள், ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றதால், இப்போது எந்த, 'ஹீரோ'களையும் விட்டு வைப்பதில்லை, யோகிபாபு.
'வாரிசு படத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு செமத்தியாக, விஜயை கலாய்த்துள்ளேன். எந்த காமெடியன்களும் ஓவராக, விஜயை கலாய்த்ததில்லை என்பதால், இந்த படத்தின் காமெடி காட்சிகளை பார்த்து விட்டு, விஜய் ரசிகர்கள், எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பரோ என்று மனதளவில் கலவரத்தில் உள்ளேன்...' என்கிறார், யோகிபாபு.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* ஜெயம்ரவி நடிக்கும், 30வது படத்தில், பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
* இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'ஹீரோ'வாக நடித்த படங்கள், அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதனால், நடிப்பில் இருந்து விலகி, முன்னணி, 'ஹீரோ'களின் படங்களுக்கு இசையமைத்து, சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிமாக இருக்கிறார்.
* தெலுங்கில், அல்லு அர்ஜுன் நடிக்கும், புஷ்பா - 2 படத்தில், வில்லனாக நடிக்கும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அவ்ளோதான்!