PUBLISHED ON : ஆக 28, 2022

பரபரப்பான காலை வேளை -
தொடர் வேலைகள் முடிந்தபோது, அவளுக்கு ஒரு கப் காபி வேண்டியிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். அலுவலக வண்டி வருவதற்கு, இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சூடான, சுவையான காபி தயாரித்து பால்கனிக்குப் போய் நின்றாள். அப்போது, மேலே தடவிச் சென்ற காற்று, அவ்வளவு இன்பமாய் இருந்தது.
கண்களை மூடி காபியையும், காற்றையும் ரசித்தாள்.
''குட் மார்னிங் மலர்...'' என்று, பின்னால் வந்து கழுத்தில் முத்தமிட்டான், மோகன்.
''குட் மார்னிங். என்ன அதிசயம், இன்னும் மணி, 8:30 ஆகலையே... உங்க துயில் எழும் நேரம்?'' என்று புன்னகைத்தாள்.
''இன்னிக்கு, தடா வரைக்கும் போகணும், மலர். பேக்டரி விசிட். இன்னும் அரைமணி நேரத்துல வண்டி வரும்.''
''ஓ.கே., டிபன் ரெடி!''
''வினி கொஞ்சம், 'டிஸ்டர்ப்டா' இருக்கா, கவனிச்சியா?''
''ஆமாம்.''
''என்னவாம்?''
''அவள் வகுப்புல படிக்கிற ஒரு பெண் குழந்தையை, சீனியர் பையன் சீண்டியிருக்கான். அந்தப் பொண்ணு ரொம்ப பயந்து போயி, ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு அழுகிறாளாம். வினிக்கு ரொம்ப பிடிச்ச பெண்ணாம் அது.''
''அவளுக்காக இவள் ஏன், 'அப்செட்'டா இருக்கா. இந்த சொசைட்டியே இப்படித்தானே இருக்கு. நாம என்ன செய்ய முடியும், அவளுக்கு எடுத்துச் சொல்லி நார்மலாக்கு மலர்.''
''என்ன சொல்றீங்க, மோகன்... சமூகம்கிறது யாரு, நாம எல்லாரும் தானே... நெறிமுறைகளோட ஒவ்வொருத்தரும் இருக்கணும்ன்னு பேசாம, இது அப்படித்தான் இருக்கும்ன்னு ஈசியா எடுத்துக்கறது கரெக்டா?''
''வேற வழி, பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையான ஆண்கள் இப்படித்தான் மலர். நீயும், 'அப்செட்' ஆயிடாதே. இன்னிக்கு, 'புராஜெக்ட்' முடிக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தேன்ல்ல...
''பை தி வே, வினோத்கிட்ட படம் கூட்டிகிட்டு போறேன்னு சொன்னேன். எதிர்பாராத வேலை வந்ததால, நாளைக்குப் போகலாம்ன்னு சொல்லிடு. வீக் எண்ட் அவனை கூட்டிக்கிட்டு போறேன்,'' என்றபடியே, அவளை இழுத்து, அழுத்தமாக முத்தமிட்டான்.
சரேலென விலகினாள்.
''என்ன படம்?''
''தி அதர் மென். ஹாலிவுட் மூவி. 'சயின்ஸ் பிக் ஷன்' கலந்தது.''
''அதைப்பத்தி படிச்சேன். ஏன் வினோத்தை...'' என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் செல்லும் வண்டியின் ஒலி கேட்டது.
''அப்புறம் பேசலாம். வர, 'மிட் நைட்' ஆகும். டேக் கேர் மலர்,'' என்று விரைந்தான்.
தன் மேல் இப்போது விழும் காற்று, அனலாக இருப்பதாக உணர்ந்தாள், மலர்.
அலுவலக வேலை மனதை வேறு பக்கம் முழுமையாக இழுத்துக் கொண்டது. புதிய டெக்கிகளான, ஷோபி மற்றும் சிதாரா இருவரும், அற்புதமாக, 'ரேபிட் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், எண்ட் புராடெக்ட்' என்று கலக்கியிருந்தனர்.
அறிவுத்திறன், வேகம், துல்லியம் என்று, அந்த இளம் இன்ஜினியர்கள் அபாரமாக வேலைக்குள் இறங்கி முடித்தது, மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தான் சொன்னதை அவ்வளவு கருத்தாக உள்வாங்கி சிறப்பாக அமைத்தது, பெருமையாகவும் இருந்தது.
''இன்னிக்கு லஞ்ச் நேரத்துல, ஸ்வீட் ஆர்டர் பண்ணலாம் கேர்ள்ஸ்,'' என்று சொல்லி அவர்களுக்குப் பிடித்த இனிப்பை வரவழைத்தாள்.
''தாங்க் யூ மேம். ரொம்ப டேஸ்ட்டி,'' என்று ஜிலேபியை விழுங்கினாள், சிதாரா.
மெல்லிய புன்னகையுடன் பாசந்தியை எடுத்தாள், ஷோபி.
''என்ன ஷோபி, ஆர் யூ ஆல்ரைட்?''
''மூட் சரியில்லே மேம்.''
''தெரியுதே... சொல்லும்மா, என்ன ஆச்சு?''
''ஹெச்.ஆர்., ராமானுஜம் இருக்காரே... அந்த ஆளு, இவகிட்ட தரக்குறைவா நடந்துக்கிறார், மேம். சும்மா அடிக்கடி கூப்பிடறது, இளிக்கறது, தப்பு ஜோக்ஸ் சொல்றது... அன்னிக்கு லிப்ட்ல ரொம்ப பக்கத்துல வந்து நின்னு தப்பான விஷயம் பேசியிருக்கார்.
''கேவலமா இருக்கு. 45 வயசு ஆள், சின்னப் பொண்ணுகிட்டே... அவருக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்குன்னு சொல்றாங்க மேம்,'' என்று கோபத்துடன் படபடத்தாள், சிதாரா.
எழுந்து வந்து இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள், மலர்.
''புரியுது... இது எல்லா பெண்களுமே வாழ்க்கையில் எதிர்கொள்கிற பிரச்னை தான். ஏதோ ஒரு வயசுல, ஒவ்வொரு பெண்ணும் இந்த அத்துமீறலை எதிர்கொள்கிறாள். ஷோபி, மொதல்ல நீ தைரியமா இருக்கணும். இதே ராமானுஜம், நம் சிதாராகிட்டே இதே மாதிரி, 'பிஹேவ்' பண்றானா?''
''இல்ல மேம்... என்கிட்ட வாலாட்டினா, வாலை நறுக்கிடுவேன். நான் கராத்தே படித்தவள்,'' என்று படபடத்தாள், சிதாரா.
''கிரேட். ஷோபி, நீயும் தைரியமா இருக்கணும். அவனைப் பார்த்து பயப்படறதை விடு. தைரியமா நேருக்கு நேரா, 'என்ன வேணும் உனக்கு'ன்னு கேளு. சரியான பதிலடி கொடு. மேற்கொண்டு அவன் பிரச்னை பண்ணினான்னா, உதவிக்கு, நான் வரேன். சரியா ஷோபி?''
''சரி மேம். ஆனால், பயமா இருக்கு,'' என்று கண்கள் கலங்க விம்மினாள், ஷோபி.
''இந்த வேலை எங்க குடும்பத்துக்கு ரொம்ப முக்கியம். அதுல ஏதாவது பிரச்னைன்னா எல்லாருமே பட்டினி தான் கிடக்கணும்.''
''ஓ நோ... இந்த பயம் தான் இப்படிப்பட்ட பலரை உருவாக்குது, ஷோபி. அப்படி எதுவும் நடக்காது. முளையிலேயே கிள்ளிட்டா இதெல்லாம் அடங்கிடும். நான் பார்த்துக்கிறேன்.''
''சரி... தாங்க் யூ மேம்,'' என்று கண்களை துடைத்துக் கொண்டவளை, ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.
அன்றைய வேலைகள் முடிந்து, முன்னதாகவே உறங்கப் போய் விட்டனர், குழந்தைகள். அவளும் தனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து, 20 பக்கங்கள் வாசித்தாள். லுாயிஸ் சி.கே.,யின் புத்தகம். அதன் ஒரு வரியை, மனது மறுபடி மறுபடி யோசித்துக் கொண்டிருந்தது.
'நீங்கள் காயப்படுத்தியதாக ஒரு நபர் உங்களிடம் சொன்னால், நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று, உங்களால் முடிவு செய்ய முடியாது...'
கிட்டத்தட்ட நள்ளிரவில் வந்தான், மோகன்.
''வயிறு கொஞ்சம் கனமா இருக்கு, மலர். ஒண்ணும் வேணாம், படுக்க வேண்டியது தான்,'' என்று, இரவு உடையுடன் படுக்கையில் உட்கார்ந்தான்.
''நாரத்தங்காய் வேணா சாப்பிடுங்க மோகன்... தரட்டுமா?''
''சரி... இன்னிக்கு எல்லாரும், 'மூவி'க்கு போனீங்களா?''
''ஆமாம்... உங்களை, 'ரீச்' பண்ண முடியல. பசங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. அந்த படம், இன்னிக்கு கடைசி நாளாம். உங்களுக்கு, 'மெசேஜ்' அனுப்பிட்டு, நானே கூட்டிகிட்டுப் போயிட்டேன்.''
''என்ன... வினியுமா கூட்டிகிட்டுப் போனே?''
''ஏன்? 'சயின்ஸ் பிக் ஷன்' படம். ரெண்டு பேருமே படிப்புல ஆர்வம் உள்ளவங்க. படம், ரொம்ப நல்லா இருந்தது. சிறுகோள் ஒண்ணு, பூமி மேல மோத வருகிறது. அதை தடுக்க விஞ்ஞானிகள் செய்கிற முயற்சிகள், பிரயத்தனங்கள் தான் படம். அபாரமான கற்பனை. பிரமாதமான மேக்கிங். அந்தப் படம், எனக்கே ரொம்ப பிடிச்சுது, மோகன்!'' உற்சாகமாகச் சொன்னாள்.
புருவம் உயர்த்தி, ''வினிக்கு ஏன் இந்தப் படம் எல்லாம்? எப்பவும் தமிழ் செய்யுள், உரைநடைன்னு படிக்கிறவள். செடிக்கு தண்ணீர் விடுவது, துளசியை சுத்துவது, கோலம் போடறதுன்னு இருக்கிற குழந்தை.
''நாளைக்கு கல்யாணம் பண்ணிகிட்டு வாழறதுக்கு என்னென்ன வேணுமோ அதெல்லாம் தெரிஞ்சாலே போதுமே... ஏன், அவளைக் குழப்பணும் மலர்? வினோத்தை மட்டும் தான் கூட்டிகிட்டு போகலாம்ன்னு இருந்தேன்.''
''என்ன பேசறீங்க, மோகன்?'' என்றாள்.
மூச்சுக்காற்று வெப்பத்துடன் வேகமாக வெளிவந்தது.
''பிராக்டிகலா பேசறேன். சிம்பிளா இருக்கா வினி... பாதுகாப்பா வீட்டில் இருக்க என்ன தெரியணுமோ அது போதும். தேவை இல்லாமல் அவளை ஹாலிவுட் படங்களுக்கு ஏன் கூட்டிட்டுப் போகணும்? வன்முறை, செக்ஸ், காஸ்மாலஜின்னு... ஓகாட்... நீ யோசிக்கணும் மலர்!''
''நீங்க பேசறது எல்லாமே ரொம்ப தப்பு. பெண் குழந்தை என்ன தனியான பிறவியா... வீடுதான் அவளுக்கு சிறையா... பாதுகாப்பா வாழறதுக்கு மட்டும் தான் அவள் பிறந்திருக்கிறாளா...
''எல்லாருக்குமான பூமி இது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'ன்னு தமிழ்ல படிச்சதால, அது உங்களுக்கு இளக்காரமா போய் விட்டதா? புழு, பூச்சி, பாக்டீரியான்னு எல்லா உயிர்களுக்கும் போலவே பெண்ணுக்கும் இங்கே வாழ முழு உரிமை உண்டு.
''கல்யாணம்தான் பெண்ணோட பிறவிப்பயன்னு நினைக்கறது எவ்வளவு கொடுமை... அதைச் சுத்தி தான் அவளை வளர்க்கணும், அவள் படிப்பு இருக்கணும், அவள் விருப்பங்கள் இருக்கணும்கிறது ஆதிக்கம், மோகன். அப்பட்டமான மனித உரிமை மீறல்.
''வீட்டுல அடிமை வாழ்க்கை; வெளியில் போனா பாலியல் தொந்தரவு. இது என்ன அநியாயம்? வினிக்கு எல்லாம் தெரியணும்; அவள், தன் ஆசைகளை வளர்த்துக்கணும். தன் லட்சியம் என்ன என்ற தெளிவை நோக்கி அவள் நடக்கணும். அதை நனவாக்க எப்படி எல்லாம் உழைக்கணும்ன்னு, அவள் யோசிக்கணும்.
''வினோத் எப்படி தன் வாழ்க்கையை அமைச்சுக்க விரும்புவானோ, அதேபோல, வினியும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தன் நாட்களை உருவாக்கிக்கணும். இந்த சமூகம் எப்படி இருக்கு, நேரிடையாவும், மறைமுகமாவும் தன் சர்வாதிகாரத்தை எப்படி செலுத்துதுன்னு அவள் புரிஞ்சுக்கணும்.
''யாரும் செய்யாததையா அவன் செஞ்சுட்டான் என்று, அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குகிற வன்மம், அவளுக்குப் புரியணும். ஒரு பெண்ணை, ஆண் உற்று நோக்குவதே குற்றம். ஆனால், இந்த சொசைட்டி எப்படி இருக்கு...
''ஒரு பெண், தெருவில் சுதந்திரமாக நடந்து செல்ல முடியவில்லை என்றால், இந்த சமூகம் எவ்வளவு அபாயகரமாக இருக்கு. பழி என்று ஒரு படம் வந்திருக்கு. காதலுக்கு சம்மதிக்காத பெண் மீது ஆசிட் வீசும் பையன், அதை எதிர்கொள்ளும் பெண், அவனைத் தேடி அவள் கொடுக்கும் தண்டனை...
''வினி, வினோத் இரண்டு பேரையும் அந்தப் படத்துக்கு நான் அழைத்துச் செல்வேன். அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். இது, முட்காடுகளின் தேசம். இங்கே தான் பட்டாம்பூச்சிகளும் வாழ வேண்டியிருக்கு; அதை பாதுகாக்கிற தட்டாரப் பூச்சிகளும் வாழ வேண்டியிருக்கு.
''ஒரு ஒப்புமைக்காகச் சொன்னேன். நல்ல துாக்கத்திற்குப் பிறகு யோசியுங்கள். நான் சொன்னது தெளிவாகப் புரியும். குட் நைட்!''
விளக்கை அணைத்து, குழந்தைகளுடன் படுத்துக் கொண்டாள், மலர்.
வி. உஷா
