
அன்புள்ள அம்மா —
நான், பிளஸ் 2 முடித்த மாணவி. எனக்கு அம்மா மட்டும் தான்; கூலி வேலை செய்கிறார். அப்பா இறந்து, ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்த ஐந்து ஆண்டும், என்னையும், தங்கையையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார், அம்மா.அம்மாவிற்கு, 39 வயதாகிறது. தங்கை, 10ம் வகுப்பு படிக்கிறாள். என்னிடம், 'எம்.பி.பி.எஸ்., படி, செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்கிறார், அம்மா.அம்மாவின் கஷ்டத்தை குறைக்க, மூன்று ஆண்டு படிக்கும் டிகிரி முடித்து, வேலைக்கு செல்லலாம் என்று நினைக்கிறேன், நான். இன்னும், இரண்டு ஆண்டுகளில் தங்கையையும் கல்லுாரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அம்மா ஒருவராக செலவை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவாங்க, அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க நினைக்கிறேன். ஆனால், எம்.பி.பி.எஸ்.,யே படி என்கிறார், அம்மா. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வழியை கூறுங்கள் அம்மா. — இப்படிக்கு,ரஞ்சனா.
அன்பு மகளுக்கு
உன் அம்மா செய்யும் கூலி வேலைக்கு, அதிகபட்ச தின சம்பளம், 800 ரூபாய் இருக்கும். மாதம் 24 ஆயிரம். ஒரு ஆண்டுக்கு, 2.88 லட்சம் ரூபாய். குடும்ப செலவு போக, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் சேமிக்க முடியும்.எம்.பி.பி.எஸ்., படிக்க, ஒரு கோடி. முதுகலை மருத்துவ படிப்பு படிக்க ஒரு கோடி. பிளஸ் 2க்கு பிறகு, எட்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். மருத்துவத்தில் மக்கள் அறிந்த பிரபல மருத்துவராக, 10 ஆண்டுகள். ஒரு மருத்துவரின் வாழ்க்கை, 40 வயதுக்கு பிறகு தான் துவங்குகிறது. சேவை மனோபாவம் இல்லாதோருக்கு மருத்துவ படிப்பு ஒரு நரகம்.உன்னை அதைரியப்படுத்தச் சொல்லவில்லை. கூலி வேலை செய்யும் அம்மாவால், உன்னை மருத்துவம் படிக்க வைக்க முடியாது. வேண்டுமானால், 'நீட்' தேர்வுக்கான, 'சிலபஸ் மெட்ரியலை' வைத்து, ஆறு மாதம் படி. பின், தேர்வு எழுது. 600க்கு மேல் மதிப்பெண் எடுத்து விட்டால், அதிக கல்விக் கட்டணம் இல்லாமல், நீ மருத்துவம் படிக்கலாம். அரசு பள்ளியில் படித்தோருக்கு தனி ஒதுக்கீடு உண்டு.
நீ, அரசு பள்ளியில் படித்தவளா? அரசு பள்ளி இட ஒதுக்கீட்டுடன், பணக்காரர்களின் அறக்கட்டளை உதவி இருந்தால், நீ மருத்துவர் ஆகலாம்.'நீட்' தேர்வில் நீ, போதிய மதிப்பெண் பெறாவிட்டால், வேறு அதிக சம்பளத்தை பெறும் படிப்புகள் ஆயிரம் உள்ளன. அவைகளுக்கு, 'நீட்' தேவையில்லை. உன் அம்மாவுக்கு மருத்துவ படிப்பு பிடிக்கும். ஆனால், உனக்கு என்ன வகை படிப்பு பிடிக்கும் என, ஆழமாக யோசி. நீ விரும்பியதை படிப்பதற்கான சாத்தியகூறுகளை ஆராய். சாத்தியக் கூறுகள் உனக்கு சாதகமாய் இருந்தால், அந்த படிப்பை தேர்தெடுத்து படி.யதார்த்தத்தை மீறிய கனவில் இருக்கும் அம்மாவுக்கு, தகுந்த கருத்துக்களை கூறி, அவரை நிகழ் உலகத்துக்கு மீட்டு வா.நான், உனக்கு ஒரு யோசனை கூறுகிறேன்...
10 மருத்துவர்களுக்கு சமமான, இளநிலை செவிலியர் படிப்பை தேர்ந்தெடு. ஆண்டு கல்விக் கட்டணம், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் வரை. நான்கு ஆண்டுகளில் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, உயர் சம்பளம் கிடைக்கும் மருத்துவமனை பணிக்கு போ.உன் தங்கை, பிளஸ் 2 முடித்துவிட்டு, 'நீட்' தேர்வு எழுத முயலலாம். அரசு பள்ளி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், உன் தங்கையை மருத்துவ படிப்பில் சேர்க்க பார். அக்கா, தங்கை இருவரில் ஒருவர், அம்மாவின் மருத்துவ கனவை நிறைவேற்றுங்கள். சேணம் பூட்டிய குதிரையாய் இல்லாமல், சகல திசைகளிலும் கண்களையும், மனதையும் செலுத்தி பார். ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கொட்டி குவிந்து கிடக்கின்றன. சாதுர்யமாக துாண்டில் போட்டு, விண் மீன்களை பிடி மகளே!
உன் அடுத்த தலைமுறை கல்வியிலும், செல்வத்திலும் செழித்து விளங்கட்டும்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

