PUBLISHED ON : அக் 09, 2022

'என்ன தெரியும் உனக்கு... வாய மூடிகிட்டு இரு... உன்கிட்டே யார் கருத்து கேட்டா?' புவனாவிடம், அந்த வீடே கேட்கும் கேள்விகள் இவை.அவள் மனம் புழுங்கும்; கண்ணாடியாய் உடையும்; சிதறுகாயாய் சிதறும்.இத்தனைக்கும், புவனா எதிலும் குறை வைத்தவளில்லை. மெத்தப் படித்தவள், பண்பாடாய் நடந்து கொள்பவள், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்.திவாகருக்கு சொந்த பிசினஸ், பிரபல மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வினியோகம் செய்யும் உத்தியோகம். வியாபாரத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, மனைவியிடம் நடந்து கொள்வான். அவன் அப்பா, ஆடிட்டர் ஆபீசில் வேலை பார்த்தவர். எந்தக் கோப்புகளையும் திருப்பி அனுப்பியே பழக்கப்பட்ட வேலை. ஓய்வுக்குப் பிறகும் வீட்டில் எதிரொலிக்கிறது.காலை டிபனுக்கு தொட்டுக் கொள்ள சட்னி தயார் செய்வாள், புவனா.'ஏன் சாம்பார் வெக்கக் கூடாதா?' என்பார்.சாம்பார் வைக்கும் நாளில், 'சாம்பாரை விட்டால் வேற தெரியாதா உனக்கு?' என்பார்.புவனாவின் நாத்தி, பாவனாவிற்குக் கூட, அவள் இளக்காரம் தான்.பிளஸ் 1 படிக்கும் பாவனாவுக்கு, கணித பாடத்தில் நிறைய சந்தேகங்கள் வரும். ஆனால், அண்ணிக்கு அது பற்றியெல்லாம் அவ்வளவாக தெரியாது எனும் நினைப்பு.தான், எம்.காம்., பட்டதாரி என்று, ஏன் இவள் உணரவில்லை என்று பொருமுவாள், புவனா.பிறந்த வீட்டில் எப்படியெல்லாம் தாங்கினர். ஒரு குட்டி மகாராணியைப் போல் உலா வந்தவள். ஆனால், இங்கு எல்லாமே தலைகீழாக அல்லவா போய் விட்டது. உருண்டு வரும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்வாள்.மனம் ரொம்பவும் பாதிக்கப்படும்போது, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் அத்தை படத்தை பார்ப்பாள். இவளுக்கு அத்தையின் படம், பாடமாகத் தெரியும்.'இந்த வீட்ல, 30 வருஷம் எப்படி அத்தை, குப்பை கொட்டினீங்க. நீங்க, ரொம்ப சாமர்த்தியசாலி. என்னால முடியல...' என்று விம்முவாள்.'நான் தப்பித்தேன். நீ சிக்கிக் கொண்டாய் என்ற எகத்தாளமா... இதுதான் என் கடைசிச் சிரிப்பு என்ற விரக்தியா... எதையும் சிரித்தே சமாளிக்கக் கற்றுக் கொள் என்ற வாழ்வின் தத்துவமா...' என, எதுவுமே புரியாது புவனாவிற்கு. ஆனாலும், அத்தையைப் பார்ப்பதில் ஆறுதல்.''எங்கடீ போய் தொலைஞ்சே புவனா... 'ஹீட்டரை' போடு, பிசினசை முழுசா தலை முழுகணும். இனிமே எங்கேயாவது மூட்டை துாக்கிதான் பொழைக்கப் போறேன்,'' வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி, கத்தியவாறு உள் நுழைந்தான், திவாகர்.அவன் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நிலைமையை புரிந்து கொண்டாள், புவனா.''வாங்க, குளிக்கணுமா... சுடு தண்ணி போடறேன், குளிச்சிட்டு சாப்பிட வாங்க.''''ஆமா, சாப்பாடு தான் எனக்கு கொறைச்சலாக்கும்.''சூடு கொஞ்சமும் குறையாமல் சுடுநீரைத் தேடிப் போனான், திவாகர். பத்தே நிமிடங்களில் வெளியில் வந்தான்.''இந்த டிரஸ் உங்களுக்கு நல்லாயிருக்கும் போட்டுக்கோங்க,'' என, மாற்று உடை நீட்டினாள்.கடமையே என்று ஒவ்வொன்றையும் செய்தான், திவாகர்.''இட்லி, உங்களுக்குப் பிடிச்ச வேர்க்கடலை சட்னி.''''வேணாம்.''''ரெண்டு இட்லி?''என்ன நினைத்தானோ, வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். நான்கு இட்லிகளைத் திணித்தாள், புவனா.ஹாலுக்கு வந்ததும், அவன் அப்பா செய்தித்தாளிலிருந்து தன்னை விடுவித்து, ''என்ன ஆச்சு, நீ மலையா நம்பியிருந்த ஜெய்மாதா ஆஸ்பிட்டல் ஆர்டரை ஏத்துக்கிட்டாங்களா?'' என்று பதமாக வினவினார்.''என்னை ஒண்ணும் கேட்காதீங்க, இவங்களும் காலை வாரிட்டாங்க. மொத்தமா என் பிசினஸ் காலி. வேறதான் யோசிக்கணும்.''''அதுக்குத்தான் நான் ஏழெட்டு வருஷத்துக்கு முன்னமே தலைபாடா அடிச்சுக்கிட்டேன், 'பிசினஸ் வேணாம், காலம் சரியில்லே, ஏதாவது வேலை தேடிக்கோ'ன்னு. நீதான் கேக்கலே, எப்படியோ போ,'' என்றவர், எழுந்து, கைலியிலிருந்து பேன்ட்டிற்கு மாறி, வெளியில் கிளம்பினார்.'ரெக்ரியேஷன் கிளப்' போவார், சீட்டாடுவார், சில நேரம் குடிக்கவும் செய்வார்.தனிமைப் பட்டான், திவாகர். பெயருக்கு செய்தித்தாளை மேய்ந்த பின், மொபைல்போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, படுக்கையறைக்குள் நுழைந்தான், திவாகர். அவனை பின் தொடர்ந்தாள், புவனா.'ஏசி'யை ஓட விட்டாள். சுரத்தில்லாமல் மனைவியைப் பார்த்தான், திவாகர்.''என் நகைகளை பயன்படுத்திக்கங்க. 50 - 60 பவுன், பீரோவுலதானே கெடக்கு. 'பிசினஸ் டெவலப்' ஆவட்டும்.''''ஏன்... பொம்மனாட்டி கைய எதிர்பார்க்குற அளவு, திவா தரம் தாழ்ந்துட்டானா?''சுருக்கென்று, கடுமையாக தொடுக்கப்பட்ட வினாவாக இருந்தாலும், ''அதுக்கில்லீங்க... என் கருத்தோ, யோசனையோ தான் உங்களுக்குப் பிடிக்காது. நகைங்க என்ன பாவம் பண்ணுச்சு?'' சொல்லும்போதே புவனாவின் குரல் உடைந்து, கண்கள் குளமாகின.''அப்போ நீ, பாவம் பண்ணினவளா?'' அதே வெடுக் ரகத்தில், திவாகரின் அடுத்த கேள்வி.''ஆமாங்க... உங்க பார்வையில, நான் பாவம் பண்ணினவ தான். என்ன செய்யறது, இது உங்க தப்பு மட்டுமில்ல, சமூகத்தோட தப்பு... பெரும்பாலான ஆம்பளைங்க, பொம்பளைங்கள மட்டம் தட்டித்தான் வெச்சிக்கிட்டிருக்காங்க.''பெண்கள் அடுப்படிக்காகப் பொறந்தவ. அவ ஒரு போகப் பொருள். சாம்பார்ல போடற கருவேப்பில. இப்படித்தானே நெனைக்கிறாங்க. பெண்களுக்கும் கொஞ்சம் தெரியும், அவங்கள பேச விடணும். கருத்து சுதந்திரத்த தரணும்ன்னு எத்தனை குடும்பங்கள்ல நெனைக்கறாங்க சொல்லுங்க...''நம் வீட்ல நான், ஒரு ஜடமாத்தானே இருக்கேன். உன் தங்கச்சி மதிக்கறாளா... சமைக்கற, துணி துவைக்கற, வீட்டு வேலைகள் செய்யற மெஷினாத்தானே என்னைப் பார்க்கறாரு உங்கப்பா... ''நீங்க... நான் உங்களுக்கு எதுக்கு தேவைப்படறேன்... மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, 'இந்த விஷயத்துல நீ என்ன ஐடியா வெச்சிருக்கே'ன்னு என்னிக்காவது கேட்டிருக்கீங்களா... இல்லியே, இப்பகூட உங்க பிசினஸை துாக்கி நிறுத்த என்னால் முடியும். நீங்க, என் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கறதா இருந்தா, அத சொல்ல தயாரா இருக்கேன்.''இதுவரை பார்க்காத ஒரு தினுசாய் மனைவியைப் பார்த்தான், திவாகர்.''இப்ப நாம வாங்கற மருந்து கம்பெனிகள உதறுங்க; புது கம்பெனிகளைப் புடிங்க. தரத்த சோதித்துப் பாருங்க, விலைகள குறைச்சு, 'ஆர்டர்'களை வாங்குங்க. அள்ளும் பாருங்க பிசினஸ்.''இல்ல, இந்த பிசினஸ் வேண்டாமா, கவலைய விடுங்க. என் படிப்புக்கு ஏத்த ஒரு வேலைய நான் தேடிக்கறேன். என் சம்பாத்தியத்துல இந்த குடும்பம் கொஞ்ச நாள் நடக்கட்டுமே. இதுல உங்க சுய கவுரவம் பாதிக்கப்படும்ன்னு நெனைக்கறீங்களா? ''அதுக்கும் என்கிட்ட தீர்வு இருக்கு. நீங்க எங்கேயாச்சும் சொற்பமா வேலை செய்து, 10 ஆயிரம் ரூபா கொண்டு வாங்க. அதுலயே குடும்பத்த ஜோரா நடத்திக் காட்டறேன். எதாவது ஒரு வழிக்கு வாங்க. பொம்பளைங்களாலேயும் எதுவும் முடியும்ன்னு நெனைங்க. எப்படி வசதி?''இப்போது, புவனா வித்தியாசமாக தெரிந்தாள், திவாகருக்கு. இதுவரை மனைவியாக மட்டும் தெரிந்தவள், ஒரு மந்திரியாகவும் தெரிய ஆரம்பித்தாள்.'இவளிடம் நிறைய விஷயம் இருக்கு...' என்ற தெளிவு திவாகருக்கு வந்தது.
எம். கே. சுப்பிரமணியன்

