sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 30, 2022

Google News

PUBLISHED ON : அக் 30, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —



வயது: 31, கணவர் வயது: 37. என் பெற்றோருக்கு, நான் ஒரே மகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. ஒரு மகள் இருக்கிறாள். வயது: 1.

நான் டிகிரி முடித்துள்ளேன். தற்சமயம் வேலையில் இல்லை. பி.இ., படித்து, வேலையில் இருந்த கணவருக்கு, இப்போது வேலை போய் விட்டது. கணவரின் கூட பிறந்த அண்ணன், தன் மனைவியுடன் தனியாக வசிக்கிறார். கணவரின் அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் உண்டு.

திருமணத்துக்கு முன், மாமியார் பல தில்லுமுல்லு வேலை செய்தே, என்னை திருமணம் செய்து வைத்துள்ளார். பல விஷயங்களில், மாமியாரும், கணவரும் என்னை ஏமாற்றியுள்ளனர். போனது போனவையாகவே இருக்கட்டும் என்று, நானும் மனதை தேற்றி, அவருடன் வாழ்ந்து வந்தேன்.

ஒருநாள், கணவரின் மொபைல் போனை எதேச்சையாக பார்க்க, அதில் ஒரு பெண், 'என் வாழ்க்கையே வெறுமையாக இருக்கிறது...' என்ற ரீதியில், நீண்ட, 'மெசேஜ்' அனுப்பியிருந்தாள்.

அதைப் பற்றி கணவரிடம் கேட்டதற்கு, 'அதற்கு நான், எந்த பதிலும் அனுப்பவில்லையே... எப்போதோ அறிமுகமான ஒரு பெண் அனுப்பிய, 'மெசேஜ்'க்கு எல்லாம் முக்கியத்துவம் தராதே...' என்கிறார்.

என் மகள் குறை பிரசவத்தில் பிறந்ததால், ஓய்வுக்காக, அம்மா வீட்டில் இருந்தேன். வாரத்துக்கு ஒருமுறை வந்து, எங்களை பார்த்து செல்வார், கணவர்.

தொடர்ந்து பல பெண்களிடமிருந்து இதுபோல், 'மெசேஜ்'கள் வர, இனி, அம்மா வீட்டில் இருந்தால், கணவர் பாதை மாறி விடுவார் என்று நினைத்து, அவருடன் சென்று விட்டேன்.

வேலை இல்லாமல் இருப்பதால், இப்படியெல்லாம் மனம் அலைபாய்கிறது. உடனே, வேலை தேடிக் கொள்ளுங்கள் அல்லது சுயதொழில் ஏதாவது செய்து பாருங்கள் என்று அறிவுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல், சோம்பேறியாகவே திரிந்து வருகிறார்.

நான் மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். அதற்கும் வழி இல்லாமல் உள்ளது.

கீழே உள்ள கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவீர்களா, அம்மா.

* கணவரை, வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய சொல்லலாமா?

* கணவரின் மொபைலுக்கு அடிக்கடி பல பெண்களிடமிருந்து வரும், 'மெசேஜ்'களை, என் பெற்றோரிடம் கூறி, அவருக்கு அறிவுரை சொல்ல செய்யலாமா?

* சுமூகமாக குடும்பம் நடத்த என்ன செய்வது... மற்ற பெண்களை போல், கண்டும் காணாமல் பொறுமையாக இருக்க வேண்டுமா?

* என்னிடமும், குழந்தையிடமும் அன்பாக தான் இருக்கிறார்.

மன உளைச்சலால், இரண்டாவது கரு உருவாகி, 'அபார்ஷன்' ஆகிவிட்டது.

தகுந்த ஆலோசனை வழங்குங்கள், அம்மா.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத மகள்.


அன்பு மகளுக்கு —



பல தில்லுமுல்லு வேலைகளை மாமியாரும், கணவரும் சேர்ந்து செய்து, உன்னை திருமண பந்தத்தில் சிக்க வைத்ததாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாய். ஆனால், என்னென்ன தில்லுமுல்லு வேலைகளை செய்தனர் என்பதை, நீ பட்டியலிடவில்லை.

ஒரு வாழைப்பழ சோம்பேறி, கணவர். அத்துடன், பல பெண்களுடன் சகவாசம் கொண்டவர். ஊரெல்லாம் கடன் வாங்கி செலவு செய்பவர் என்ற விஷயங்களை தான், மாமியார், உன்னிடம் மறைத்திருப்பார் என, யூகிக்கிறேன்.

என்ன பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளாய் என, நீ தெளிவாக குறிப்பிடவில்லை. வேலை வாய்ப்பு அதிகம் இல்லாத எதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பாய் என, நம்புகிறேன்.

* திருமணமான முதல் நாளிலேயே, மனைவியின் பலம், பலவீனங்களை உளவறிந்து விடுகிறான், ஒரு ஆண். பலமான பெண் என்றால், தன் அத்துமீறல்களை அடக்கி வாசிக்கிறான்.

பலவீனமான பெண் என்றால், முதுகில் உப்பு மூட்டையாய் நகர்வலம் வருகிறான். குட்ட குட்டக் குனியும் சுபாவம், மாமியார் மற்றும் கணவர் முன், உன்னை ஏப்பைசாப்பை ஆக்கி நிறுத்தி இருக்கிறது

* 'கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என, ஒரு பழமொழி இருக்கிறது. உள்ளூரிலேயே வேலை பார்க்காமல் சோம்பேறியாக திரியும் கணவர், நீ சொன்னவுடன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விடுவாரா... ஒரு நாளும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல மாட்டார்

* மாமியார் கொடுத்த செல்லத்தால் தான், கெட்டு குட்டிச்சுவராகி நிற்கிறார், கணவர். அவருக்கு, அறிவுரை கூறி, திருமணபந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடுவதை தடுக்க மாட்டார், மாமியார்; உன் பெற்றோர் சொல்லும் அறிவுரைகளும் வீண்

* சுமுகமாக குடும்பம் நடத்த, எந்த பல்கலைக்கழகத்திலும் சொல்லி தர மாட்டார்கள். 'ரிங்மாஸ்டர்' ஆக நடந்து, சிங்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மாவுத்தனாக நடந்து, யானையை மண்டி போட செய்ய வேண்டும். ராவுத்தனாக நடந்து, குதிரையை அடக்க வேண்டும். கணவன் பாம்பு என்றால், மகுடி ஊது. கணவன் குரங்கு என்றால், குரங்காட்டி ஆகு

* திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு, பெண்கள் தரப்பில் ஆட்சேபனையோ, கண்டித்தலோ இல்லை என்றால், மனைவி, குழந்தைகளுடன் இணக்கமாக தான் நடிப்பர்.

மேற்கொண்டு நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் முதுகலை பட்டபடிப்பை படி. படித்துக் கொண்டே கிடைக்கும் வேலைக்கு போ

* கணவரின் மொபைல் போனை போட்டு உடை; புது மொபைல் எண்ணுக்கு மாறச் சொல்

* 'வேலைக்கு போய் சம்பாதிக்கா விட்டால், என்னை பார்க்க வராதே. ஆறு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள், நீ திருமண பந்தம் மீறிய உறவுகளை துண்டித்து, வேலைக்கு போய் விட வேண்டும். இரண்டும் செய்யாவிட்டால், உன்னிடமிருந்து விவாகரத்து கோரி, குடும்பநல நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பேன்...' என, ஆணித்தரமாக கூறு

* எதற்கும் கணவர் அசராவிட்டால், விவாகரத்துக்கு விண்ணப்பி. நீயும், மகளும் பெற்றோர் வீட்டில் தஞ்சமடையுங்கள். விவாகரத்து தேவைப்படாமல், கணவர் உன் வழிக்கு வந்துவிடுவார் என நம்புகிறேன். வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us