
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 35 வயது பெண். திருமணமாகி, 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருக்கிறார், கணவர்.
நான், அரசு பணியில் உள்ளேன். எனக்கு பெற்றோர் இல்லை. என் பெற்றோருக்கு ஒரே மகள். என்னை வளர்த்து, ஆளாக்கி, திருமணம் செய்து வைத்தார், சித்தி.
தாய் - தந்தை இல்லாதவள் என்று தேடி வந்து, என்னை பெண் எடுத்தனர், கணவரின் பெற்றோர். என்னை விட இரண்டு வயது தான் பெரியவர், கணவர்.
பெற்றோர் இல்லாவிட்டாலும், என்னை எந்த குறையும் தெரியாமல் தான் வளர்த்தார், சித்தி. ஆனால், புகுந்த வீட்டினரோ, வார்த்தைக்கு வார்த்தை, பெற்றோரை இழந்தவள் என்று சொல்லி வெறுப்பை ஏற்படுத்துகின்றனர்.
என் மீது பாசமாக இருப்பது போன்று நடிக்கின்றனர். நாளாக ஆகதான் அவர்களது உள்நோக்கம் புரிந்தது. தாய் - தந்தையற்ற அனாதை, இவளை என்ன செய்தாலும், கேட்பதற்கு ஆள் இல்லை. இவளது உழைப்பும், சம்பாத்தியமும் நமக்கு பயன்படும் என்பதே, அவர்களது நோக்கமாக உள்ளது.
கணவருக்கு ஒரு தங்கை. அவளுக்கு திருமணமாகி, அதே ஊரில் வசிக்கிறாள்.
தன்னந்தனியாக ஒரு முடிவு எடுக்கவோ, தேவையான ஒரு பொருளை வாங்கவோ என்னால் முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, அவர்களுக்கு கட்டுப்பட்டு அடங்கி இருக்க வேண்டியுள்ளது.
தனிக்குடித்தனம் போகலாம் என்று பலமுறை வற்புறுத்திய பின், அவரது தங்கை வீட்டு அருகில் குடி வைத்தார், கணவர். அங்கு போயும், 'டார்ச்சர்' ஓயவில்லை.
நிமிஷத்துக்கு ஒருமுறை, வீட்டுக்கு வந்து, 'இது செய்தாயா அண்ணி, இது என்னாச்சு அண்ணி...' என்று பாடாய் படுத்துகிறாள், நாத்தனார். குழந்தையையும் இயல்பாக வளர்க்க முடியவில்லை.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில், சித்தி வீட்டுக்கே குழந்தையுடன் வந்து விட்டேன். குழந்தையை, சித்தியின் பொறுப்பில் விட்டு, வேலைக்கு சென்று வருகிறேன்.
கணவர் வந்து கூப்பிட்டபோதும், நான் போகவில்லை. மற்றவர்களது அனாவசிய தலையீடு இல்லாமல், நான், கணவர், குழந்தை மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது தவறா?
எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உலகின் எந்த செயலுக்கும் தலையீடோ, கண்காணிப்போ கட்டாயம் இருக்கும். பிறந்த வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா உறவுகள் இருந்து, நாம் இடறிவிழுந்தால் துாக்கி விடுவர்.
புகுந்த வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் உறவுகள் இருந்து, 50 சதவீதம் நம்மை உயர்த்தி பிடிப்பர். 50 சதவீதம் நம்மை தலைகீழாய் தள்ளிவிடுவர். தலையீடுகளே இல்லாது வாழ நினைத்தால், நீ, உன் கணவரையும், குழந்தையையும் தனித்தீவுக்கு அழைத்து போய் வாழ்.
'மாமனார் - மாமியார், உன் மீது பாசமாய் இருப்பது போல நடிக்கின்றனர். நீ ஒரு அனாதை. அதனால், உன் உழைப்பையும், சம்பாத்தியத்தையும் உறிஞ்சிக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்...' என்பதெல்லாம் உன் சந்தேகக் கற்பனைகள்.
தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற உன் விருப்பத்துக்கு தலைசாய்த்து, தனி வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறார், கணவர்.
நாத்தனாரின் அன்புத் தொல்லைகளை, நச்சரிப்புகளாக ஏன் பார்க்கிறாய்... நாத்தனார் சொல்வதில் நல்ல விஷயங்கள் இருந்தால் எடுத்துக்கொள். வயிற்றெரிச்சல் விஷயங்கள் இருந்தால், அவற்றை புறக்கணி.
நாத்தனாரிடம் எரிச்சல் முகம் காட்டாதே. அவளை நல்ல தோழியாக பாவி.
அரசு பணியில் இருக்கிறாய். அங்கு உனக்கு தலையீடுகளே இல்லையா... தலையீடுகளுக்கு பயந்து வேலையை உதறிவிட்டா வந்து விட்டாய்... சம்பளத்துக்காக சொந்தக்காலில் நிற்பதற்காக, தலையீடுகளை மீறி, வேலையில் நிலைத்து நிற்கிறாய் அல்லவா... அது போன்ற மனநிலையை, உன் குடும்ப வாழ்க்கைக்கும் கொண்டு வந்து பொருத்து.
நீ, அனாதை என்று ஏன் நினைக்கிறாய், பெற்றோருக்கு பெற்றோராக உன் அம்மாவின் தங்கை சித்தி இருக்கிறார்.
மாமனார் - மாமியார், நாத்தனாரை சாமர்த்தியமாக கையாள தெரியாத பலவீனப் பெண்ணாய் இராதே.
சித்தி உனக்கு தேவையான அறிவுரைகள் கூறவில்லையா அல்லது சித்தி கூறிய அறிவுரைகளை புறக்கணித்து விட்டாயா?
மீண்டும், கணவர் உன்னை கூப்பிட வந்தால், நீயும், உன் குழந்தையும் அவருடன் போய் சேருங்கள்.
மாமனார் - மாமியாரை, அப்பா - அம்மா என, அழைத்து பார். 'பெற்றோர் இல்லாத எனக்கு நீங்கள் இறைவன் கொடுத்த பெற்றோர்...' என கூறி பார்; உருகி விடுவர்.
பார்வையையும், எண்ணத்தையும் விசாலப்படுத்து. சந்தேகம் ஒரு தொற்றுநோய். அதை துாக்கி குப்பைத் தொட்டியில் வீசு.
நல்லவர்களோ, கெட்டவர்களோ, உறவுகளையும், நட்புகளையும் சிறப்பாக பேண பார்.
எதிலும் தாக்கு பிடிக்கும் விடாப்பிடியான மனோபாவம் இருந்தால், நிரந்தர வெற்றி உனக்கே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.