
அமெரிக்காவின், 28வது அதிபர், உட்ரோ வில்சன். இவரது முழுப் பெயர், தாமஸ் உட்ரோ வில்சன். இவரது பதவிக்காலம், 1913 - 1921.
பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., என்ற டாக்டர் பட்டம் பெற்ற, முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர். 1919ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
இவர் பதவியில் இருந்தபோது நடந்த ஒரு யுத்தத்தில், பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். நியூயார்க் நகரில் அவர்களது இறுதிச் சடங்கை பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் பங்கேற்க விரும்பினார், உட்ரோ வில்சன்.
அந்த சமயத்தில், அவரை கொலை செய்ய எதிரிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக, அவரது அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. ஆகவே, வீரர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளாமல் இருக்க பலரும் விரும்பினர்.
ஒரு நெருங்கிய நண்பர், உட்ரோ வில்சனிடம், 'இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது, உங்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. ஆகவே, தாங்கள் அங்கு செல்ல வேண்டாம். ஒரு நல்ல அதிபரை அமெரிக்கா இழந்து விடக்கூடாது...' என்று கேட்டுக் கொண்டார்.
'என்னைத் தடுக்காதீர்கள். அமெரிக்க அதிபர் கோழையாக இருக்கலாமா...' என்று சொல்லி, வீரர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார், உட்ரோ வில்சன்.
ஒரு பேட்டியில் கண்ணதாசன் கூறியது:
கேள்வி: இலக்கியக் கண்ணதாசனுக்கும், அரசியல் கண்ணதாசனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறதே.
பதில்: இலக்கியத்தில் ஆர்ப்பாட்டம் இருக்க முடியாது. அப்படி இருந்தால், அது இலக்கியமாக இருக்க முடியாது. அரசியலில் அமைதி இருக்க முடியாது. அமைதியோடு இருப்பவன், அரசியல்வாதியாக இருக்க முடியாது.
இந்த இரண்டும் தலை கீழான - முரண்பட்ட வெவ்வேறு துறைகள். இலக்கியத்தை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆனால், பழக்கம் மற்றும் சில நண்பர்களுடைய உறவு காரணமாக, அரசியலில் ஈடுபட வேண்டியதாகி விட்டது.
ஒரு சரித்திர நாடகத்தில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்தார். அரச சபையில் வேலைக்காரர் வேடம்.
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தி, 'அமைச்சரே, எந்தெந்த மன்னர்கள் நமக்கு கப்பம் கட்டினர்...' என்று கேட்டார்.
'வங்காள மன்னர், தங்கம் கட்டினார்; கலிங்க மன்னர், நவமணிகள் கட்டினார்; மாளவ மன்னர், வெள்ளி கட்டினார்...' என்றார்.
உடனே, 'சோழ ராஜா என்ன கட்டினார்...' என்று கேட்டார், சக்கரவர்த்தி.
தன் குறிப்பேட்டில் அவர் பெயரைத் தேடினார், அமைச்சர்.
அங்கு நின்றிருந்த கலைவாணர்,'வேஷ்டி கட்டினார்...' என்று சொல்லிவிட்டு உள்ளே ஓட, நாடக அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.
- நடுத்தெரு நாராயணன்