
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சக்தியைக் கொடுத்திருக்கிறது, தெய்வம். முறையாக செயல்பட்டு, அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்ட, அம்பாள் அடியார் ஒருவரின் வாழ்வின் நிகழ்வு இது:
'தசரா' என்றாலே, குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா தான், நினைவிற்கு வரும். குலசேகரன் பட்டினத்தில், அறம் வளர்த்த நாயகி எனும் திருநாமத்தில் அருளாட்சி நடத்தி வருகிறார், அம்பிகை.
குலசேகரன் பட்டினத்தில், கவிராயர் ஒருவர் வாழ்ந்து வந்தார். நற்குணங்களின் இருப்பிடமான அவர், தினமும் கோவில் சென்று, அன்னை அறம் வளர்த்த நாயகியை பக்தியுடன் துதித்துப்பாடித் திரும்புவார். அம்பிகையும், கவிராயருக்குக் கனவில் தோன்றியும் அசரீரியாகவும் அருள்மழை பொழிந்து வந்தார்.
அம்பிகை அருள் பெற்ற கவிராயரை, ஊரே பாராட்டியது. அப்போது, குலசேகரன் பட்டினத்தை அரசாண்ட, செந்தில் காத்த மூப்பனார் என்ற சிற்றரசரும் பாராட்டினார். கவிராயரின் தெய்வீகத்தன்மை, அடக்கம் ஆகியவற்றை அறிந்து, அவருக்கு நண்பரானார்.
கவிராயரின் பேர், புகழை தாங்காத புலவர் ஒருவர், எப்படியாவது அவரை தோற்கடித்து, அவமானப்படுத்தும் எண்ணத்தோடு அரண்மனை வந்தார்.
அந்த நேரம், அரசரோடு இருந்தார், கவிராயர். ஏராளமானோர் அவையில் கூடியிருந்தனர். அதைப் பார்த்த புலவர், மிகுந்த ஆணவத்துடன் கவிராயரை வாதத்திற்கு அழைத்தார்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், கவிராயர். வந்தவரோ, 'அவமானப்பட்டு விடுவோமோ என்ற பயம், அவரை ஆட்டிப் படைக்கிறது...' என்று கத்தினார்.
வேறு வழியற்ற நிலையில், கல்வியறிவு இல்லாத ஒரு சிறுவனைக் கொண்டு, புலவருக்குப் புத்தி புகட்ட எண்ணினார், கவிராயர்.
அங்கிருந்த அரண்மனை தையற்காரரின் மகனை அழைத்து, அவனுக்குத் திருநீறு பூசி, 'அறம் வளர்த்த நாயகியே... இந்தச் சிறுவன் நாவில், நீ இருந்து வெற்றி பெறச் செய்யம்மா...' என்று, ஆத்மார்த்தமாக வேண்டினார், கவிராயர்.
அருள்மழை பொழிந்தார், அம்பிகை.
கவிராயரின் செயலைக் கண்ட புலவர், பயந்து போய், 'ஒரு சிறுவனை என்னுடன் மோத விடுகிறார் பாருங்கள். அவனைத் தோற்கடித்துக் கவிராயரை ஊரை விட்டே விரட்டுவேன்...' என்றார்.
வாதப்போர் துவங்கியது; சற்று நேரத்திலேயே தோற்ற புலவர், கவிராயரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, மன்னிப்பு வேண்டினார்.
'எல்லாம் அறம் வளர்த்த நாயகியின் அருள். அவள் ஆட்டி வைக்கிறாள்; நாம் ஆடுகிறோம். அவ்வளவு தான்...' என்றார், கவிராயர்.
அரசர் உட்பட அனைவரும் கவிராயரைப் பாராட்டினர்.
அந்தக் கவிராயர் பெயர், தெய்வ சிகாமணிக் கவிராயர்.அவர் பாடிய பாடல்கள், 'அறம் வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ்' என்ற பெயரில் நுாலாகவே உள்ளது. முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்