PUBLISHED ON : ஜூன் 18, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
பெற்றோருக்கு மூத்த மகள் நான். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என் வயது: 28. டிகிரி படித்துள்ளேன். தங்கை பட்ட மேற்படிப்பு படித்து, வங்கியில் பணிபுரிகிறாள்.
முன்பு எங்கள் குடும்பமும், சித்தப்பா குடும்பமும் ஒரே வீட்டில் வசித்தோம். சொத்து தகராறு காரணமாக, தினமும் அப்பாவும், சித்தப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். சில சமயம் அடிதடி வரை கூட செல்வதுண்டு. நான், தங்கை, சித்தப்பா குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
எனக்கு, 15 வயது இருக்கும்போது, இதேபோல் சொத்து தகராறு ஏற்பட, அவர்கள் போட்ட சத்தத்தில், பள்ளி இறுதி தேர்வுக்கு படிக்க முடியாமல் திண்டாடி, பொறுக்க முடியாமல் கிணற்றில் குதித்து விட்டேன்.
உயிர் மீது கொண்ட ஆசையால், தண்ணீரில் மூழ்காமல், ஒரு கல்லை இறுக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டேன். சிறிது நேரத்துக்கு பின் ஏதோ வேலையாக கிணற்றடிக்கு வந்த சித்தப்பா, என் குரல் கேட்டு, யோசிக்காமல் கிணற்றில் குதித்து விட்டார்.
குதித்த வேகத்தில், பாறையில் தலை மோதி, இறந்து விட்டார். நான்கு மணி நேரத்துக்கு மேலாக, பயத்துடன் கிணற்றின் ஓரத்தில், குளிரில் நடுங்கியபடி இருந்தேன்.
நீண்ட நேரமாக என்னை தேடி அம்மாவும், உறவினர்களும் வருவதை அறிந்து, மீண்டும் கூச்சலிட்டேன். என்னையும், சித்தப்பாவின் உடலையும் மீட்டனர்.
சித்தப்பாவின் உடலை பார்த்து, சித்தியும், அவரது குழந்தைகளும் அழுத அழுகை இன்னமும் என் கண்முன் தெரிகிறது.
அதன்பின், என் அப்பா மனம் மாறி, சொத்துகளை, சித்தி மற்றும் அவர் குழந்தைகள் பெயருக்கு எழுதி கொடுத்து விட்டு, வேறு ஊருக்கு எங்களை அழைத்து வந்து விட்டார்.
சொந்தமாக மளிகை கடை வைத்து, என்னையும், தங்கையையும் படிக்க வைத்தார்.
இன்று வரை, சித்தப்பாவின் இறப்புக்கு நான் தான் காரணம் என்று குற்ற உணர்ச்சியில் புலம்பி தவிக்கிறேன். என் அவசர புத்தியால் தான் சித்தப்பா இறந்தார் என்ற, குற்ற உணர்ச்சி எனக்கு உள்ளது.
சித்தியின் மகளையும், மகனையும் நினைத்து அழாத நாளில்லை. அவர்களுடனான தொடர்பு விட்டு போயிருந்தாலும், எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்தி, மன்னிப்பு கேட்டு, அவர்களுடன் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறோம். இது நடந்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
ஆனால், சித்திக்கு எங்கள் மீது இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை என்று, உறவினர்கள் மூலம் அறிந்து, நானும், அப்பாவும் வருந்துகிறோம்.
மீண்டும் சித்தி குடும்பத்தினருடன் உறவை புதுப்பித்து சந்தோஷமாக வாழ, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நாம் இருப்பது பொருளாதாரம் சார்ந்த சுயநல உலகம்.
தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் சொத்து தகராறு இருந்ததில் பெரிய ஆச்சரியமில்லை. தந்தை, -சித்தப்பா சண்டைகளை பார்த்து பார்த்து வெறுத்து போய் கிணற்றில் குதித்துள்ளாய். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பர்.
தன்னுடன் தொடர் தகராறு செய்யும் அண்ணன் மகள் தானே கிணற்று நீரில் மூழ்கி சாகட்டும் என, வன்மம் கொள்ளாமல், உன்னை காப்பாற்ற முயன்று இறந்திருக்கிறார், சித்தப்பா.
தன் மகளை காப்பாற்றதானே கிணற்றில் குதித்து இறந்திருக்கிறான் என்ற உணர்வுடன், உன் தந்தை, சொத்துகளை தம்பியின் குடும்பத்துக்கு விட்டுக் கொடுத்தது இதயத்துக்கு நெருக்கமான செயல்.
பெரியவர்களின் பிரச்னையை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என்றில்லாமல், நீ தற்கொலைக்கு முயன்றது, பெரிய முட்டாள்தனம். அந்த முட்டாள் தனத்துக்கும், சித்தப்பா மரணத்துக்கும் துளி சம்பந்தமில்லை.
நடந்தது ஒரு விபத்து. சாலை விபத்தில் அடிபட்டோ, பாம்பு கடித்தோ இறந்திருந்தால், சித்தப்பா குடும்பம் உன்னையையோ, உன் குடும்பத்தையோ அவரது மரணத்துக்கு காரணம் என குற்றம் சாட்டியிருக்க மாட்டார்கள் இல்லையா? அதே வகையை சேர்ந்தது தான் இதுவும்.
மரணம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நொடியில் வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம்.
சித்தியின் குடும்பத்துடன் சமாதானம் ஆனவுடன் தான், திருமணம் என, நீ முடிவெடுத்திருப்பது அபத்தம். சமாதான முயற்சிகளை தொடர்ந்தபடி, திருமணமும் செய்து கொள்.
சித்தியின் மன்னிப்பை பெற, மேம்போக்கான வார்த்தைகள் போதாது. உண்மையில் நீங்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கவில்லை நடிக்கிறீர்கள் என, நினைக்கலாம், சித்தி.
மன்னிப்பு என்பது, ஆன்மாவின் கதறலாக இருக்க வேண்டும். மன்னிப்பு என்ற வார்த்தை, உன் கண்ணீரிலும், வியர்வையிலும், ரத்ததிலும் நனைந்திருக்க வேண்டும்.
நீயும், உன் தங்கையும், சித்தி வீட்டுக்கு போங்கள். உன் தந்தை வர வேண்டாம். உன் சித்தியின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து, மன்னிப்பு கேள். உங்கள் கண்ணீர் சித்தியின் கால்களை கழுவட்டும்.
மன்னிப்பு கேட்டும் படலம் தொடர்ந்தால், சித்தியின் மனம் இளகி விடும். சித்தியின் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேளுங்கள். பகையை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல், வெட்டி துாக்கி எறியுங்கள். உன் திருமணத்திற்கு பின் பிறக்கப் போகும் உன் மகனுக்கு சித்தப்பா பெயர் சூட்டு. வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
