PUBLISHED ON : ஜூலை 02, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 40 வயது பெண். திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு இரு தம்பி மற்றும் இரு தங்கையர் உள்ளனர். அப்பா, துணி கடை ஒன்றில் காசாளராக இருந்தார். அம்மா இல்லத்தரசி.
எனக்கு, சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, சொந்த காலில் நிற்க வேண்டும். தம்பி, தங்கைகளை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால், நான், பிளஸ் 2 முடித்தவுடனே, நல்ல வரன் என்றும், தம்பி, தங்கைகளை கரை சேர்க்க வேண்டும் என்றும் கூறி, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
திருமணத்திற்கு பின், மேலும் படிக்க கணவரிடம் அனுமதி கேட்டேன்; மறுத்து விட்டார். மாமியாரும், 'வீட்டு வேலைகள் தலைக்கு மேல் உள்ளது. இதில் படிக்க போய் விட்டால், யார் செய்வது...' என்று, தடை போட்டார்.
இரண்டு மணி நேரம், கம்ப்யூட்டர் கிளாசிலாவது சேர்த்து விடுங்கள். கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று, வீட்டிலிருந்தவாறு ஏதாவது வேலை செய்வதாக கூறியும் சம்மதிக்கவில்லை. அதன்பின், குழந்தைகள் பிறக்க, அவர்களை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
இப்போது, குழந்தைகள் வளர்ந்து விட்டனர். ஓய்வு நேரத்தில், பக்கத்து வீட்டு பெண்ணிடமிருந்து, தையல் பயிற்சியும், ஒயர் கூடை பின்னுவதையும் கற்றுக் கொண்டேன்.
கணவரிடம் மன்றாடி, தையல் மிஷினை வாங்கி, வீட்டிலிருந்தபடியே அக்கம் பக்கத்தினருக்கு, துணி தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். கூடை பின்னி விற்றேன். கிடைக்கும் தொகையில், என் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன்.
இந்நிலையில், கணவர் வீட்டாரின் உறவினர்கள், தங்களுடைய துணிகளை கொடுத்து, இலவசமாக தைத்து வாங்கிக் கொண்டனர். பின்னி வைத்த ஒயர் கூடைகளை, என்னை கேட்காமலேயே எடுத்துச் சென்றனர். மாமியாரும் எதுவும் சொல்லவில்லை; கணவரும் கண்டுகொள்வதில்லை.
தையல் பணிக்கு மற்றும் கூடை பின்ன தேவையான பொருட்கள் வாங்க, கையில் பணம் இல்லாமல், கணவரிடம் கெஞ்சி கூத்தாட வேண்டியுள்ளது.
இதிலிருந்து விடுபடவும், வேறு எந்த வேலையில் ஈடுபட்டால், யார் கையையும் எதிர்பார்க்காமல், தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதற்கும் வழி காட்டுங்கள், அம்மா.
என் பெண் குழந்தைகளுக்கும், சொந்த காலில் நிற்கும் எண்ணம் வரவேண்டும். அதற்கு நான் முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவர் என்ன படித்துள்ளார்? என்ன வேலை பார்க்கிறார்? புகுந்த வீடு, சொந்தவீடா அல்லது வாடகை வீடா போன்ற விபரங்களை, உன் கடிதத்தில் நீ குறிப்பிடவில்லை.
இந்தத் தலைமுறை ஆண்கள், மனைவி படித்து வேலைக்கு போகிறவராய் இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இரட்டை வருமானமே பொருளாதார தன்னிறைவுக்கான ஒரே வழி என, தெரிந்து வைத்துள்ளனர்.
உன் கணவர், ஒரு பத்தாம்பசலி. கணவரும், மாமியாரும் அறியாமை சேற்றில் அமிழ்ந்து கிடக்கின்றனர்.
உனக்கு வரன் பார்க்கும்போதே மணமகன் வீட்டாரிடம், 'திருமணத்துக்கு பின் படிப்பேன், வேலைக்கு போவேன்...' என்ற நிபந்தனையை முன்னிறுத்தி இருக்க வேண்டும்.
இந்த தலைமுறை பெண்கள், புகுந்த வீட்டாரிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, திருமணமான முதல் நாளிலிருந்தே வாயாலும், உடல் மொழியாலும் அறிவித்து விடுகின்றனர்.
ஆனால், நீயோ புகுந்த வீட்டாரிடம் கூனிக்குறுகி, கோழையாய் கைகட்டி, வாய்பொத்தி இருந்திருக்கிறாய். படிக்கவும், கணினி வகுப்பு போகவும் அனுமதி கேட்டு, இறைஞ்சி இருக்கிறாய்.
உனக்கான உரிமையை யாசகமாகவா கேட்பது? போட்டிருக்கும் நகையை விற்றோ அல்லது பெற்றோரிடம் பணம் வாங்கியோ நீ, கல்லுாரியில் சேர்ந்திருக்க வேண்டும். ஒரு வாரம் எதிர்ப்பு இருந்து, பின் காணாமல் போயிருக்கும்.
இரு பெண் குழந்தைகள் பிறந்ததால், தொடர்ந்து படிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக கூறி இருக்கிறாய். இது தவறான அணுகுமுறை. நேர நிர்வாகம் செய்ய தெரிந்தால், குடும்பத்தையும், படிப்பையும், இரட்டைக்குதிரை சவாரி செய்ய முடியும்.
உறவினர்கள் ஓசியில் ஜாக்கெட் தைத்து கொண்டதும், ஒயர் கூடைகளை துாக்கி போனதும் உன் கோழைத்தனம் பார்த்துதான்.
'இலவசமாய், கடனாய் இங்கு எதையும் கேட்காதீர்கள்' என, போர்டு மாட்ட வேண்டியது தானே? 'ஜாக்கெட்டுக்கான கூலியை ஒழுங்காக எடுத்து வையுங்கள்; காசு கொடுக்காமல் ஒயர் கூடையை தொடாதீர்கள்...' என, குரல் உயர்த்தினால், ஓசி கிராக்கிகள் ஓடி ஒளிந்து கொள்வரே!
தொடர்ந்து நீ கோழையாக இருந்தால், எந்த சுயதொழிலும் செய்து ஜெயிக்க முடியாது.
பெண்களுக்கான தையலகம் நடத்துவது, மிகப்பெரிய பணப்பயன் தரும் தொழில். வாடிக்கையாளரிடம், உன் தையல் திருப்தியை ஏற்படுத்தி விட்டால், தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்.
உனக்கு தனியாக வங்கிக்கணக்கு துவங்கு. தையலில் வரும் வருமானத்தை அதில் போடு. உன்னிரு மகள்களுக்கு கல்வி ருசியை எற்படுத்து. வீட்டிலும் அவர்கள் சிறப்பாக படிக்க, சாதகமான கல்வி சூழலை ஏற்படுத்து.
பாடப் புத்தகங்களை தவிர, மற்ற கதை மற்றும் கட்டுரை புத்தகங்களை வாசிக்கும் ரசனையை உருவாக்கு. செய்தித்தாள் வாசிக்க வை. அவர்களிடமிருந்து கோழைத்தனத்தை அகற்றி, மிடுக்கை உருவாக்கப் பார்.
குறைந்தபட்சம் இருவரும், முதுகலை பட்டபடிப்பு படித்து, வேலைக்கு போன பின் தான் திருமணம் என்ற கொள்கை தீர்மானத்தை நீயும் அறிவி; உன் மகள்களும் அறிவிக்கட்டும்.
நெஞ்சில் துணிவிருந்தால் நேர்மை திறனிருந்தால் ஓடும் பாதை எங்கும் நந்தவனம் தான்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
