தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

வயது: 38. கணவர் வயது: 42. சுயதொழில் செய்து வருகிறார். நான் இல்லத்தரசி. எங்களுக்கு, 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறாள். படிப்பு, விளையாட்டு இரண்டிலும் படு சுட்டி, மிகவும் புத்திசாலி.

இவள் வாங்கிய பரிசு பொருட்கள், வீடு முழுக்க நிரம்பியுள்ளது.

ஒருநாள் அனைவரும் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, 'நான், என் வகுப்பு பையன் ஒருவனை காதலிக்கிறேன். அவனை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீங்கள் அதற்கு மறுப்பு சொல்லக் கூடாது. இதற்காக படிப்பை பாதியில் நிறுத்துவதோ, ஓடிப்போகவோ போவதில்லை. நான், ஐ.ஏ.எஸ்., படித்த பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவனும் அதே லட்சியத்தில் தான்  உள்ளான்.

'எங்களை எங்காவது சேர்ந்து பார்த்தால், அதிர்ச்சி அடைந்து என் படிப்பை நிறுத்தக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே உங்களிடம் சொல்கிறேன்...' என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் அறைக்கு படிக்க போய் விட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு நாங்கள் தான் பதறினோம். உண்மையாக சொல்கிறாளா அல்லது விளையாட்டுக்கா என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

அதன்பின், அவளது நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கம்போல் தான் உள்ளது. பாடத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், அவள் சொன்ன அந்த பையனுக்கு தான் போன் செய்து கேட்கிறாள். நாங்கள் அருகில் இருக்கும்போதும், அவனுடன் சகஜமாக தான் பேசுகிறாள்.

ஒரே குழப்பமாக உள்ளது. இந்த விஷயத்தை, வெளியூரில் பள்ளி ஆசிரியராக இருக்கும் என் நாத்தனாரிடம் கூறினோம்.

'பள்ளிக் குழந்தைகள் இப்படித்தான் எதையாவது ஏடாகூடமாக பேசுவர். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முதலில், அவள், பிளஸ் 2 முடிக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்கிறார்.

எங்களால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவளை கண்காணிக்க தோன்றுகிறது. ஏதாவது விபரீதமாகி விடுமோ என்றும் பயப்படுகிறோம்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் அம்மா.

இப்படிக்கு,உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

உன் மகளின் காதல் பற்றி நுட்பமாக ஆராய வேண்டும்.

இனி செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* உன் மகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு உடல், ஒரு உள்ளம், ஒரு விருப்பம், ஒரு தேர்வு, ஒரு வாழ்க்கை இருக்கிறது என, ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

* மகளது காதலனின் குடும்பப் பின்னணி, அவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பட்டியல், அவர்களின் குணாதிசயங்கள் பற்றி நாகரிகமாக உளவறி

* மகளிடம் இனக்கவர்ச்சிக்கும், மெய்யான காதலுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பட்டியலிடு

* மகளுக்கு தெரியாமல் அவளின் மொபைல் போனை அலசி ஆராய்

* மகளின் தோழிகளை பற்றி தணிக்கை செய்

* மகள் எப்படி படிக்கிறாள் என்பதை வகுப்புஆசிரியையிடம் கேட்டு தெரிந்து கொள். உனக்கு தெரியாமல் பள்ளி வகுப்புகளை, 'கட்' அடித்திருக்கிறாளா என்பதையும் மோப்பம் பிடி

* உடல் ரீதியான தொடுதல் இல்லாமல் எட்டு ஆண்டுகள், உன் காதலை தொடர்ந்தால், திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டுகிறேன் என, உறுதி கொடு

* இடையிலேயே மகளின் காதல் அறுந்துபோய், புது காதலில் இறங்கினாலும் அவளை கண்டிக்காதே. ஆனால், அவளை பின்விளைவுகளுக்கு எச்சரிக்கைப்படுத்து

* காதலில் சுயமரியாதையை இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்ள சொல்லிக் கொடு. பெற்றோருக்கு தெரிந்து விட்டது. அவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை என்பதற்காக, அசட்டு துணிச்சலோடு தறிகெட்டு நடக்காதே என, மகளுக்கு அறிவுரை ஓது

* பரோல் கைதியை கண்காணிப்பது போல மகளை கண்காணிக்காதே. ஆயிரம் கண் கொண்டு அவளின் மீது பறவை பார்வை பதி. துப்பறியும் வேலை பற்றி, மகளுக்கு ஒரு நாளும் தெரியக் கூடாது. மகளின் அன்றாட நடவடிக்கைகளின் மீது ஒரு கண் வை.

என்னதான் நீ கண்கொத்தி பாம்பாக இருந்தாலும், உன் மகள், ஒழுக்கத்துடன் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவளாக காதலை இடக்கையிலும், கல்வியை வலக்கையிலும் வைத்து கொள்பவளாக இருந்தால்தான், அவளது திருமண வாழ்க்கை சிறக்கும்.

எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us