PUBLISHED ON : செப் 03, 2023

அம்மாவிடம், ''என்னம்மா சொல்ற, சென்னைக்கு, தோழியோட அண்ணன் கல்யாணத்துக்கு போகும்போது, அக்கா வீட்டில் போய் இரண்டு நாள் தங்கி, அவ எப்படி இருக்கா... சந்தோஷமா இருக்காளான்னு பார்த்துட்டு வரணும் அவ்வளவுதானே...'' என்றாள், கல்லுாரி இறுதி ஆண்டு படிக்கும், அனு.
''ஆமாம் அனு, உன் அக்கா அகிலாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்து, மூணு மாசமாச்சு. போனில் நல்லாதான்மா இருக்கேன்னு சொல்றா... இருந்தாலும், மனசு கேட்கலை. பெரிய குடும்பம், இரண்டு நாத்தனார், கூட்டுக் குடும்பமாக மாமனார், மாமியாரோடு இருக்கா. இரண்டு நாத்தனாருக்கும் கல்யாணமாகி இருந்தாலும், அடிக்கடி வரப்போக இருப்பாங்க. போனில் எந்தத் தகவலும் சொல்ல மாட்டா... நேரில் போய், நீ பார்த்துட்டு வந்தால் ஆறுதலாக இருக்கும்,'' என்றாள், அம்மா.
''சரிம்மா, உனக்காக போறேன். அப்பாகிட்ட, 'பர்மிஷன்' வாங்கிடு,'' என்றாள், அனு.
கல்யாணம் முடிந்த கையோடு, கையில் 'பேக்'குடன் அக்கா வீட்டில் நின்றாள், அனு.
''ஏய், அனு... வா வா... நல்லா இருக்கியா. கல்யாணம் நல்லபடியாக முடிஞ்சுதா. நீ வரப்போறதா அம்மா போனில் சொன்னாங்க. உள்ளே வா,'' தங்கையை அன்புடன் வரவேற்றாள், அகிலா.
உள்ளே நுழைந்தவள், ஹாலில் இருந்த கூட்டத்தை பார்த்ததும், பிரமித்துப் போனாள்.
''வாம்மா அனு... நீ வந்த நேரம், என் இரண்டு மகள்களும், நாலு நாள் அம்மா வீட்டில் இருந்துட்டு போகலாம்ன்னு, குடும்பத்தோடு வந்திருக்காங்க. நீயும் வந்தது சந்தோஷம். அகிலா, மாடியில் உன் அறைக்கு பக்கத்து அறையில் அனுவை இருக்கச் சொல். அழைச்சுட்டு போம்மா,'' என்றார், அகிலாவின் மாமியார்.
அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் புன்னகையோடு பேசினாள்.
அக்காவுடன் மாடி ஏறியபடியே, ''என்னக்கா, உன் இரண்டு நாத்தனாரும் பிள்ளைகளோடு வந்திருக்காங்க. ஒரே சத்தமா இருக்கு, இப்படிதான் அடிக்கடி வருவாங்களா?'' என்றாள், அனு.
''பசங்களுக்கு, 'லீவ்' கிடைக்கும்போது இரண்டு பேரும் வருவாங்க. அம்மா வீட்டிற்கு வர்றது சந்தோஷம் தானே... சரி, நீ, 'ப்ரஷ்ஷா'கிட்டு வா. நான் போய் சமையலை கவனிக்கிறேன்,'' என்றாள், அகிலா.
''மாமா எப்ப வருவாருக்கா?'' என்றாள், அனு.
''நீ வர்றது தெரியும். சாயந்தரம் ஆபீஸ் முடிஞ்சதும், நேராக வீட்டுக்கு வர்றதா சொன்னாரு,'' என்றாள், அகிலா.
''இல்லைன்னா, 'லேட்'டா வருவாரா?''
''ஆமாம். நண்பர்களோடு அரட்டையடிச்சுட்டு முன்ன, பின்ன வருவாரு,'' என்றாள்.
''அகிலா, கீழே வாம்மா, சமையலை கவனி. பசங்களுக்கு பசி வந்துடும்,'' மாமியார் அழைக்க, வேகமாக படி இறங்கினாள்.
கீழே ஹாலில், அம்மாவோடு இரண்டு மகள்களும் அரட்டை அடிக்க, அக்கா மட்டும் சமையலறையில் இருப்பதை கவனித்தாள், அனு.
''அக்கா... நான் ஏதாவது, 'ஹெல்ப்' பண்ணட்டுமா?''
''ஒண்ணும் வேண்டாம். நீ, அந்த ஸ்டூலில் உட்காரு. காய்கறியெல்லாம் நறுக்கி தந்துட்டாங்க. அடுப்பில் வச்சு இறக்க வேண்டியது தான்; நிமிஷமாய் செய்துடுவேன். அது சரி, அம்மா, அப்பா எப்படி இருக்காங்க. பக்கத்து வீட்டு பார்வதி அம்மாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?'' என, ஊர் தகவல்களை கேட்டபடி சமையலில் மும்முரமானாள், அகிலா.
எல்லாரும் சாப்பிட்டு முடிந்த்ததும், அடுப்படியை சுத்தம் பண்ணி, அகிலா மாடிக்கு வர, மணி, 3:00 ஆகி விட்டது.
''என்னக்கா... இவ்வளவு நேரமா வேலை பார்த்த... நான் சாப்பிட்டு மாடிக்கு வந்து ஒரு துாக்கம் போட்டு எழுந்துட்டேன்,'' என்றாள், அனு.
''ஆமாம் அனு, ஒரு சில நாளைக்கு இப்படிதான் கொஞ்சம் நேரமாயிடும். சரி, சாயந்தரம் உன் மாமா வந்ததும் எங்க போகலாம் சொல்லு,'' என்றாள்.
''எனக்கு எங்கேயும் போகணும்ன்னு அவசியமில்லை. உன்னுடன் இருக்கதான் வந்தேன். வெளியே வந்தால் நீ கொஞ்சம், 'ரிலாக்ஸா' இருப்பே. எங்கே வேணும்ன்னாலும் போகலாம்,'' என்றாள், அனு.
ஆபீசிலிருந்து வந்த அகிலாவின் கணவன், ரவி, அனுவிடம், சிறிது நேரம் ஊரில் எல்லாரையும் நலம் விசாரித்தான்.
''அகிலா, வெளியே எங்கேயாவது போகலாமான்னு கேட்டியே. இரண்டு அக்காவும் பிள்ளைகளோடு வந்திருக்காங்க. நாம் மட்டும் போக முடியாது. 'பீச்'சுக்கு போயிட்டு வரலாமா?'' என்றான், ரவி.
''வேண்டாம் மாமா, வீட்டுலயே இருக்கலாம். அக்காவோடு பேசிட்டு இருக்கேன்,'' என்றாள், அனு.
''சரி, நீங்க பேசிட்டு இருங்க. அக்கா, 'ஷாப்பிங்' போகணும்ன்னு சொன்னா. கூட்டிட்டு போயிட்டு வரும்போது, உன் பிறந்த நாளுக்கு புடவை வாங்கிட்டு வரேன்,'' என்றான், ரவி.
''அக்காவுக்கு புடவை வாங்க, அவ வரவேண்டாமா மாமா. அவளுக்கு பிடிச்ச புடவையை வாங்கி தாங்க...'' என்றாள், அனு.
''எனக்கு என்ன பிடிச்சிருக்கோ, அதை உங்க அக்கா கட்டிப்பா. கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ தெரியாது. இப்பெல்லாம் வெளியே கிளம்பினா, இந்த புடவை கட்டிக்கட்டுமான்னு என்கிட்ட கேட்டு தான் கட்டிப்பா. நான் தான், 'செலக்ட்' பண்ணித் தருவேன்,'' என்றான், ரவி.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள், அகிலா.
பிள்ளைகள் வெளியே விளையாடிக் கொண்டிருக்க, இரண்டு அக்காவையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போனான், ரவி.
வாசலில் உட்கார்ந்திருந்த மாமனார், ''அகிலா, என்னம்மா பண்ற... தங்கையோடு பேசிட்டு இருக்கியா?'' என்றார்.
''உங்களுக்கு என்ன வேணும். சொல்லுங்க மாமா,'' என்றாள், அகிலா.
''மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாம நெஞ்சைக் கரிக்குது. கொஞ்சம் சீரக கஷாயம் போட்டு தர்றியாம்மா?''
''இதோ கொண்டு வரேன் மாமா,'' என்றாள்.
''அகிலா, பூரி மாவு பிசைஞ்சு வச்சிருக்கேன். கிழங்கு செய்து, பூரி போடும்மா. உன் மாமாவுக்கு ஓட்ஸ் கஞ்சி போட்டு வச்சுடு. பால் காய்ச்சி, தயிர் உறைய வைக்கணும்,'' என்றார், மாமியார்.
'பாவம் அக்கா... இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் அவள் தலையில் கட்டுகின்றனர். அம்மாவிடம் சொன்னால் வருத்தப்படுவாங்களே...' என நினைத்தாள், அனு.
இரவு சாப்பிட்டு எல்லாரும் படுக்கைக்குப் போக, பால்கனியில் நிற்கும் தங்கையிடம் வந்த அகிலா, ''துாங்கலையா அனு... ஏன் இங்கே வந்து நிக்கிறே?'' என்றாள்.
''மாமா எங்கே அக்கா?'' என்றாள்.
''அவர் 'லேப்-டாப்'பில் ஏதோ வேலை பார்க்கிறாரு.''
மெதுவான குரலில், ''அக்கா, நீ இங்கே சந்தோஷமா இருக்கியா?''
''ஏய், என்ன ஆச்சு உனக்கு. நான் இங்கே சந்தோஷமாகத்தான் இருக்கேன். எதுக்கு இப்படி கேட்கிற?''
''இல்லக்கா, நீ பொய் சொல்ற. உன்னை, இந்த வீட்டில் யாரும் மனுஷியாகவே மதிக்கலை. உன் அக்காவுக்கு தனி விருப்பம் கிடையாது. எல்லாம் என் விருப்பம்தான்னு சொல்லாமல் சொல்றாரு, மாமா.
''உன் மாமியார், மகள்களை பக்கத்தில் உட்கார வச்சுகிட்டு, உன்னை வேலை வாங்கறாங்க.
''இந்த குடும்பத்துக்காக உழைக்கவா, உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க, நம்ம அம்மா?''
''ஸ்... அனு, மெதுவா பேசு. அவர் காதில் விழுந்துட போகுது. ஏய் மக்கு, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசற. இந்த வீட்டில் எல்லாரும் என்கிட்ட பிரியமாக தான் இருக்காங்க. என் நாத்தனார் இரண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அம்மா வீட்டுக்கு வந்ததால்,'ரிலாக்ஸாக' இருக்காங்க. இது என் வீடு. நான்தானே எல்லாத்தையும் கவனிக்கணும் அனு...'' என்றாள், அகிலா.
''இல்லக்கா, நீ சொல்றதை என்னால் ஏத்துக்க முடியலை,'' என்றாள், அனு.
'சரி... நாளைக்கு இதை நானே உனக்கு நிரூபிக்கிறேன்,'' என்றாள், அகிலா.
மறுநாள் காலை, 8:00 மணி. மாடியிலிருந்து இறங்கி, அக்காவை தேடி சமையலறை வந்தாள், அனு.
அங்கே அகிலா இல்லை, அவள் மாமியார் இருந்தார்.
''வா அனு, எழுந்தாச்சா. ஒரு நிமிஷம் இரு, காபி கலந்து தரட்டுமா,'' என்றார், அகிலாவின் மாமியார்.
''அக்கா எங்கே காணும்,'' என்றாள், அனு.
''அகிலாவுக்கு காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி. உடம்பு அசதியா இருக்குன்னா. மாடியில், 'ரெஸ்ட்' எடுக்க சொல்லியிருக்கேன்,'' என்றார், மாமியார்.
''அகிலாவை இன்னைக்கு மட்டன் பிரியாணி செய்ய சொல்லி ஒரு வெட்டு வெட்டலாம்ன்னு இருந்தோம். பாவம், உடம்புக்கு முடியாமல் படுத்துட்டாங்க,'' என்றாள், அகிலாவின் பெரிய நாத்தனார்.
''எனக்கும் தான் இன்னைக்கு, 'ப்ரூட் பேஷியல்' உங்களுக்கு போட்டு விடறேன் அண்ணி. முகம் பளபளக்கும்ன்னு சொன்னாங்க. இனி, அடுத்த முறை வரும்போதுதான். நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்,'' என்று சின்ன நாத்தனார் சொல்ல, மாடிக்கு வந்தாள், அனு.
அகிலா படுத்திருக்க, அருகில் ரவி, ''வா அனு, பாரு... காலையிலிருந்து தலை துாக்காமல் படுத்திருக்கா. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பா. இப்படி படுத்திருப்பது பார்க்க கஷ்டமா இருக்கு. ஆபீஸ் கிளம்ப தோணலை. டாக்டர்கிட்ட போகலாம்ன்னு சொன்னேன். 'ரெஸ்ட்' எடுத்தா சரியாயிடும்ன்னு சொல்றா,'' என்றான், ரவி.
''என்னக்கா ஆச்சு, உடம்பு சரியில்லையா?'' கவலையுடன் அக்காவின் நெற்றியில் கை வைத்தாள், அனு.
''தலைவலி தான், அனு. அத்தை காபி கொடுத்தாங்க. மாத்திரை போட்டிருக்கேன். கொஞ்ச நேரம், 'ரெஸ்ட்' எடுத்தால் சரியாயிடும்ன்னு சொன்னால், டாக்டர்கிட்டே கூப்பிடறாரு. நீங்க ஆபீசுக்கு கிளம்புங்க. நீங்க சாயந்தரம் வரும்போது சரியாயிடும்,'' என்றாள், அகிலா.
''அனு பார்த்துக்க, கீழே இறங்க வேண்டாம். மாடியிலேயே இருக்கட்டும். எதுவாக இருந்தாலும், யாராவது கொண்டு வந்து தருவாங்க. நான் சீக்கிரமே வந்துடறேன்,'' என சொல்லி கிளம்பினான், ரவி.
''என்னம்மா, உடம்புக்கு முடியலைன்னு அத்தை சொன்னா... இப்ப, எப்படிம்மா இருக்கு?'' என்றார், மாமனார்.
''பரவாயில்லை மாமா... நீங்க ஏன் முழங்கால் வலியோடு மாடிப்படி ஏறி வர்றீங்க?'' என்றாள், அகிலா.
''இப்ப எப்படிக்கா இருக்கு... தலைவலி பரவாயில்லையா?'' என்றாள், அனு.
''ஏய் மக்கு, எனக்கு ஏதுமில்லை. உனக்காக தான் இந்த நாடகம்,'' என சொல்லி சிரித்தாள், அகிலா.
''என்னக்கா சொல்ற...''
''இந்த வீட்டில் யாரும் என்னை மனுஷியாக மதிக்கலை, வேலை வாங்கறாங்க. அது தப்புன்னு உனக்கு புரிய வைக்க, உடம்பு சரியில்லாதது போல நடித்தேன். இது என் குடும்பம், அனு. இவங்கெல்லாம் எனக்கான உறவுகள்.
''அஞ்சு விரலும் ஒன்றாக இருப்பதில்லையே. அதுபோல தான் மனிதர்களின் குணங்களும். அவங்களையெல்லாம், அன்போடு நம் உறவுகளாக ஏத்துக்கும்போது, மனதில் எந்த பாகுபாடும் வராது. என் குடும்பத்துக்காக செய்யறேன்கிற எண்ணம் தான் இருக்கும். வித்தியாசப்படுத்தி பார்க்கும் போது தான் எல்லாம் தப்பா தெரியும்.
''இப்ப பாரு, எனக்கு உடம்பு சரியில்லைன்னதும், குடும்பமே கவலைப்படுது. இதுதான் யதார்த்தம். இப்ப புரியுதா, நான் இங்க என் உறவுகளோடு சந்தோஷமாக இருக்கேன்.
''உன்னால், என் நாத்தனாருக்கு இன்னைக்கு செய்து தரேன்னு சொன்ன மட்டன் பிரியாணி செய்ய முடியாமல் போச்சு,'' சிரித்தபடியே தங்கையின் தலையில் செல்லமாக குட்டினாள், அகிலா.
ஊருக்கு திரும்பினாள், அனு.
''அம்மா... உன் மகள் ரொம்பவே சந்தோஷமாக இருக்கா. அக்காவுக்கு குடும்பம்ன்னா என்னன்னு நல்லாவே தெரிஞ்சிருக்கு. நீ அவளை நினைச்சு துளியும் கவலைப்பட வேண்டாம்,'' என்ற அனுவை திருப்தியோடு பார்த்தாள், அம்மா.
பரிமளா ராஜேந்திரன்
