தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், அரசு துறையில் உயர் பதவியில் இருக்கிறேன். திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். என் மனைவியால், எனக்கு எப்போதுமே பிரச்னை தான்.

அவள் எப்போதும், யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பதும், தன்னை சோகமாக வைத்துக் கொள்வதிலும் அலாதி பிரியமுள்ளவள்.

நான், அதற்கு நேர் மாறாக எல்லாருடனும் அன்பாகவும், உதவி செய்யும் எண்ணத்துடனும், அமைதியாகவும், எளிமையாகவும் பழகக் கூடியவன். இது, என் மனைவிக்கு அறவே பிடிக்கவில்லை.

அதை காரணம் காட்டியே சண்டை போடுவாள். எந்த காரணமும் கிடைக்கா விட்டால், நான் துாங்கிய பின், என் மொபைல் போனை இரவு முழுவதும் ஆராய்வாள்.

நள்ளிரவிலோ, காலை எழுந்த உடனோ, 'இது யாருடைய எண், ஆணா - பெண்ணா, என்ன விஷயமாக கூப்பிட்டனர்... அவர்களுக்கெல்லாம் நீங்கள் ஏன் உதவி செய்கிறீர்கள்...' என்று கேட்டு, துளைத்து எடுப்பாள்.

பெண்களின் எண்கள் என்றால், அவர்களுடன் தவறான தொடர்பு வைத்துள்ளதாக குறிப்பிட்டு சண்டை போடுவாள். அவ்வாறு வந்த பல எண்களை தனியாக குறித்து வைத்து, அவர்களுக்கு போன் செய்து, என்னை கேவலப்படுத்தி, சந்தோஷப்படுவாள்.

இதனால், எனக்கு, அலுவலகத்திலும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் அவமானமாகி விட்டது. என் பதவிக்கு உண்டான மரியாதை குறைந்து, நல்ல நண்பர்கள் பலரை இழந்தேன்.

ஆரம்ப காலத்தில், கீழ் நிலை பதவி, குறைந்த வருவாய் மற்றும் வாடகை வீட்டில் குடியிருந்தபோது, சிறு சிறு சண்டைகளில் காலம் ஓடிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், குடும்பத்தின் வளர்ச்சி, கவுரவத்திற்காக, வங்கி கடன் பெற்று, வீடு, வாகனம் என வாங்கினேன்.

இந்த வளர்ச்சி, என் மனைவிக்கு, தான் ஒரு பெரிய புள்ளி என்ற தலைக்கணத்தை கூட்டி விட்டது. எல்லாம் தன்னால் தான் வந்து விட்டதாக நினைத்து, குழந்தைகளிடமும் என்னை பற்றி மட்டமாக கூறி, மரியாதையில்லாமல் நடக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டாள்.

தன் குடும்பத்தினரிடமும் சண்டை போடுவாள். பின், நான் தலையிட்டு, படிப்படியாக பேசி, சமாதானம் செய்து வைப்பேன். சில நாட்களில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடும்.

அடிக்கடி நள்ளிரவில் என்னுடன் சண்டை போட்டு, தாலியை கழற்றி வைத்து விட்டு, மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து அவளை நான் சமாதானப்படுத்துவதும், என்னை, ஒருமையில், 'வாடா... போடா...' என பேசுவதும், வழக்கமான ஒன்றாகி விட்டது.

இருந்தாலும், நானும் மனம் தளராமல், குடும்ப ஒற்றுமைக்காகவும், குழந்தைகளுக்காகவும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஊட்டி, கொடைக்கானல் என, சுற்றுலா அழைத்து செல்வேன். அங்கும் அவள் சண்டை போட்டு, துன்பச் சுற்றுலாவாக மாற்றுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, நாங்கள் இருவரும், ஒரு நண்பர் மூலம், மனநல மருத்துவரை அணுகி, மருத்துவ சிகிச்சை பெற்றோம். அப்போது, அவளது மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், சில நாட்களில், அவள் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி, மீண்டும் சண்டை போட ஆரம்பித்து, பழைய நிலைக்கே வந்து விட்டாள். என் மொபைல் போனில், 'லொக்கேஷன்' மூலம் நான் எங்கே செல்கிறேன் என்பதை ஆராய்ச்சி செய்வதும், எனக்கு எந்த எண்ணிலிருந்து போன் வந்தாலும் அதை, 'ஸ்பீக்கரில்' போட்டு பேச சொல்வதும் வழக்கமாகி விட்டது.

சனி, ஞாயிறு விடுப்பு நாட்களில் கூட, எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். பல நல்ல நண்பர்களை முற்றிலும் இழந்து விட்டேன்.

பணியில் இருக்கும்போதே, இந்த அளவுக்கு மன உளைச்சல் கொடுத்தால், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தால், என்ன நடக்குமோ என்ற கவலையுடன் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில், நான் நிம்மதியாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும். நல்ல தீர்வு சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.



— இப்படிக்கு,

உங்கள் மகன்.


அன்பு சகோதரருக்கு —

உங்கள் மனைவியை, சந்தேகப் பிசாசாய் சித்தரித்து காட்டுவதில் குரூர மகிழ்ச்சி அடைகிறீர்களோ என்று தோன்றுகிறது. சரி... அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம்...

மனைவி சந்தேகப்படும் எண்களுடன் பேசாதீர்கள். அந்த எண்களிலிருந்து வரும் அழைப்புகளை தடை செய்யுங்கள். இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 5:00 வரை, உங்கள் மொபைல் போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்யுங்கள். பேசும் பெண்களுக்கு உதவி செய்ய, இறக்கை கட்டி பறக்காதீர்கள்.

உறவினர், நண்பர் மத்தியில், மனைவி உங்களை, 'வாடா போடா...' என அழைத்தால், 'பொது இடத்தில் கூப்பிடாதே; தனியறையில் ஏக வசனம் பேசிக் கொள்; ஆயிரம் வசவு வார்த்தைகளை கொட்டு...' என பேசி, அவளின் கொதி நிலையை குறையுங்கள்.

உங்கள் மனைவி, பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, சில நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம். ஒரு நாளின், 24 மணிநேரமும், ஒரு பெண்ணை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தால், அவள், ரணகள ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள். அப்படித்தான் உங்கள் மனைவியும்.

மனைவியுடன் வாரம் ஒரு முறை, தாம்பத்யம் வைத்துக் கொள்ளுங்கள். பரஸ்பர திருப்தி, கணவன் - மனைவி உறவை மேம்படுத்தும். மனைவியின் குறைகளை பெரிதாக்காமலும், பிற பெண்களிடம் கூறி அனுதாபமும் பெற முயற்சிக்காதீர்கள்.

உறவினர் நட்பு வட்டத்தில், மனைவியை கண்ணியப்படுத்துங்கள். மொபைல் போனுக்கு அடிமை ஆகாதீர்கள். அலுவலகம் நேரம் தவிர, மீதி நேரங்களில் அதை கிடப்பில் போடுங்கள்.

வார விடுமுறை நாட்களில், மனைவி விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பணி ஓய்வுக்கு பிறகு எதாவது ஒரு பகுதிநேர பணிக்கு போங்கள். மனைவியுடனான பழைய இனிமையான நிகழ்வுகளை அசை போட்டு, அவள் மீதான வெறுப்பை முற்றிலும் புறக்கணியுங்கள்.

உங்கள் மனைவிக்கு மிகமிக பிடித்தவை எவை என்று, அவள் வீட்டார் யாரிடமாவது கேட்டு தெரிந்து, அதை நிறைவேற்றி குதுாகலப்படுத்துங்கள்.

சொந்த வீடு கட்டிய சாதனையை மனைவிக்கு மடை மாற்றுங்கள். 'ஈகோ' தள்ளுமுள்ளு ஒழியும். மனைவி சண்டை போடும் சூழ்நிலை பலுான்களை ஊசி வைத்து, 'பஞ்சர்' ஆக்குங்கள்.

— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us