தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லை ஜெயந்தா எழுதிய, , 'வாலிப வாலி' நுாலிலிருந்து:

வாலி சொல்கிறார்:


அடிப்படையில், நான் ஒரு நாடகக்காரன். திருச்சியில் நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். நாடகத்துல என்னுடன் மனோரமா நடிச்சிருக்காங்க.

ஒருநாள், பாலசந்தர், எனக்கு போன் பண்ணி, 'நான் படம் எடுக்கிறேன். அதுல நீங்க நடிக்கணும்...' என்றார்.

'அடுத்த வாரம், போன் பண்ணுங்க நான் சொல்றேன்...' என்றேன்.

அடுத்த வாரம் போன் பண்ணின உடனே, 'நான் நடிக்கிறேன்...' என, சொல்லிட்டேன்.

'என்ன ஓய்... போன வாரம் கேட்டபோது, அப்புறம் சொல்றேன்னு சொன்னீரு. அது என்ன பந்தா?' என்றார், பாலசந்தர்.

'பந்தா ஒண்ணும் இல்ல. நான் தான் நடிக்கணும்ன்ற எண்ணம் உங்க மனசுல ஒரு வாரமாவது இருக்குதான்னு பார்த்தேன். அதனால தான் அப்படி சொன்னேன்...' என்றேன்.

பொய்க்கால் குதிரை படம் ஷூட்டிங் போனேன். நடிப்பு சரியா வரல. உடனே பாலசந்தர்கிட்ட, 'நான் பாட்டு மட்டும் எழுதிக்கிறேன். நடிப்பெல்லாம் வரலை...' என்றேன்.

'நாளைக்கு வாங்க. உங்களுக்கு நடிப்பு வரலைன்னு எனக்கு தோணுச்சுன்னா, நான், உங்களை விட்டுடறேன்...' என்றார், பாலசந்தர்.

அடுத்த நாள் ஷூட்டிங்ல, 'ரீ - டேக்' வாங்காம நடிச்சேன். பாலசந்தர், மானிட்டர் கூட பார்க்கல. படம், 15 ஆயிரம் அடின்னா, நான் அதுல, 10 ஆயிரம் அடி நடிச்சு இருந்தேன்.

ஏன் இத நான் சொல்றேன்னா... எனக்கு நடிப்பு வரலைன்னு, என் தன்மானத்துல கை வைச்சுட்டாரு, பாலசந்தர். இப்படித்தான் நான் நடிகன் ஆனேன். தமிழிலும், ஹிந்தியிலும், ஹேராம் படத்துல நான் நடிச்சிருக்கேன்.

எந்த துறையிலும் உங்க ஆர்வத்தை பொறுத்துதான், எல்லாம் இருக்கு.

வார்தா அருகில், ஒரு ஆசிரமத்தை அமைத்து, வாழ்ந்து கொண்டிருந்தார், வினோபா.

அப்போதைய இந்திய குடியரசு தலைவர், ராதாகிருஷ்ணன், ஒருசமயம், வினோபாவை சந்திக்க, அந்த ஆசிரமத்திற்கு சென்றார்.

அந்த வயதிலும், வெயிலில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார், வினோபா.

இதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, 'இந்த வயதிலும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் என்ன...' என்று கேட்டார், ராதாகிருஷ்ணன்.

'என் மூன்று வேளை சாப்பாட்டிற்காக நான் உழைத்து தான் ஆகவேண்டும். தினசரி நான் மூன்று மணி நேரம் ஏதாவது வேலைகளை செய்து விடுகிறேன். உழைக்காமல் என்னால் சாப்பிட முடியாது...' என்றார், வினோபா.

அவரின் பதிலை கேட்டு, ஆச்சரியமடைந்த ராதாகிருஷ்ணன், 'உழைப்பவர்கள் ஒவ்வொரு நொடியும் உயர்ந்து கொண்டே தான் இருப்பர்...' என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மூத்த மகன், ராபர்ட். ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற ராபர்ட்டுக்கு, ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. தந்தையிடம் சென்று, தன் ராணுவ ஆசையை தெரிவித்தார்.

'முயற்சி செய்து பார்க்கலாம்...' என்றார், லிங்கன்.

அப்போது அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்த கிராண்ட் என்பவருக்கு, 'என் மகன் ராபர்ட், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறான். அவனுக்கு ஏற்ற பணி ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

'இதை, ஒரு ஜனாதிபதியாக கேட்கவில்லை. மாறாக, தங்களை நண்பனாக நினைத்து கேட்கிறேன்...' என, கடிதம் எழுதினார். நேர்மையானவர்கள், மக்களின் மனதில் நிரந்தரமாய் வாழ்வர் என்பதற்கு, ஆபிரகாம் லிங்கன் ஒரு எடுத்துக்காட்டு.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us