தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வழி காட்டும் மகான்கள்!

வழி காட்டும் மகான்கள்!

வழி காட்டும் மகான்கள்!


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒடிசா மாநிலத்திலுள்ள, ஜகன்னாத புரி எனும் பூரி ஜகன்னாதத்தில் கோவில் கொண்டிருக்கும் பகவானிடம், எல்லையில்லா பக்தி கொண்டவர், ஜகன்னாத தாசர்.

கோவிலின் மேற்கு பகுதியில், ஒரு மடத்தில் இருந்தபடி, தினமும், தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு, நோய் நீக்கி, -துயர் தீர்த்துக் கொண்டிருந்தார், தாசர்.

'சுவாமி, நீங்கள் செய்யும் இந்த அரும்பெரும் செயல்களுக்கு, நாங்கள் என்ன கைமாறு செய்வோம்?' என்று புலம்பினர், பக்தர்கள்.

'நான் ஒன்றும் செய்யவில்லை. நாம் எல்லாருமே பகவானின் கைக்கருவிகள். என் மூலம் பகவான் அருள்புரிகிறார்; அவ்வளவு தான்...' என்று சொல்லி, அனுப்பி விட்டார், தாசர்.

மக்கள் மட்டுமல்ல, அப்போதைய அரசரான பிரதாப ருத்திரனும், தாசரிடம், பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.

தினமும் கோவில் வந்து பகவானைத் தரிசிக்கும் அரசர், கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள தாசரின் மடத்திற்கு சென்று, அவரை தரிசித்து, திரும்புவார்.

வழக்கம்போல் ஒருநாள் வந்த அரசர், அதிக அளவு சந்தனத்தை கொண்டு வந்து, தாசரிடம் சமர்ப்பித்து, 'சுவாமி, இதை பூஜைக்கு வைத்துக் கொள்ளுங்கள்...' என்று, வணங்கி விடை பெற்றார்.

அரசர் போன பின், அவர் கொடுத்த சந்தனத்தை எடுத்து, மடத்தின் சுவர்களில் பூசி விட்டார், தாசர்.

அந்த தகவல் அரசருக்கு எட்டியது, கோபம் தாங்கவில்லை.

உடனே மடத்திற்கு வந்து, 'பகவானுக்கென கொடுத்த சந்தனத்தை, இப்படி சுவர்களில் பூசி விட்டீர்களே...' என்று சொல்லி, வருத்தப்பட்டார்.

'ஓ... அதைக் கேட்கிறீர்களா... இன்று, தாங்கள் கோவிலுக்குப் போய், பகவான் ஜகன்னாதரை தரிசிக்கவில்லை போலிருக்கிறது...' என்றார்.

தாசரை வணங்கிய அரசர், உடனே கோவிலுக்கு போனார்.

அங்கே, ஜகன்னாதர், பலராமர், சுபத்ரா மூவரும், முழுமையான சந்தனக்காப்பில் காட்சி அளித்தனர்.

'தாசரின் மகிமை தெரியாமல் அவசரப்பட்டு விட்டேனே...' என்று திரும்பி வந்து, தாசரிடம் மன்னிப்பு கேட்டார், அரசர்.

அவரை வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார், தாசர்.

பதினைந்தாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, தாசர், சித்தி அடைந்தபோது, பல இடங்களில் காட்சியளித்த வரலாறுகள் உண்டு.

மகான்கள் ஒருபோதும் சித்து வேலை செய்பவர்களல்ல. அவர்கள் மூலமாக, தெய்வம் செயல்பட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டி நம்பிக்கை அளிக்கிறது.

- பி.என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து வகை எண்ணெய் கலந்து, விளக்கேற்றி பூஜை செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளை எளிதில் பெறலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us