தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 23 வயதுள்ள, கிராமத்தை சேர்ந்த பெண். பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரி படிப்புக்காக சென்னை வந்து, விடுதியில் சேர்ந்து படித்தேன். அப்போது, அறிமுகமானாள் என் தோழி.

நாங்கள் இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்த, அடுத்தடுத்த கிராமத்தில் பிறந்தவர்கள் என்ற தகுதி, எங்களை நெருங்கிய தோழிகளாக்கி விட்டது.

இருவருமே, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளோம். தோழியும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு. விவசாயம் செய்கிறார்.

ஒரே கல்லுாரியில், விடுதியில் ஒரே அறையில் தங்கி படித்தோம். படித்து முடித்ததும், பெண்கள் விடுதியில் தங்கி, வேலை தேடி வருகிறோம்.

எங்கு வேலை வாய்ப்பு பற்றி அறிந்தாலும், இருவரும் அந்த வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம்.

நேர்காணலுக்கு அழைப்பு வரும். இருவரும் கிளம்ப தயாராவோம். ஆனால், ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு காரணத்தால் நேர்காணலுக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் காலதாமதமாக்கி விடுவாள், தோழி.

சான்றிதழ்களை சரியாக எடுத்து வைத்துக் கொள்ள மாட்டாள் அல்லது நேர்காணலுக்கு வந்த அழைப்பு கடிதத்தை எங்கோ வைத்துவிட்டு, தேடிக் கொண்டிருப்பாள். ஏதாவது, 'பிரின்ட்' எடுக்க வேண்டியிருந்தால், முதலிலேயே எடுத்து வைக்க மாட்டாள். நான் எடுக்கும் போதும், என்னுடனும் வரமாட்டாள்.

நேர்காணலுக்கு செல்லும் வழியில் எங்காவது, 'பிரின்ட்' எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பாள். அதற்காக என்னையும் அழைத்து தெருத் தெருவாக அலைவாள். நேர்காணலுக்கு தாமதமாக போய், பல நல்ல வாய்ப்புகளை, என் தோழியால் இழந்தேன்.

கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு, ஆதரவாக இருக்க முடியவில்லையே என்று பரிதவிக்கிறேன். இப்படியே காலம் கடத்தினால், நல்ல வேலைக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்றும் பயப்படுகிறேன்.

பல ஆண்டுகள் பழகிய தோழி என்பதால், விட்டுக் கொடுக்கவும் மனம் வரவில்லை.

இப்போது நான் என்ன செய்யட்டும், அம்மா.

— இப்படிக்கு,உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

ஒரு இள வயது பெண்ணுக்கு, பல கெட்ட தோழிகளும், சில நல்ல தோழிகளும், சில பிளாடோனிக் ஆண் தோழர்களும் இருப்பர்.

உனக்கிருப்பது கெட்டத் தோழி. 'மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்குமாம்' என, கிராமத்து சொலவடை உண்டு.

உன் தோழி பொறுப்பில்லாத சோம்பேறி. எதிர்கால திட்டமும், அதற்கான உழைப்பும் இல்லாதவள்.

ஒரு கெட்ட ஆப்பிள், கூடையிலுள்ள அனைத்து ஆப்பிள்களையும் அழுக செய்து விடும்.

கெட்ட தோழியின் அருகாமை, எலிப்பொறியில் சிக்கிய உணர்வைத்தரும்.

உன்னுடைய வெற்றி, கெட்ட தோழிக்கு கசக்கும்.

கெட்ட தோழி சகவாசத்தால், உன் சக்தியும், உழைப்பும் விரயம் ஆகும்.

இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

உன் கெட்ட தோழியை கை கழுவிவிட்டு, வேறொரு பெண்கள் விடுதியில் தங்கு. அவளது மொபைல் எண்ணை, 'பிளாக்' செய். வேலைக்கு விண்ணப்பிப்பது, நேர்காணல்களில் கலந்து கொள்வது எல்லாவற்றையும் தனியாக செய்.

வேலை வாய்ப்பு செய்திகளை தோழிகள் வட்டத்தில், 'டமாரம்' அடிக்காதே.

கெட்ட தோழி, உன்னை நேரில் சந்தித்து, புதிய நடத்தைக்கு விளக்கம் கேட்டால் மழுப்பாதே.

'உனக்கும், எனக்கும் ஒத்து வரவில்லை. சில நாட்கள் பிரிந்து செயல்படுவோம். வாழ்த்துகள்...'- என, கை குலுக்கி விடை பெறு.

கெட்ட தோழி பற்றி தோழியர் வட்டாரத்தில் எதுவும் குறைகள் கூறாதே.

தன்னம்பிக்கையுடன் நேர்காணலுக்கு செல். வெற்றி உனக்கே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us