PUBLISHED ON : நவ 26, 2023

புக் அண்ட் பெட் ஹோட்டல்!
இந்த ஹோட்டலில் படிக்கவும் செய்யலாம்; படுத்தும் துாங்கலாம்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், சின் ஜுகு நகரத்தில் உள்ள இந்த ஹோட்டலின் பெரிய அறையில், 4,000க்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை எடுத்து படிக்கலாம். துாக்கம் வந்தால், படுத்து துாங்கலாம்.
உங்களை போன்ற மற்ற புத்தக பிரியர்களுடன் இணைந்தும் படிக்கலாம்; பேசலாம்.
கூடுதலாக சுவையான உணவு, ஒரிஜினல் பானங்கள் மற்றும் சுப்ரீம் காபி ஆகியவை, இந்த ஹோட்டலின் ஸ்பெஷல்; நியாயமான விலையில் கிடைக்கும்.
பி.என்.ஏ., ஹோட்டல்!
உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட, ஹோட்டல் இது. இந்த ஹோட்டலின் இரு அறைகள் ஸ்பெஷல். இந்த இரு அறைகளையும் வடிவமைத்தவர்கள், உள்ளூர் கலைஞர்கள்.
இதில், கட்டட வல்லுனர்கள் மற்றும் துணி வடிவமைப்பாளர்களும் அடக்கம். தங்குதல் மற்றும் இலவச காலை உணவு திட்டத்தில் இயங்கும் இந்த ஹோட்டலில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி, உள்ளூர் கலைஞர்களுக்கு வழங்கப்படும். இந்த ஹோட்டல், ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே, சுகி நாமி நகரத்தில், கொயின்ஜி கிட்டா பகுதியில் உள்ளது.
ஒன்பது மணி நேர ஒடிமாசி ஹோட்டல்!
ஜப்பானின் சியோடாசிடி ஒடிமாசி பகுதியில் உள்ள இந்த ஹோட்டலின் அறைகளில் சுற்றுலா பயணியர் சுமைகளை வைக்க, லாக்கர் வசதியுடன் வாடகைக்கு கிடைக்கும். குறைந்தபட்ச கட்டணத்தில், இங்குள்ள அறைகளில் ஒன்பது மணி நேரம் தங்கி, படுத்து, 'ரெஸ்ட்' எடுத்து செல்ல முடியும்.
இந்த ஹோட்டலில் ஷாம்பு, கண்டிஷனர், பாடி வாஷ் எதுவும் பயன்படுத்த அனுமதி இல்லை. ஹோட்டல் முழுவதும் எல்.இ.டி., பல்பு தான் எரியும்.
ஹென்னா ஹோட்டல்!
ஜப்பானில் நாகாசாகி நகரத்தில் அமைந்துள்ள, உலகின் முதல் ரோபோ ஊழியர்களை கொண்ட ஹோட்டல் இது. இதற்காகவே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. தற்போது, ரோபோக்களுடன், மனிதர்களும் பணி செய்கின்றனர். சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் இயங்கும் ஹோட்டல் இது.
மர வீடு ஹோட்டல்!
ஜப்பானில் ஒகினாவா நகரில் உள்ளது, இந்த ஹோட்டல். இரு மரங்களின் மீது, தரையிலிருந்து, 2 மீட்டர் உயரத்தில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இங்கு, சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்துகின்றனர். இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு, இலவசமாக காடு சுற்றி காண்பிக்கப்படும்.
வியாபாரத்தை பெருக்கவும், சுற்றுலா பயணியரை கவரவும் எப்படியெல்லாம் சிந்திக்கின்றனர்.
- ராஜிராதா
