PUBLISHED ON : நவ 26, 2023

தமிழ் மீதுள்ள அளவற்ற பற்று காரணமாக, கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள ஒரே தமிழ் பள்ளிக்கூடத்தை காப்பாற்றுவதற்காக, போராடி வருகிறார், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, வள்ளி.
கோலார் தங்க வயல் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான வள்ளி, அங்குள்ள தமிழ் வழிக்கல்வியில் தான் கல்லுாரி வரைப் படித்தார். பின், ஆசிரியர் தகுதிப்படிப்பு முடித்து, பள்ளி ஆசிரியரானார்.
மைசூரூ வி.வி.சாலையில் உள்ள, தமிழ் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக, 22 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, இப்போது தலைமை ஆசிரியையாக உள்ளார்.
மாடு கட்டும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கிட்டங்கி போலவும் பாழடைந்து கிடந்த இந்தப் பள்ளியை, பல சிரமங்களுக்கிடையே சீரமைத்துள்ளார். உள்ளூர் தமிழ் சங்கத்தின் உதவியுடன், பள்ளியை புதுப்பித்து, கட்டடத்திற்கு பொலிவு ஏற்படுத்தியுள்ளார்.
கன்னட பள்ளிகளுக்கு வழங்குவது போல, மாணவர்களுக்கு, மதிய உணவு, ரொட்டி, பால், முட்டை இங்கேயும் வழங்க வேண்டும் என, அரசிடம் போராடி பெற்றுள்ளார்.
இங்கு படிப்பவர்கள் எல்லாம், ஏழை குடும்பத்து குழந்தைகள் தான். இவர்களால் சீருடை கூட வாங்க முடியாத நிலை. சீருடை வாங்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, தானே செலவழித்து சீருடை வாங்கி கொடுத்துள்ளார். தனியார் பள்ளி மாணவர்கள் போல ஷூ, டை, சாக்ஸ் அணியச் செய்துள்ளார்.
காவிரி பிரச்னைக்கு பிறகு, தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளை ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்கள் வருகை குறைவு என, காரணம் காட்டி, மறைமுகமாக மூடி வருகிறது, அரசு. இல்லையேல், கன்னட மொழி வழிக்கல்விக் கூடமாக மாற்றி வருகிறது.
இந்த பள்ளியையும் அப்படி மூட எடுத்த முயற்சிகளை முறியடித்து, பள்ளியின் காவல் தெய்வமாக இருக்கிறார், வள்ளி.
தமிழர்கள் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று, அங்குள்ள குடும்பத்தினரிடம் பேசி, மாணவர் சேர்க்கைக்கு பெரும் முயற்சி எடுக்கிறார்.
மைசூரில் பல ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தாலும், 90 சதவீதம் பேருக்கு தமிழ் பேச வருமே தவிர, எழுதப் படிக்கத் தெரியாது.
'நாங்களோ, எங்கள் பிள்ளைகளோ, தமிழ் படித்து என்னவாகப் போகிறது...' என்று கேட்பர்.
'பிள்ளைகள் மட்டுமல்ல, அப்பா - அம்மாக்கள் மற்றும் தாத்தா - பாட்டிகளும் கூட, தமிழ் கற்றுக் கொள்ளுங்கள். அது நம் தாய்மொழி...' என்று கூறி, தமிழ் சங்கத்தின் வாயிலாக, மாலை நேர இலவச தமிழ்ப்பள்ளியும் நடத்தி வருகிறார்.
'எங்கள் பள்ளியில் படிப்பதால் தாய் மொழியான தமிழ், உள்ளூர் மொழியான கன்னடம் மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். கூடவே ஹிந்தியும் கற்றுத் தருகிறேன்...' என, தன் சொந்த முயற்சியில் ஹிந்தி மற்றும் யோகா போன்ற ஆரோக்கியமான விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, இருபாலர் படிக்கும் இப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 27. வள்ளியையும் சேர்த்து மூன்று ஆசிரியைகள் உள்ளனர்.
மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, நடுநிலைப் பள்ளியாக்க வேண்டும் என்பது தான், வள்ளியின் ஒரே லட்சியம்.
அவரது லட்சியம் ஈடேற வாழ்த்துவோம்.
எல். முருகராஜ்
