
மதிப்பிற்குரிய அம்மாவுக்கு —
நான் ஒரு முதுகலைப் பட்டதாரியும், நல்ல, மதிப்பான உத்தியோகத்திலும் உள்ள, கல்யாண வயதை அடைந்துவிட்ட பெண். என் பெற்றோர் நல்ல வசதியும், சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் உள்ளவர்கள். நான் இளங்கலை படிக்கும் போது, ஒரு மாணவனிடம் பழகி, மனதைப் பறி கொடுத்தேன். முதுகலைக்கு நாங்கள் வெவ்வேறு கல்லூரிக்குச் சென்று விட்டதால், எங்கள் பழக்கம் மொபைல் போன் மூலம் தொடர்ந்தது. மற்றபடி, எங்களிடம் எவ்வித தவறான பழக்கமும் இல்லை. மொபைல் போன் தொடர்பு, எங்கள் பெற்றோருக்கு தெரிந்து, அவர்கள் கண்டித்தனர். அதற்கு, எங்கள் குடும்ப வழக்கப்படி, 'எங்கள் இருவரின் ஜாதகமும் பொருந்தி இருந்தாலும், உங்கள் சம்மதமும் இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்...' எனக் கூறியிருந்தேன்.
என் படிப்பு முடிந்து, நல்ல வேலையும் கிடைத்த பின், எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. நான் பழகிய அந்தப் பையனின் ஜாதகத்தையும் என் வீட்டில் பார்த்தனர்; அது, என் ஜாதகத்துடன் பொருந்தவில்லை. மீறி மணம் செய்தால், 'உங்கள் வாழ்க்கை நிம்மதியில்லாமலும், நீங்கள் பிரியவும் வாய்ப்புள்ளது...' என, ஜோதிடர்கள் கூறுகின்றனர். அவரது குடும்பம், எங்கள் குடும்பத்தை விட வசதியில் குறைந்தது. சொத்திற்காக ஒரு வழக்கு, பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. என் பெற்றோர் தீர விசாரித்ததில், 'அந்தக் குடும்பத்துடன் நம் சம்பந்தம் வேண்டாம்...' எனக் கூறுகின்றனர்.
என்னால் அந்த தோழனையும் மறக்க முடியவில்லை; என் வாழ்க்கையில் அக்கறையுள்ள என் பெற்றோரையும் இழக்க விரும்பவில்லை. நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். எனவே, நான் எவ்வித முடிவு எடுப்பது என்பது பற்றி, தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் அபிமான ரசிகை.
அன்புள்ள மகளுக்கு —
தற்சமயம், உன் காதலன் உயர்கல்வி பயில்கிறானா அல்லது உன்னைப் போல ஏதாவது பணி செய்கிறானா என்ற விவரத்தை நீ தெரிவிக்கவில்லை. உங்களிருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்ததிலிருந்து, நீங்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது.
இளங்கலை படிப்பு, மூன்றாண்டுகள். அச்சமயம், அவனை, 20 - 30 தடவை பார்த்திருப்பாய், ஏழெட்டு தடவை பேசியிருப்பாய். காதலிக்கும் போது இதயம் தேவைக்கு அதிகமாய் துடிக்கிறது; மூளையோ செயல்பாட்டை சுருக்கிக் கொள்கிறது. அவனது புறத்தோற்றம் உனக்கு தெரியும்; அவனது அகத்தோற்றமும், குடும்பப் பின்னணியும் உனக்கு தெரியவே தெரியாது. இளங்கலை படிப்புக்குப் பின் நீயும், அவனும் மொபைல் போனில்தான் பேசிக் கொள்கிறீர்கள். இந்த, மூன்று வருடத்தில், அவனுள்ளும், அவனது குடும்பத்துக்குள்ளும் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பது உனக்குத் தெரியாது. உங்களது காதலில் ஊறு விளைவிக்கும் காரணி, 99 சதவீதம் உள்ளது.
உன் கையெழுத்தையும், உன் எழுத்து நடையையும் அவதானித்தேன். நீ ஒரு மென்மையான பெண். யாருக்கும் கனவிலும் தீங்கு நினையாத பெண். நம்பிக்கைத் துரோகம் பிடிக்காத பெண். பிறரை சங்கடப்படுத்தாமல், உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பெண். நீ வீட்டுக்கு ஒரே பெண் என யூகிக்கிறேன். அதனால், உன் பெற்றோர், உன் எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலைப்படுகின்றனர்.
உன் பெற்றோர் நல்ல வசதியும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் உள்ளவர்கள். ஆகையால், நீ ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பெண்; உன் காதலன் லோயர் மிடில் கிளாஸ் பையன். காதலுக்கு பணம் ஒரு பொருட்டல்ல; ஆனால், திருமணத்திற்கு பணம் பிரதானம். திருமணத்திற்கு பின், நீ சில படிகள் இறங்கிப் போய் அவனுடன் வாழ வேண்டும். இப்போதைய மனநிலையில் அது ஒரு பெரிய விஷயமில்லை என்று தோன்றும். மணவாழ்க்கையின் போது, சிறு அதிருப்தி பூத்தாலும், நிம்மதி குலைந்து விடும்.
உன் காதலனின் குடும்பத்தில் சொத்திற்காக, ஒரு உரிமையியல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என எழுதியிருக்கிறாய். சில வழக்குகளில் வெட்டுக் குத்துகளும், தொடர் கொலைகளும் நடக்கின்றன. கொல்லும் நிலையில் இருக்கிறானோ உன் காதலன் அல்லது கொல்லப்படும் நிலையில் இருக்கிறானோ - கடவுளுக்குத்தான் தெரியும்.
உன் பெற்றோர் உன் காதலனைப் பற்றியும், அவன் குடும்பத்தாரை பற்றியும் தீர விசாரித்து வந்து, அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வேண்டாம் என கூறுகின்றனர். காதல் என்றதும், கண்ணை மூடிக் கொண்டு, வேண்டாம் என சொல்லாமல், உன் பெற்றோர் மாப்பிள்ளை தரப்பை தீர விசாரித்து வருவது, அவர்களை பொறுப்புள்ள பெற்றோராக காட்டுகிறது.
'ஜாதகப் பொருத்தமில்லை...' என, உன் பெற்றோர் கூறுவது பொய்யாக இருக்கலாம். மற்ற விஷயங்கள் இட்டுக் கட்டப்பட்டவை அல்ல. உன் பெற்றோரின் அபிப்ராயத்தை, காதலுக்கு எதிரான, பணக்கார பெற்றோரின் சூழ்ச்சி என கருதி விட முடியாது.
உனக்கும், உன் காதலனுக்கும் இடையே மொபைல் போன் பேச்சை தவிர, வேறெதுவும் இல்லை என்பது ஆறுதல் விஷயம். நீங்கள் இருவரும் பிரிந்தால் கூட, ஒருவரையொருவர் மோசம் செய்து விட்டார் என்ற வசவு இருக்காது. 'காதலித்தோம்... புறக் காரணிகள் நம் திருமணத்தை அனுமதிக்கவில்லை, பிரிந்தோம், எங்கிருந்தாலும் வாழ்க...' என, பரஸ்பரம் வாழ்த்துவோம் என்ற யதார்த்தம் மட்டுமே மிஞ்சும்.
உன் மொபைல் எண்ணை மாற்றி விடு; தோழனை மறந்து விடு. முழுவதும் மறக்க ஒரு வருட காலம் எடுத்துக் கொள். இடைப்பட்ட காலத்தில், காதலனின் உரிமையியல் வழக்கு காதலனுக்கு சார்பாக முடிந்தாலோ, காதலனின் குடும்பத்தார் பற்றிய உன் பெற்றோரின் விசாரிப்பு முழு பொய் என்று தெரிந்தாலோ, உன் முடிவை மறுபரிசீலனை செய்யலாம். பதறாத காரியம் சிதறாது மகளே.
கையில் உள்ளது கண்ணாடிக் கல்லா, வைரக் கல்லா என தெரியாத போது, முழு வாழ்க்கையை எப்படி பணயம் வைப்பது?
நீ யாரை மணந்தாலும், நீயும் மகிழ்ச்சியாக இருந்து, உனக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவனையும் மகிழ்ச்சி படுத்துவாய்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***