PUBLISHED ON : செப் 11, 2011

எங்கு திரும்பினாலும், 'டிராபிக் ஜாம்' என கவலைப்படுகிறீர்களா? இனி, அந்த கவலை வேண்டாம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கா மல், பறந்து செல்ல தயாராகி வருகிறது, 'பறக்கும் பைக்!' ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மல்லோய். ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்து, ஓய்வு பெற்றவர். டிராபிக் ஜாம் பிரச்னையில் அடிக்கடி மாட்டி, படாதபாடு பட்டார். வெறுத்துப் போன அவர், இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொட்டி, இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'ரோட்டில் சென்றால்தானே டிராபிக் ஜாம் ஏற்படும். ரோட்டை விட்டு, சிறிது உயரத்தில் பறந்து சென்றால், எங்கே வேண்டுமானாலும் செல்ல லாம். யாருக்கும் தொந்தரவும் வராது...' என முடிவுக்கு வந்தார். விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ செல்லலாம் என்றால், அதற்கு என தனியாக ஒரு பெரிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும். நினைத்த இடத்தில் கீழே இறங்க முடியாது. இந்த பிரச்னைகள் எல்லாம் இல்லாத ஒரு வாகனம் வேண்டும் என்றால் அது, பைக்தான் என்ற முடிவுக்கு வந்தார் இவர்.
ரிட்டர்ன் ஆப் த ஜேடி, பேக் டூ த பியூச்சர் போன்ற, பிரபல ஆங்கில சினிமா படங்களில் பறக்கும் பைக் மற்றும் கார்கள் இடம் பெற்றிருந்தன. அந்த சினிமா படங்களைப் பார்த்து கவரப்பட்ட கிறிஸ்டோபர், தானும் ஒரு பறக்கும் பைக்கை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
ஹெலிகாப்டர் தத்துவத்தை மையமாகக் கொண்டு, இவரே ஒரு பைக்கை வடிவமைத்தார். 'ஹோவர்பைக்' என பெயரிடப் பட்டுள்ள அந்த பைக், மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் செல்லும், 10 ஆயிரம் அடி உயரம் வரை மேலே எழும்பி பறக்கும். பி.எம்.டபிள்யூ., கார் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை டேங்க்கில் பெட்ரோலை நிரப்பினால், 45 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கலாம். கிட்டத்தட்ட, 140 கி.மீ., தூரம் சென்று விடலாம். இந்த பறக்கும் பைக் எடை, 270 கிலோ. 33 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, இந்த பைக் தயாரிக்கப் பட்டுள்ளது. சோதனை ஓட்டம் மட்டுமே தற்போது நடத்தப்பட்டுள்ளது. விரைவில், வானில் பறந்து, இந்த பைக்கை சோதித்து பார்க்க உள்ளனர்.
இந்த பைக், சோதனையில் வெற்றி பெற்று விட்டால், இதை வர்த்தக ரீதியில் தயாரிக்க அனுமதி தரப்படும். அப்போது, இதன் விலையும் குறைந்து விடும். எனினும், இந்த பைக்கில் பறக்க பைலட் லைசென்ஸ் வாங்க வேண்டியிருக்கும். கிறிஸ்டோபரின் கனவு நனவாகுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
***
சாம் கிறிஸ்ட்