PUBLISHED ON : மே 06, 2018

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர், ஓம் பிரகாஷ் மெரா. நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இவர், ரசிகன் என்ற எல்லையையும் தாண்டி, அவரை, மானசீக மனைவியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில், ஸ்ரீதேவி மரணமடைய, நிலைகுலைந்து போன ஓம் பிரகாஷ், துக்கம் தாளாமல், பட்டினி கிடந்துள்ளார். இது குறித்து அவர், 'ஸ்ரீதேவியை என் மனைவியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறேன்; அவரை நேரில் சந்திக்க பல முறை முயன்றும் முடியவில்லை. இதுவரை, அவருக்கு, முவாயிரம் கடிதங்கள் எழுதியுள்ளேன்...' என்று கூறும் ஓம் பிரகாஷ், தன் தாய் இறந்த போது கூட, மொட்டை அடித்ததில்லை; ஸ்ரீதேவிக்காக மொட்டை அடித்து, ஈமக் கடன்களை செய்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட, 2002ல் வாக்காளர் அடையாள அட்டையில், தன் மனைவியாக ஸ்ரீதேவியின் பெயரை, இவர் குறிப்பிட்டுள்ளது தான், 'ஹைலைட்!'
கிறுக்கர்கள் பலவிதம்; அதில், இதுவும் ஒரு விதம் என, நினைக்கிறீர்களா!
— ஜோல்னாபையன்.
