PUBLISHED ON : ஜன 15, 2023

''சாதாரண கத்தரிக்காய், இதை கூட உங்களால கரெக்ட்டா வாங்கிட்டு வர முடியலை. இன்றைய விலைக்கு கிலோ, 40 ரூபா, ரெண்டு கிலோ, 80 ரூபாய். நஷ்டம் யாருக்கு?
''கஷ்டப்பட்டு உழைச்சா, அதோட அருமை தெரியும். ஓசி சோறு தானே, அதான் கடைக்காரன் கொடுத்ததை, வாங்கிட்டு வந்துருக்கீங்க...'' பக்கத்து வீட்டு கணேசனின் மருமகள் விமலாவின் குரல், தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த, பரந்தாமனுக்கு கேட்டது.
தினசரி வசவு தான். திருமணமாகி வந்த மூன்று மாதம், ஒழுங்காக இருந்தாள், விமலா. அதன்பின், தினம் அவரை அவமானப்படுத்தி, வார்த்தைகளால் குதறி எடுப்பாள். மாமனார் என்ற மரியாதை சுத்தமாக இருக்காது.
கணேசனிடம், 'எதுக்குப்பா இப்படி மரியாதை இல்லாம பேசறா, திட்டறா, அவமானப்படுத்தறா... நீயும் கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கே... வேற யாராவதா இருந்தா, 'போடி நீயுமாச்சு, உன் வீடுமாச்சு'ன்னு கிளம்பி இருப்பாங்க...' என்பார், பரந்தாமன்.
எத்தனை முறை கேட்டாலும், கணேசனிடம் இருந்து சிரிப்பு தான் பதிலாக வரும். அலுத்து போய் கேட்பதையே விட்டு விட்டார், பரந்தாமன்.
அவள் குரல் குறையவுமில்லை, அடங்கின மாதிரியும் இல்லை.
''நேற்று, நான் இல்லாத சமயத்துல, சாப்பிட போய், பாத்திரத்தை கீழ போட்டு, சாதமெல்லாம் கொட்டி, சாம்பாரையும் கீழ ஊத்தி வச்சிருந்தாரு. வேஸ்ட்டாக்கி, வீட்டையும் சுத்தம் பண்ணல.
''சும்மா இருக்கற மனுஷனுக்கு, அப்படி என்ன தன்னையும் மீறின பசி. நாக்கை அடக்க முடியாதா, சோத்துக்கு இப்படியா ஒரு மனுஷன் அலைவான்?''
திண்ணையிலிருந்த பரந்தாமனுக்கு, மேற்கொண்டு வசவுகளை கேட்க முடியாமல், காதுகளைப் பொத்திக் கொண்டார்.
ஏகாந்தமாக வானத்தை வெறித்தபடி இருந்தது, கணேசனின் கண்கள். தனக்கும், வசவுகளுக்கும் சம்பந்தம் இல்லாது, யாரையோ திட்டுவதை போல கொஞ்சமும் வருத்தமோ, கோபமோ இல்லாமல், சிரித்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார், கணேசன்.
'என்ன மனுஷன் இவர், இவ்வளவு மோசமா திட்டுறா, கொஞ்சமாச்சும் கோபம் வராதா, சிரிச்சுட்டு இருக்காரே...' மனதில் ஆச்சரியமாக தோன்றிய அதே வினாடி, விமலா மேல் கோபம் கோபமாக வந்தது. 'பொம்பளையா இவ, அப்படி என்ன அவர் பெரிய தப்பு பண்ணிட்டார்?'
பக்கத்து வீடு மட்டுமல்ல, பரந்தாமனின் குடும்ப நண்பர் தான், கணேசன். அவளிடம் போய் கேட்கவும் முடியாது.
ஒருநாள், விமலாவின் பேச்சை பொறுக்க முடியாமல், போய் கேட்டார்.
'இங்க பாருங்க அங்கிள்... இது, எங்க குடும்ப விஷயம்; இதுல நீங்க தலையிடாதீங்க...' என, முகத்தில் அடித்த மாதிரி பேசினாள்.
'தப்பு தான்... மன்னிச்சுக்கோம்மா...' என்று சொல்லி வந்து விட்டார்.
'அவளை பற்றி தெரியும் தானே, நானே அமைதியா இருக்கேன்; நீ ஏம்பா வந்து அவகிட்ட அவமானப்படற?' என்றார், கணேசன்.
அன்று நடந்தை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கணேசனின் மகன் சந்தோஷின் குரல் கேட்டது.
''விமலா... ஏன் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கே?''
''இங்க பாருங்க, உங்க அப்பா வாங்கிட்டு வந்த காயோட லட்சணத்தை... இதை வச்சு நான் எப்படி கொழம்பு வைக்கிறது?''
''அதில்லைன்னா வேற காய வச்சு செய்யேன்,'' என்றான், சந்தோஷ்.
அதன்பின், அவள் குரல் அடங்கியது.
பரந்தாமன் வீட்டுக்கு அருகில் கணேசன் குடி வந்து, 20 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, பரந்தாமன், அரசு ஊழியர். கணேசன், தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.
கணேசன், அவர் மனைவி லட்சுமி, மகன் சந்தோஷ் என்று சிறிய குடும்பம். பரந்தாமன் குடும்பமும் சிறியது தான்.
வந்த ஒரே மாதத்தில் லட்சுமியும், பரந்தாமன் மனைவி கமலாவும், பெவிகால் போட்டு ஒட்டியதைப் போல நெருக்கமான தோழிகளாயினர். இரண்டு பெண்கள் தோழிகளானதால், அந்த நட்பு, குடும்ப நட்பாகியது.
சாந்த குணம், பளிச்சென்ற முகம் லட்சுமியுடையது. யாரிடமும் குறை காணாத, நிறைகளை மட்டுமே காணும் அபூர்வ குணம். எப்போதும் சிரித்த முகம், அன்பை மட்டுமே கொடுக்க தெரிந்த உள்ளம்.
பரந்தாமனிடம், 'அண்ணா... அண்ணா...' என்று, பாசத்தை பொழிவாள், லட்சுமி.
ஆண்டுகள் உருண்டோட, அவர்கள் நட்பும் இறுகி வளர்ந்தது. சந்தோஷ், படித்து வேலைக்கு போக ஆரம்பித்தபோது, இரண்டு நாள் காய்ச்சலில், இறந்து போனாள், லட்சுமி.
துவண்டு போனார், கணேசன். கல்யாண வயதில் இருந்தான், சந்தோஷ்.
இதற்கிடையே பரந்தாமனின் மனைவி கமலாவும், 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்து போனார்.
வீட்டில் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணேசனுக்கு தோன்றியது. பரந்தாமனிடம் சொல்ல, அவரும் அதை ஆமோதித்தார்.
'ஆமாப்பா... திருமணம் பண்ணிடறது தான் சரி...'
தேடல்களுக்கு பின் கிடைத்தவள் தான், விமலா. பார்த்த உடனே அனைவருக்கும் பிடித்து விட்டது. திருமண தேதி குறித்து வந்த பின், கணேசன் சொன்னது இன்னும் பரந்தாமன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
'பொண்ணு ரொம்ப அமைதியான சுபாவம். ரொம்ப அடக்கமா இருக்கா... பேசவே மாட்டேங்கறா... பத்து வார்த்தை கேட்டா தான் ஒரு வார்த்தை பதில் வருது...' அதை நினைத்து, இப்போது சிரித்துக் கொண்டார், பரந்தாமன்.
இரண்டு நாட்கள் சென்றன. அன்று, நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார், பரந்தாமன். மதியம் மணி, 2:00. வெயிலில் மயக்கம் வரும் போலிருந்தது. ஆட்டோ பிடித்தார்.
ஆட்டோ பாதி துாரம் கடந்ததும், கணேசன் நடந்து வருவதை பார்த்து, ''கணேசா, வெயில்ல எங்க போயிட்டு வர்றே?'' என்றார், பரந்தாமன்.
''வீட்டுக்கு கரன்ட் பில் கட்டிட்டு வர்றேம்பா,'' என்றார், கணேசன்.
''சரி, வெயில்ல ஏன் நடந்து வர்ற... ஆட்டோவுல வரலாமே?''
''வரலாம் தான், காசு?'' என்றதும், அதிர்ச்சியாக கணேசனை பார்த்தார், பரந்தாமன்.
''என்னப்பா சொல்ற, ஈ.பி., ஆபீஸ் இங்கிருந்து, 3 கி.மீ., இருக்கும். கரன்ட் பில்லுக்கு பணம் வாங்கறப்பவே, ஆட்டோ செலவுக்கும் சேர்த்து வாங்க வேண்டியது தானே?''
''கேட்டேன், சீக்கிரம் வந்து வீட்டுல என்ன பண்ணப் போறீங்க... மெதுவா நடந்து வாங்க, 50 ரூபாய் தண்டம்ன்னு சொல்றா,'' என்றார், கணேசன்.
பரந்தாமனுக்கு துாக்கி வாரிப்போட்டது. 'ராட்சசி...' என, அவர் வாய் முணுமுணுத்தது.
''அவ சொல்றதும் சரிதானே... வீட்டுக்கு போனா, போரடிக்கும். நடந்தா உடம்புக்கு நல்லது தானே?'' வருத்தமின்றி சொன்னார்.
''சரி... ஆட்டோவுல ஏறு, போகலாம்.''
''ஐயோ... வேற வினையே வேணாம். மருமகளுக்கு தெரிஞ்சா, காய்ச்சி எடுத்துடுவா. நீ போ, நான் நடந்து வர்றேன்,'' என்றார், கணேசன்.
பரந்தாமன் எவ்வளவோ வற்புறுத்தியும், ஆட்டோவில் ஏறவில்லை, கணேசன்.
'ஹூம்... பொம்பளையா அவ, ஒரு வயசான மனுஷனை இப்படி கொடுமைபடுத்தறாளே...' என, கவலையுடன் சென்றார்.
ஒரு வாரத்துக்கு பின், மதிய வேளை சாப்பாட்டை முடித்த பரந்தாமன், 'டிவி' முன் அமர்ந்தார். உண்ட மயக்கம் கண்ணை சுற்ற, லேசாக கண் அயர்ந்த நேரம், அழைப்பு மணி ஒலித்தது.
'யார் இந்த நேரத்துல...' என, நினைத்தபடி, கதவை திறந்தவருக்கு ஆச்சரியம். வெளியில் நின்றிருந்தார், கணேசன்.
''அடடே... கணேசா, உள்ளே வாப்பா. என்ன இந்த நேரத்துல?''
''சும்மாதான் வந்தேன். சாப்பிட்டியா?''
''சாப்பிட்டேன். நீ என்ன சாப்பிடறே, டீயா, காபியா?''
''பரந்தாமா, ரொம்ப பசிக்குது. சாப்பாடு ஏதாவது இருக்கா?'' என்றதும், துாக்கிவாரிப் போட்டது.
''என்னாச்சு கணேசா... ஒரு நாளும் நீ இப்படி கேட்டது இல்லையே?''
''ஒரு தப்பு பண்ணிட்டேன். பால் வாங்க, காலையில எப்பவும் நான் தான் போவேன். இன்னைக்கு விடிஞ்சது தெரியாம, ரொம்ப நேரம் துாங்கிட்டேன்; பால் வாங்கலை. 'ஒரு மனுஷனுக்கு அப்படி என்ன தன்னை மீறி துாக்கம்... நிம்மதியா இருந்தா தான் இப்படி துாக்கம் வரும். இன்னைக்கு டிபனை, 'கட்' பண்ணினா சரியாயிடும்'னு, காலை டிபன் தரலை.
''சரி, மதியம் வச்சுட்டு போயிருப்பான்னு பார்த்தா, வெறும் பாத்திரம் இருக்கு. என்னால பசி தாங்க முடியலை. சாப்பாடு இருந்தா குடுக்கறியா?'' உடல் கூனி குறுக கேட்டவரை பார்த்ததும், பரந்தாமனுக்கு கண்ணீர் வந்தது.
தட்டில் சாதம், குழம்பு போட்டு கொடுத்தார், பரந்தாமன்.
அடுத்த நாள் காலை, வழக்கம் போல கணேசன் மற்றும் பரந்தாமன் இருவரும், 'வாக்கிங்' சென்றனர்.
''கணேசா... உன்கிட்ட பலமுறை கேட்டுட்டேன். நீ பதில் சொல்லல. உன் மருமக உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்தறத என்னாலயே தாங்க முடியல. வேற யாரும் பொறுத்துட்டு இருக்க மாட்டாங்க.
''முதியோர் இல்லத்துலயாவது போய் நிம்மதியா இருக்கலாம். நீ, அதையும் மறுத்துட்டே. இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலயும் இங்கயே இருக்க என்ன காரணம்... என்னை உண்மையான நண்பனா நினைச்சா, நீ சொல்லலாம்,'' என்றார்.
அவரை ஆழமாக பார்த்த கணேசன், ''யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு நினச்சேன். நீ இவ்வளவு வற்புறுத்தி கேட்கிறதால சொல்றேன். பரந்தாமா, ஒருத்தன், தான் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கணுமா, வேணாமா?''
''இதென்ன கேள்வி, கண்டிப்பா அனுபவிச்சுதான் ஆகணும்.''
''கரெக்ட்... அதுக்குதான் நான் இந்த வீட்டுல தண்டனை அனுபவிச்சு, நான் செய்த பாவங்களை கழுவிட்டு இருக்கேன்.''
''என்ன சொல்ற கணேசா... தண்டனை அனுபவிக்கிறியா... பாவங்களை கழுவறியா... எனக்கு ஒண்ணும் புரியலை.''
''ஆமா பரந்தாமா... என் ஒரு முகம் தான் இந்த உலகத்துக்கு தெரியும்; இன்னொரு முகம் தெரியாது. நான் நல்லவன் இல்லை. என் பொண்டாட்டியை, அந்த மகராசியை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கேன் தெரியுமா?''
''என்னப்பா சொல்ற?''
''ஆமா பரந்தாமா... லட்சுமி, என்கிட்டே ஒரு நாளும் சந்தோஷமா இருந்ததில்லை. அவ ஒரு நல்ல சேலை கட்ட கூடாது. தன்னை அலங்கரிச்சுக்க கூடாது. 'எவனை பார்க்க இப்படி, 'மேக் - அப்' பண்ணிட்டு இருக்கேன்'னு, கேட்டு அடிச்சு, உதைப்பேன். அடின்னா சாதாரண அடி இல்லை. 'பெல்ட்' பிஞ்சுடும்.
''அவளை எத்தனை நாள் பட்டினி போட்டிருக்கேன், தெரியுமா... கவனக்குறைவா சாப்பாட்டுல உப்போ, காரமோ அதிகமாயிட்டா, சாப்பாட்டை கொண்டு போய் கொட்டிடுவேன்.
''அவளை பட்டினி போட்டுட்டு, நான் மட்டும் வெளியே போய் சாப்பிடுவேன். இந்த மாதிரி பலமுறை நடந்திருக்கு. அது மட்டுமில்ல, பலமுறை அவளுக்கு, கை, கால்ல சூடு போட்டிருக்கேன்...
''ஒருமுறை, அவ ஊருக்கு போயிட்டு, லேட்டா வந்தா... அதுக்கு என்ன பண்ணினேன் தெரியுமா... ராத்திரி முழுக்க வாசலிலேயே படுக்க வச்சேன். அது மார்கழி மாசம்... எப்படி இருந்திருக்கும்?
''உடம்பு சரி இல்லேன்னாலும் எனக்கான கடமைகளை சரியா செஞ்சுடணும். இல்லைன்னா அடிப்பேன். நீ சந்தோஷமா இருக்கியா, சாப்பிட்டியான்னு ஒருமுறை கூட கேட்டது கிடையாது. உடம்பு சரி இல்லேன்னாலும் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போனதில்லை.
''அவளை மனுஷியா மதிச்சதே இல்லை. அடிமையை விட கேவலமா நடத்தினேன், பரந்தாமா. ஆனா, மகராசி ஒண்ணையும் வெளிய சொல்ல மாட்டா. ஒரு மனைவியா எனக்கான கடமையை அவ செய்ய மறந்தது கிடையாது. ஆனா, ஒரு புருஷனா நான் அவளுக்கு ஒண்ணும் பண்ணலை...
''அதுக்கெல்லாம் நான் தண்டனை அனுபவிக்க வேண்டாமா, பரந்தாமா... சொர்க்கம், நரகம் மேல இல்லை; இங்க தான் இருக்கு. நாம பண்ணின பாவத்துக்கு, இங்கேயே தண்டனை அனுபவிக்கணும். அதை தான் இப்ப நான் சந்தோஷமா அனுபவிக்கிறேன்.
''பொண்டாட்டியோட அருமை, அவ இருக்குறப்போ யாருக்கும் தெரியறது இல்லை. நம்மள பத்தி கவலைப்படற ஒரே ஜீவன் அவ தான். நம்மளை நம்பி வந்தவ சிந்தற ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும், நாம பதில் சொல்லியே ஆகணும். நான் திமிர் எடுத்து ஆடினேன். அதுக்கான தண்டனையை இப்ப அனுபவிக்கிறேன்.
''நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி, நான் மனசு வருத்தப்படலை. விரும்பித்தான் இந்த தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கேன். என் மகன் கூட பொறுக்க முடியாம முதியோர் இல்லத்துல சேர்க்கறேன்னு சொன்னான். நான் தான் மறுத்துட்டேன். அங்க போயிட்டா, என் பாவத்தை எப்படி போக்க முடியும்... நான் தப்பிச்சுக்க விரும்பலை, பரந்தாமா...
''ஒரு பொம்பளைக்கு பண்ணின கொடுமைக்கு, இன்னொரு பொம்பளைகிட்ட கொடுமைப்படணுங்கறது தான், வாழ்க்கை எனக்கு வழங்கி இருக்குற தண்டனை. இது நான் அனுபவிச்சே ஆக வேண்டிய தண்டனை.
''நாம எதை கொடுக்கிறோமோ, அதானே நமக்கு திரும்ப கிடைக்கும். இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு, பரந்தாமா?'' துளியும் வருத்தமின்றி சொன்ன கணேசனை, ஆச்சரியமாக பார்த்தார், பரந்தாமன்.
''சரிதான் கணேசா... நீ பேசறதை பார்த்தா, தப்பை உணர்ந்து திருந்திட்ட மாதிரி தெரியுது. 10 வருஷத்துக்கு மேல தண்டனையை அனுபவிச்சிட்ட... எப்பதான் விடுதலை?''
''தெரியல பரந்தாமா... தண்டனை போதும்ன்னு, மேல இருக்கறவன் எப்ப நினைக்கிறானோ அதுக்கு மேல ஒரு வினாடி கூட இருக்க மாட்டேன்,'' என்றார், கணேசன்.
பத்து நாட்களுக்கு பின், அதிகாலை, 5:00 மணி. அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார், பரந்தாமன்.
''அப்பா காலமாயிட்டார் அங்கிள்... 'ஹார்ட் அட்டாக்' துாக்கத்துலயே உயிர் பிரிஞ்சிடுச்சு,'' சோகமாக சொன்னான், கணேசன் மகன், சந்தோஷ்.
கே. ஆனந்தன்
