PUBLISHED ON : ஜன 15, 2023

கமலஹாசனின் அடுத்த, 'பிளான்!'
விக்ரம் படத்திற்கு பிறகு, அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும், கமலஹாசன், அடுத்தபடியாக, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரைப் போன்று, மாற்று மொழிகளில் நடிப்பதிலும் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.
அந்த வகையில், மலையாளத்தில், மோகன்லால் நடித்து வரும், மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், கமலஹாசன்.
இந்நிலையில், சில தெலுங்கு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வரும் அவர், இளவட்ட நடிகர்களுக்கு இணையாக, நடனம் மற்றும் சண்டை காட்சிகளிலும் அதிரடி காட்ட வேண்டும் என்பதற்காக, ஹாலிவுட்டிலிருந்து வரவழைத்துள்ள, 'பாடி பிட்னஸ் ட்ரைனர்' மூலம், தன் உடற்கட்டை வலுவாக்கும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்படி, 68 வயதில், கமல் எடுக்கும், 'ரிஸ்க்'கைப் பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டே அசந்து நிற்கிறது.
— சினிமா பொன்னையா
காவல்துறை அதிகாரியாக, கீர்த்தி சுரேஷ்!
'நடிகையர் திலகம் படத்துக்கு பின், என் திறமைக்கு தீனி போடக்கூடிய கதாபாத்திரங்கள் கிடைக்காமல் வருத்தப்பட்டேன். தற்போது, சைரன் படத்தில், காவல்துறை அதிகாரியாக, ஒரு சவாலான வேடம் கிடைத்திருக்கிறது.
'இந்த படத்தின் கதாநாயகன், ஜெயம் ரவி. மேலும், 'ஹீரோ'களுக்கு இணையாக, என்னாலும் நடிக்க முடியும் என்பதை, இந்த படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறேன்...' என்கிறார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
அடுத்த ரவுண்டில், த்ரிஷா!
த்ரிஷாவின் கோலிவுட் மார்க்கெட், மீண்டும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. குறிப்பாக, விஜய், அஜித் போன்றோருடன் ஏற்கனவே, 'டூயட்' பாடி, 'பீல்டு அவுட்' ஆன நடிகையர், அடுத்த ரவுண்டில், அவர்களுடன் ஜோடி சேருவது, நடக்காத காரியம். ஆனால், அந்த விஷயத்தை தற்போது நடத்திக் காட்டப் போகிறார், த்ரிஷா.
அதற்காக, அஜித், விஜய் படங்களில் மீண்டும் ஒப்பந்தமாகி இருப்பதால், கேரளத்துக்கு சென்று, ஆயுர்வேத சிகிச்சை மூலம், தன் உடற்கட்டை மிக இளமையாக மாற்றி இருக்கிறார். அதோடு, அவரது முகம், முன்பை விட பிரகாசமாக புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
இதையடுத்து, அவரைப் பார்த்து, புதிதாக கோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்திருக்கும், இளவட்ட நடிகையர் மிரண்டு போயுள்ளனர். அந்த அளவுக்கு, 39 வயதிலும், 19 வயது நடிகை தோற்றத்தில், 'சிக்'கென்று ஜொலிக்கிறார், த்ரிஷா.
— எலீசா
மீண்டும் வில்லன் அவதாரம்!
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து, புகழ்பெற்று, அதன்பின், 'ஹீரோ' ஆனவர், சத்யராஜ். அதையடுத்து, தன், 'ஹீரோ' மார்க்கெட் சரிந்த பின், குணச்சித்ர நடிகராக உருவெடுத்த, சத்யராஜ், தற்போது, அங்காரகன் என்ற படத்தில், மீண்டும் வில்லனாக உருவெடுத்துள்ளார்.
'என் வில்லன் நடிப்பிற்கு, மறுபடியும், தியேட்டர்களில் கை தட்டல் கிடைத்தால், தொடர்ந்து வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், சத்யராஜ்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தளபதி நடிகருக்கும், அவரது தந்தைக்கும் மோதல் ஏற்பட்டு, இப்போது பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தளபதி நடிகரின் மனைவியும், அவரது தந்தையும் என்று கூறப்படுகிறது.
அதாவது, தளபதி நடிகர், சினிமாவில் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும், லண்டனில் வசிக்கும், அவரது மாமனார், அங்கு முதலீடு செய்து வருகிறார். எதிர்காலத்தில் லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான், தளபதி நடிகரின் திட்டமாக உள்ளது. ஆனால், இதற்கு அவரது தந்தை, முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
இருப்பினும், மாமனார் வழியில் செல்வதற்கு முடிவெடுத்துவிட்ட, தளபதி நடிகர், இந்த விஷயத்தில், தந்தை சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லையாம். அதன் காரணமாகவே, தளபதியுடன் மோதலில் ஈடுபட்ட தந்தைகுலம், அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதோடு, தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை சேர்ந்த அந்த ஸ்ரீ நடிகைக்கு, சுத்தமாக படமே இல்லாத நிலையில், சமீபத்தில், காமெடி நடிகர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக, ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்திருந்தார்.
அப்போது, நடிகர் கொடுத்த நள்ளிரவு, 'பார்ட்டி'யில் திரையுலகினருடன், சரக்கு அடித்து, குஜாலாவுக்கு மாறிய ஸ்ரீ நடிகை, 'குடும்ப குத்துவிளக்கு இமேஜை கடாசி விட்டு, கவர்ச்சி சுனாமியாக உருவெடுக்க தயாராகி விட்டேன். உங்களது அமோக ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...' என்று, போதையில் ததும்பி வழிந்திருக்கிறார்.
சினி துளிகள்!
* வாரிசு படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில், கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார், விஜய்.
* சமீபத்தில் சென்னை வந்த, ஸ்ரீதிவ்யா, முன்பு ஜோடியாக நடித்த, 'ஹீரோ'களான சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் விஷ்ணு ஆகியோரை சந்தித்து, அவர்களிடம் மீண்டும் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.
அவ்ளோதான்!
