PUBLISHED ON : ஜன 15, 2023

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான, தருமரிடம், யாசகம் வேண்டி வந்தான், ஒரு பிச்சைக்காரன்.
ஏதோ சிந்தனையில் இருந்த தருமர், 'நாளைக்கு வா...' என்று சொல்லி அனுப்பி விட்டார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், உடனே, முரசு ஒன்றை எடுத்துக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினான்.
இதை பார்த்த தருமர், பீமனிடம், 'எதற்கு இந்த முரசு?' என்றார்.
கிராம மக்களிடம் சென்று, 'என் அண்ணன், காலத்தை வென்று விட்டார் என்று அறிவிக்க போகிறேன்...' என்றான், பீமன்.
'ஏன் அப்படி சொல்லப் போகிறாய்?' என்றார், தருமர்.
'நீங்க தானே, பிச்சைக்காரனிடம், 'நாளைக்கு வா...' என்று கூறினீர்கள். நாளை நீங்கள் நிச்சயம் இருப்பீரா அல்லது அந்த பிச்சைக்காரன் தான் நாளைக்கு உயிருடன் இருக்கப் போகிறானா?
'அப்படியே நாளை, நீங்க இருந்தாலும், பிச்சை போடும் மனசு இருக்குமா... நாளையும் அந்த பிச்சைக்காரன் உங்களிடம் வந்து யாசகம் கேட்பான் என்பது, என்ன நிச்சயம்?
'நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள். அதனால் தான், அவ்வளவு உறுதியாக, நாளைக்கு வரச்சொல்லி இருக்கீங்க...' என்றான்.
அப்போது தான், தருமருக்கு தன் தவறு புரிந்தது.
'அந்த பிச்சைக்காரனை இப்போதே வரச்சொல், ஏதாவது கொடுத்து அனுப்புகிறேன். நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?' என்றார், தருமர்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நிகழ் காலம் தான், நம் கையில் இருக்கும் சொத்து. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது, நம் பொறுப்பு!
பி. என். பி.
ஆன்மிக தகவல்கள்!
நீண்ட நாள் விவகாரத்தில் தீர்வு கிடைக்க, ஞாயிறன்று சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.
