PUBLISHED ON : செப் 02, 2018

ஒடிசா மாநிலத்தில் உள்ளது, புரி ஜகன்நாதர் ஆலயம்; புரி ஜகன்நாதருக்கு ஒடிசி நடனம் பிடிக்கும் என்பது நம்பிக்கை. இதனால், இக்கோவிலில், 15ம் நுாற்றாண்டு முதலே தேவதாசி முறை அமலில் இருந்தது. பெண் குழந்தைக்கு ஏழு வயதானதும், 'சாரி பந்தன்' என்ற நிகழ்வு மூலம், தேவதாசியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
அத்துடன், புரி ஜகன்நாதரின் முன் நடமாடும் மனைவி என்ற அந்தஸ்தையும் பெறுகின்றனர். இப்பெண்கள், மற்ற சாதாரண மனைவியர் போன்று, கணவன் நலம் வேண்டி, சாவித்திரி விரதம் கூட இருப்பதுண்டு.
தினமும் காலையில், இரவு நடை சாத்துவதற்கு முன், அலங்காரத்துடன், புரி ஜகன்நாதர் முன், ஒடிசி நடனம் ஆடுவர். இதுதவிர, தேர் திருவிழாவின்போது, தேருக்கு முன், தெருவிலும் நடனம் ஆடுவது உண்டு.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும், கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இந்த வகையில், சசிமணி தேவி என்பவர், கடைசி தேவதாசியாக இருந்தார். இவர், 93 வயதில் காலமானார். அதற்கு, 10 ஆண்டுக்கு முன்பே, நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டார்.
தேவதாசி முறை ஒழிந்தாலும், பாரம்பரியம் தொடர, இன்றும், புரி ஜகன்நாதர் தேர் திருவிழா மற்றும் கோவில் திருவிழாக்களின் போது, ஒடிசி நடன கலைஞர்கள், தாங்களாகவே முன் வந்து நடனம் ஆடி, ஜகன்நாதரையும், பக்தர்களையும் மகிழ்விக்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
