PUBLISHED ON : ஜன 22, 2017

ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர்.
இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், சம்பந்தமே இல்லாத யாரோ சண்டை போட்டால் கூட, நம்மில் பலருக்கு, பதற்றம் தொற்றிக் கொள்ளும்.
நெருங்கிய இருவர் சண்டை போட்டாலோ, கேட்கவே வேண்டாம். உதாரணம்: அப்பா - மகன் வாக்குவாதத்தின் போது, தாயின் படபடப்பு!
காட்டுக் கூச்சல் போடுவோர், யாரை, சொற்களால் தாக்குகின்றனரோ அவர்களையும் தாண்டி, இவர்களது குரல், எல்லாரையும் பதற்றமடைய செய்கிறது. இது, மனிதநேயமற்ற செயல்.
ரயில் பயணத்தில், பெருங்குரலில் சண்டையிடும் இருவர், சக பயணிகளுக்கு, பெரிய கெடுதலை செய்கிறோம் என்பதை உணர வேண்டும். பிறரது மன அமைதியும், தூக்கமும் கெட, நாம் காரணமாக இருக்க கூடாது. இந்த காட்டு கூச்சலை கேட்டு விழித்துக் கொள்வோர், பின், வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவிக்கின்றனர் என்பதே உண்மை.
என் வெளிநாட்டு அனுபவங்களை வைத்து சொல்கிறேன்... அங்கெல்லாம், பொது இடத்து வாக்குவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள், பெரும்பாலும், சூழ்நிலையை கலவரப்படுத்தாமலேயே நிகழ்கின்றன.
விவாகரத்துகளுக்கு பெயர் பெற்ற மேலை நாடுகளில் கூட, பொது இடங்களில், ஒரு கணவன், தன் மனைவியை திட்டுவது, மட்டமாகப் பேசுவது, அடிப்பது போன்ற காட்சிகளை, இதுவரை நான் கண்டதே இல்லை. நம் நாட்டில், பொது இடம் என்றும் பாராமல், இப்படி பலர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.
ஒரு கணவன், தன் மனைவி அடங்கிப் போகும் இடம், பொது இடம் மட்டுமே என்று முடிவு செய்து, திட்டமிட்டே இது போன்று நடந்து கொள்கிறான். ஒருவருக்கொருவர் மட்டுமே ஊறு விளைவிப்பதாக கருதி, சுற்றியுள்ளவர்களுக்கு கெடுதல் செய்கின்றனர், இத்தகைய ஆண்கள்.
கருத்து வேறுபாடுகளை, உரத்த குரலின் மூலம் தான் பரிமாறிக் கொள்ள முடியும் என்று, யார் இவர்களுக்கு சொல்லியது?
ஒரு மனைவி, தன் கணவரிடம், 'என்னங்க கோபம்... ஏன் பேச மாட்டேங்கிறீங்க...' என்று கேட்பதும், ஒரு காதலன், தன் காதலியிடம், 'என் மீது கோபம்ன்னா, என்னை நாலு போடு போடு; வாங்கிக்கிறேன். ஆனா, பேசாம இருந்து, என்னை கொல்லாதே...' என்று சொல்வதும், நமக்கு எதை உணர்த்துகிறது... அமைதியான முறையில், மவுனத்தின் வழியிலும் கோபத்தை வெளிப்படுத்தி, சண்டையிட முடியும் என்பதைத் தானே சொல்கிறது!
எதிராளியின் விரும்பத்தகாத செயலை கண்டிப்பது, அவர்களுக்கு ஒன்றை அறிவுறுத்துவது மற்றும் அவர்களை திருத்துவது போன்றவற்றை, குரலை உயர்த்தாமலேயே சாத்தியப்படுத்தினால், அதற்கு பலன் மிக அதிகம்.
எதைக் கூறுவதாக இருந்தாலும் மென்மையாக சொல்லும் போது, அது, எதிராளியின் மனதில் நன்கு தைப்பதுடன், உணரவும் தலைப்படுவார்.
உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!
லேனா தமிழ்வாணன்
