PUBLISHED ON : ஜன 22, 2017

ஜன., 27 - தை அமாவாசை
தை அமாவாசையன்று, தீர்த்தக்கரைகளில் புனித நீராடி, முன்னோர்களை வழிபடுவது புண்ணியம். குறிப்பாக, அன்று கடலில் நீராடுவது மிகவும் நல்லது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட கடல் தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. கன்னியாகுமரி கோவிலில் உள்ள தீர்த்தத்தை, பாபநாச தீர்த்தம் என்பர். இங்கே, மூன்று கடல்களும் சங்கமிப்பதால், அனைத்து நதிகளும் ஒருங்கிணைந்துள்ளது. அதனால், இங்கு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, பகவதி அம்மனை வணங்குவது விசேஷம்.
ஒரு காலத்தில், பூவுலகை அடக்கியாண்டான், பாணாசுரன் எனும் அரக்கன். இதனால், உலகில் பாவச்சுமை பெருகியது. இதைத் தாங்க முடியாத பூமாதேவி, திருமாலிடம் முறையிட்டாள்.
பாணாசுரனை, ஒரு கன்னியால் மட்டுமே கொல்ல முடியும் என்று விதி இருந்ததால், பராசக்தியை வேண்டும்படி கூறினார், திருமால். இதனால், முனிவர்கள், பராசக்தியை வேண்டி யாகம் செய்தனர். வேள்விக் குண்டத்தில் இருந்து கன்னியாக வெளிப்பட்ட பராசக்தி, பாணாசுரனை அழிப்பதாக வாக்குறுதி அளித்தாள். பின், கன்னியாகுமரியில் முக்கடலின் நடுவில் இருந்த பாறையில், சிவனை நினைத்து ஒற்றைக்காலில் கடுந்தவம் புரிந்தாள்.
அவளது தவத்தில் மனம் மகிழ்ந்து, அவளை மணம் புரிய விரும்பினார், சுசீந்திரத்தில், கோவில் கொண்டுள்ள சிவன்.
இத்திருமணம் நடந்து விட்டால், பராசக்திக்கு கன்னித்தன்மை நீங்கி, பாணாசுரன் அழிவது தடைபட்டு விடும் என்று கருதிய நாரதர், பராசக்தி மற்றும் சிவனிடம் சென்று, ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்நாளின் நள்ளிரவில் தான், திருமணம் நிகழ வேண்டும் எனக் கூறினார்.
அவ்வாறே, குறிப்பிட்ட நாளில், கன்னியாகுமரிக்கு புறப்பட்டார், சிவன்.
வழியில், சேவல் உருக்கொண்டு கூவினார், நாரதர்.
'இரவில் அல்லவா திருமணம் நிகழ்ந்திருக்க வேண்டும்; பொழுது புலர்ந்து விட்டதே...' என, தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவன், சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார். பராசக்தியும், கன்னியாகுமரிக்கு திரும்பி, என்றும் கன்னியாக இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.
தேவியின் அழகைப் பற்றி கேள்விப்பட்டு, அவளைக் காண வந்த பாணாசுரன், தன்னை மணந்து கொள்ள வேண்டினான். தேவி மறுத்து விடவே, அசுரன் அவளை கவர்ந்து செல்ல எண்ணி, தன் உடைவாளை உருவினான். இத்தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும், தன் போர்வாளை வீசினாள். இருவரும் நெடுநாட்கள் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்று, கன்னியாகுமரியிலேயே நிரந்தரமாகத் தங்கினாள். பெண்களின் இளம்பருவத்தை, 'கன்னி' அல்லது 'குமரி' என்பர். இவ்விரண்டும் இணைந்து, அம்மனுக்கு கன்னியாகுமரி என்ற பெயர் வந்தது.
முக்கடல் சங்கமிக்கும் இவ்விடத்திலுள்ள சங்கிலித்துறையில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மோட்சம் அடைவதுடன், தர்ப்பணம் செய்தவர்களுக்கு அருளை வாரி வழங்குவர் என்பது ஐதீகம்.
தை அமாவாசை, உத்தராயண காலம் எனப்படும், சூரியனின் வடதிசை பயண காலத்தில் வருவதால், இந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் உகந்தது. ஆடி அமாவாசையன்று பூலோகத்திற்கு நம் முன்னோர் வருவதாகவும், தை அமாவாசையன்று, நம்மிடம் விடைபெற்று பிதுர்லோகம் திரும்புவதாகவும் ஐதீகம். அவர்களை வழியனுப்ப ஏற்ற புண்ணியத்தலம் கன்னியாகுமரி.
தை அமாவாசையன்று குமரிக்கடலில் நீராடி, தர்ப்பணம் செய்து, முன்னோரின் ஆசி மற்றும் பகவதி அம்மனின் அருள்பெற்று வருவோம்!
தி.செல்லப்பா
