
திருச்சியிலிருந்து, 34வது கி.மீ., தூரத்தில் அமைந்திருக்கும் கிராமம் கோடைபுரம். இக்கிராமத்தில், 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில், 850 முஸ்லிம் குடும்பங்கள். கிராமத்தில், இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருந்தன.
கிராமத்தில், பத்து வருடங்களாக சொட்டு மழை இல்லை. பக்கத்து கிராமங்களில் பேய் மழை அடிக்கும் போது, இங்கு சாரல் கூட அடிக்காது. பத்து வருடங்களாக மழை இல்லாததால் கிராமத்தின், மூன்று நீர்நிலைகள் வறண்டு போயின. எவ்வித விவசாயமும் இங்கு சாத்தியமில்லை. எங்கு பார்த்தாலும் கரும்வேலம் மரங்கள். குடிநீர் பஞ்சம் தலைவரித்தாடியது. மக்கள் குடிநீர் சேகரிக்க, 24 கி.மீ., நடை பயணம் மேற்கொண்டனர்.
'மழை பெய்யா கிராமத்தில் வாழ்வது வீண்...' என நினைத்து, ஏராளமான குடும்பங்கள், பல நகரங்களுக்கு புலம் பெயர்ந்து போயின. இக்கிராமத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் குறைந்தது. கிராமத்து இந்து மக்கள், மழை வேண்டி யாகங்கள் செய்தனர். கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தினர். கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்வது வழக்கமாகியது.
பள்ளிக் கூடம் முடிந்ததற்கான மணி ஒலித்தது. அவ்வளவுதான்... பள்ளிக்கூட அறைகளிலிருந்து மாணவர்கள் வெளியே சிதறி ஓடினர். அந்தக் கூட்டத்தில், பத்து வயது கண்ணகியும், அதே வயது ரியாலுல் ஜன்னாஹ்வும் இருந்தனர். சப்பாத்தி பழம் சேகரித்துக் கொண்டே, இருவரும் பேச ஆரம்பித்தனர்...
''ரியா... மழைய நேர்ல பாத்திருக்கியா... அதுல நனைஞ்சு பாத்திருக்கியா... மழைத் தண்ணிய எதுலயும் படாம, சேகரிச்சு குடிச்சு பாத்திருக்கியா... மழையின் போது இடி விழுமே, மின்னல் வெட்டுமே, வானவில் பூக்குமே... அனுபவிச்சு பாத்திருக்கியா?''
''இல்ல கண்ணகி... நான் பிறக்கறதுக்கு முந்தின நாள் மழை பேஞ்சதுதானாம். என் அம்மா கூட என்னை மழைய முழுங்கினவன்னு கிண்டலடிப்பா!''
''மழைய வரச் சொல்லி, ஒரு கடிதம் எழுதுவோமா?'' - கண்ணகி.
''மழை பெய்ய வைச்சாதான் ஓட்டுன்னு அரசாங்கத்தை, நம்ம மக்களைவிட்டு மிரட்டச் சொல்லலாமா?'' - ரியா.
''எங்க சாமிகளிடம் எங்க மக்கள் மழை வேண்டி பூஜை செய்றாங்க; அதே போல், அல்லாஹ் சாமியையும் கேட்டு பார்த்தா என்ன?'' - கண்ணகி.
''கேட்கற முறைன்னு ஒண்ணு இருக்குல்ல. நாம் இரண்டு பேரும் பள்ளிவாசலுக்கு போவோம். அங்க இமாம் இருப்பார். அவரை விட்டு மழை கேட்போம்!''
இருவரும் பள்ளிவாசலுக்கு நடந்தனர்.
இமாம், பள்ளிவாசலின் வெளிவாசலில் தென்பட்டார்.
''அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்!'' - ரியா.
''வஅலைக்கும் ஸலாம். ஷாஜஹான் பாய் பொண்ணுதானே நீ?''
''ஆமாம் ஹஜ்ரத். இந்தப் பெண்ணின் பெயர் கண்ணகி. என்னுடன், ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். நம்ம கிராமத்துல, பத்து வருஷமா மழையே பெய்யாதது பத்தி பேசிக்கிட்டு வந்தோம். இவ, 'அல்லாஹ் சாமியை வேண்டி, மழை பெய்விச்சா என்ன?'ன்னு கேட்கறா. நம்ம மார்க்கத்துல மழை வேண்டும் முறை இருக்கா?''
''மழை வேண்டி தொழுகை இருக்கு; அதிக மழை நிறுத்த வேண்டியும் தொழுகை இருக்கு!''
''பத்து வருஷத்ல ஒரு தடவை கூட மழை வேண்டி தொழுகை நடத்தலையா நீங்க அஜ்ரத்?''
இமாம் சங்கோஜப்பட்டார். ''தோணலைம்மா!''
''இப்ப அந்தத் தொழுகையை ஏற்பாடு செய்ய முடியாதா ஹஜ்ரத்?''
''தன்னிச்சையா நானே முடிவெடுக்க முடியாதும்மா. மொதல்ல முத்தவல்லி கூடயும் ஜமாஅத் உறுப்பினர் கூடயும் கலந்தாலோசிக்கணும். அவங்க சரின்னு சொன்னவுடனே மாற்று மத சகோதரர்களையும், அவர்களின் தலைவர்களையும் கலக்கணும். எல்லாரும் ஒருமித்து முடிவு பண்ற தேதில மழை வேண்டி தொழுகை நடத்தணும்!''
''பள்ளிவாசலுக்குள்ளேயா?''
''இல்லம்மா... பெரிய திடல்ல தொழுகை நடத்தணும். தொழுகை ஏரியாவில் மாற்று மத மக்களும், அணிவகுத்து நிற்பர்!''
''எது எப்படியோ... எங்களுக்கு மழை பேஞ்சா சரி!'' என்றாள் கண்ணகி. மீண்டும் அழகிய முகமன் கூறி விடை பெற்றாள் ரியாலுல் ஜன்னாஹ்.
ஜமாத்தார் கூடி மழை வேண்டி தொழுகை நடத்துவதை ஆதரித்தனர். மாற்று மத சகோதரர்களை சந்தித்து விவாதித்தனர்; அவர்களும் சம்மதித்தனர். மழை வேண்டி தொழுகையை தண்டோரா போட்டனர்.
''இதனால், அறிவிப்பது என்னவென்றால்... வரும் வெள்ளிக்கிழமை மாலை கிராமத்தை ஒட்டிய திடலில், நம் கிராம முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகை தொழவும், மாற்று மத சகோதரர்கள் தொழுகை இடத்தை சூழ்ந்து நிற்கவும், வேண்டப்படுகின்றனர். பலவீனமானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், கால்நடைகள் மொத்தத்தில் மழை பயனாளிகள் அனைவரும் கூடி இறைவனின் இரக்கத்தை பெற வேண்டும்!''
'டம்டம்... டம்டம்... டம்டம்...'
திடலில் ஆயிரம் முஸ்லிம்கள் தொழும் அளவுக்கு கொட்டகை போடப்பட்டது. ஜுஆம்மா தொழுகைக்குப் பின், முஸ்லிம்கள் இசை நயத்துடன் மழை பைத்து பாடியபடி திடல் நோக்கி ஊர்வலம் போயினர். முஸ்லிம் மக்கள் தங்கள் ஆடை களை உட்பக் கத்தை வெளியே வைத்து அணிந்திருந்தனர். எல்லாரின் சட்டை காற்சட்டையின் தையல் அடையாளங்கள் வெளியே தெரிந்தன.
தொழுகையாளிகள், 'ஒலு' செய்து அமர்ந்தனர். வரிசைக்கு, ஐம்பது பேர் வீதம், இருபது வரிசைகள். தொழுகை பந்தலின் பின் அரைவட்டமாய் மாற்று மத சகோதரர்கள் குழுமியிருந்தனர். அவர்களுடன் நோயாளிகளும், வயோதிகர்களும், மெலிந்த கால்நடைகளும் காணப்பட்டனர். கூட்டத்தில் கண்ணகியும், ரியாலுல் ஜன்னாஹ்வும் நின்றிருந்தனர். கண்ணகி எதையோ பாவாடைக்குள் ஒளித்து வைத்திருந்தாள்.
''நிச்சயமா நம் ஊர் மழை தண்ணீரின்றி வறண்டு போய் விட்டது! அன்றி மழை தனக்குரிய காலங்களில் தொடர்ந்து பெய்யாமல் பிந்தி விட்டது! ஆனால், நிச்சயமாக அல்லாஹ்வோ நம்மை அவரிடம் இறைஞ்சுமாறு கட்டளையிட்டுள்ளான். அன்றி அவன் நம் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வதாயும் நமக்கு உறுதிமொழி அளித்துள்ளான்! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் / அர் ரஹ்மானிர் ரஹும் / மாலிகி யவ்மித்தீன் / லா இலாஹ இல்லல்லாஹு யப் அலுமாமாயுரீத் / அல்லாஹும்ம அந்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்தல் கனிய்யு வ நஹ்னுல் புகராஉ அன்ஜில் அலைனல் கைஸ லஜ்அல் மா அன்ஜலத் வனா குல்ல்வ வ பலாகன் இலாஹீன்!'' என்று ஓதியபின் இரு கைகளையும் உயர்த்தினார் இமாம். அவரின் முதுகு மக்களுக்கு தெரிந்தது. தன் சால்வையை திருப்பிப் போட்டார். பின் மிம்பரைவிட்டு இறங்கி வந்து இரண்டு ரக்காயத் சிறப்பு தொழுகையை நடத்தினார் இமாம்.
தொழுகைக்கு பின் துஆ ஓதினார். துஆவுக்கு இரு கைகளை குவித்து உள்ளங்கை காட்டுவதற்கு பதில் கொட்டுவது போல இரு கைகுவிப்பை தலைகீழாக்கினார்.
துஆ ஓத, ஓத அனைவரும், ''ஆமீன்... ஆமீன்!'' என்றனர். அனைவரின் பார்வையும் வானத்தின் மீதே இருந்தன.
வானம் பிரகாசமான நீல நிறத்தில் மேகங்களே இல்லாது காட்சியளித்தது. மழை தொழுகையை முடித்த இமாம் குழுமியிருக்கும் கூட்டத்தினரை நோக்கி நடந்து வந்தார்.
''என்ன அஜ்ரத்... தொழுகை முடிச்சிட்டீங்களா!''
''ஆமா!''
''மழையைக் காங்கல!''
முஸ்லிம் தொழுகையாளிகளையும், மாற்று மத சகோதரர்களையும் சுழன்று பார்த்தார்.
''மழை வரும்ன்னு நம்பிக்கை இல்லாம நீங்களே இருந்தா மழை எப்படி வரும்?''
''என்ன சொல்றீங்க ஹஜ்ரத்?''
''மழை வரும்ன்னு திண்ணமா நம்பியிருந்தா நீங்கெல்லாம் குடை கொண்டு வந்திருப்பீங்க இல்லையா? நான் பார்த்தவரைக்கும் யாரிடமும் குடை இல்லை!'' என்றவர், கண்ணகி ஏதோ ஒளித்து வைத்திருப்பதை பார்த்து விட்டார்...
''இங்க வாம்மா கண்ணகி!'' வந்தாள்.
''கையில என்னம்மா வச்சிருக்க?'' கண்ணகி பாவாடையில் சுருட்டி வைத்திருந்ததை வெளியிலெடுத்தாள்; குடை!
''குடை கொண்டு வந்திருக்கியா நீ?''
''ஆமா ஹஜ்ரத்!''
''எதுக்கு?''
''இவ்வளவு பேர் கூடி, மழை வேணும்ன்னு அல்லாஹ் சாமியை கும்பிடுறீங்க. அல்லாஹ் சாமிக்கு நம்ம மேல இரக்கம் வராம இருக்குமா? வந்தா செம மழை பெய்யுமே... மழை பெஞ்சு அதுல நான் நனைஞ்சா சளி பிடிச்சிடும். நாளைக்கு பள்ளிக்கு போக முடியாது. அதனால, குடை கொண்டு வந்தேன்.''
கண்ணகி பேசி முடித்த மைக்ரோ கணம், வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. ஒன்றுக்கு ஒன்று மோதி இணைந்தன.
மின்னல் வெட்டியது. இடி இடித்தது. மழை பொழிந்தது.
குடையை விரித்து, கலாப மயில் போல் ஆடினாள் கண்ணகி.
''இறைவனே... எங்கள் அவநம்பிக்கையை மன்னித்து விடு!'' அனைவரும் கொட்டும் மழையில் கூத்தாடினர். தன் மேற்சட்டையை களைந்தார் இமாம்.
''எதற்கு இமாம்?''
''நிச்சயமாக இந்த மழை என் இறைவனிடமிருந்து புதிதாய் வருவதாகும்!''
நான்கு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இமாமிடம் மக்கள், ''இதற்கு மேல் மழை பெய்தால், நன்மை போய் தீமை வந்து விடும். அல்லாஹ்விடம் வேண்டி மழையை நிறுத்த செய்யுங்கள்!''
இமாம் தொழுது துஆ செய்தார்.
''இறைவனே... எங்கள் மீது பெய்த மழை, எங்களுக்கு தற்சமயத் துக்கு போது மானது. உரிய இடை வெளியில் மழை பெய்வித்து, எங்கள் கிராமத்தை பசுமை யாக்கு. இப்போது, இம்மழையை இங்கு பெய்யச் செய்யாது, அக்கம்பக்கத்தில் பெய்யச் செய்வாயாக! திடல்களின் மீதும், உயரமான பிரதேசங்களின் மீதும், மரங்களின் மீதும் பொழியச் செய்வாயாக!''
''ஆமீன்... ஆமீன்... ஆமீன்... ஆமீன்!''
அவ்வளவுதான்... மந்திரக்கோலால் சொடுக்கி விட்டது போல மழை நின்றது. மழை மேகங்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று பொழிந்தன.
தேங்கியிருந்த மழைநீரில் காகித கப்பல் செய்து விட்டபடி, ''எல்லாப் புகழும் இறைவனுக்கே!'' என்றாள் கண்ணகி.
***
ஆர்னிகா நாசர்