தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சயனத்தில் ராமர்!

சயனத்தில் ராமர்!

சயனத்தில் ராமர்!


PUBLISHED ON : மார் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில் பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள, திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப் போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.

வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு, ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில் இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.

தெலுங்கு புத்தாண்டை, 'யுகாதி' என்பர். யுகாதி என்றால், யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க வேண்டும்.

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர், 'நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய வேண்டியது தானே...' என்றனர்.

அதற்கு ராவணன், 'உங்களுக்கு வந்த யோசனை எனக்கு வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே...' என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள் வளரும் என்பதற்கு, இது உதாரணம்.

தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின் முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர் கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.

சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன் ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன் வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம, லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர். ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார்.

உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து, ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.

பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார். ஆனால், இத்தலத்தில், 'வல்வில் ராமன்' என்ற பெயரில், சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.

வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று, காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று, திருப்புள்ளபூதங்குடி.

பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில் வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு, குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில், 4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us