தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் மட்டுமே...



சுவிட்சர்லாந்தில் வேலை செய்கிறாள், நண்பரின் மகள். மாற்று மத வாலிபரை, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், எந்தவித மத செயல்பாடுகளும் இன்றி, திருமணத்தை எளிமையாக முடித்துக்கொள்வதாக, நண்பருக்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து இருந்தார்.

'நம் முறைப்படி, திருமணம் செய்து தர, நான் தயார்...' என்றிருக்கிறார், நண்பர்.

'திருமணம் சார்ந்த மந்திரங்கள், செயல்பாடுகள், தாலி ஆகியவற்றில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருமனம் இணைந்தால் போதும் என்பது, எங்கள் இருவரின் கருத்து...' என, கூறி விட்டாள், மகள்.

நண்பரும், விடாமல் வலியுறுத்தினார்.

'திருமணம் என்றால், நாள், நேரம் பார்த்து செய்கிறீர்களே... இதுவே விவாகரத்து செய்கிறபோது, இப்படி ஏதாவது செய்கிறோமா... ஆக, விவாகரத்துக்கு இல்லாதது, திருமணத்துக்கு மட்டும் ஏம்ப்பா... முடிந்தால், வாழ்த்துங்கள்... இல்லாவிடில், ஒதுங்கிக் கொள்ளுங்கள்...' என்றிருக்கிறாள்.

வாயே திறக்கவில்லை, நண்பர்.

தான் காதலித்தவரை திருமணம் செய்து, புகைப்படத்தை, 'இ - மெயிலில்' அனுப்பி வைத்தாள், மகள்.

வருங்காலத்தில், பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளின் திருமணத்தில், ஒரு விருந்தாளி போல் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகி வருவதை நினைத்தால், கவலையாக உள்ளது.

உலகம் எங்கே செல்கிறது!

ராஜிராதா, பெங்களூரு.

பாட்டியின், சமயோஜிதமான பணி!



சமீபத்தில், என் மருமகளுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. பணி நிமித்தமாக நான் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தையை குளிப்பாட்டுவது, மருமகளுக்கு சிரமமாக இருந்துள்ளது.

குழந்தையை பார்க்க வந்த ஒருவர், 'போன் செய்தால், ஒரு பாட்டி வந்து குளிப்பாட்டி, நன்றாக துவட்டி விடுவார்...' என கூறி, பாட்டியின் கைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.

அதன்படி, 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர், குழந்தையை குளிப்பாட்ட ஆரம்பித்தார்.

அவரிடம் விசாரித்ததில், 'ஒரு குழந்தையை குளிப்பாட்டுவதற்கு, 50 ரூபாய் கட்டணம் வாங்குகிறேன். ஒரு நாளைக்கு, குறைந்தது, 5 - 6 வீடுகளுக்கு சென்று, குழந்தைகளை குளிப்பாட்டுகிறேன்.

'அது மட்டுமல்ல, படிப்பு, வேலை நிமித்தமாக, கணவன் - மனைவி வெளியில் சென்று விடுவதால், துணையின்றி தனிமையில் இருக்கும் முதியோருக்கு துணையாக, காலை முதல் மாலை வரை இருக்கிறேன்.

'பகல் முழுதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பதால், இரவில் நன்றாக துாக்கம் வருவதுடன், ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் இல்லை; கவலையும் இல்லை. நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவை போக, மீத பணத்தை, அனாதை ஆசிரமங்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு கொடுத்து விடுவேன்...' என்றார், பாட்டி.

பாட்டியின் பேச்சும், செயலும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை உணர்ந்து பாராட்டினேன்.

- மு. முத்துலட்சுமி, சிவகங்கை.

ஹிந்தி கற்க இப்படியும் ஒரு வழி!



நெல்லையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். முன்னிருக்கையில், நடுத்தர வயதில் ஓர் ஆணும், அவர் மகளும் பயணம் செய்தனர். அப்பெண்ணுக்கு, 10 வயது இருக்கும். ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போது, ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்த்து, ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

ஆர்வ மிகுதியால், 'என்ன எழுதுகிறாய்...' என, கேட்டேன்.

நோட்டை என்னிடம் காண்பித்தாள், அப்பெண். ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரையும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என, எழுதியிருந்தாள்.

'அங்கிள்... நான், ஹிந்தி வகுப்பு போயிட்டிருக்கேன். அப்பாவோடு ரயிலில் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரையும் இதுபோல் எழுதி வைத்து படிப்பேன்.

'இப்ப எனக்கு, 150க்கும் மேற்பட்ட, ரயில் நிலையத்தின் பெயர்களை, ஹிந்தியில் எழுதவும், படிக்கவும் தெரியும். முதலில், விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். இதுவே பழக்கமாகி விட்டது...' என்றாள்.

விளையாட்டாகவும், மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொள்ளும் எந்த பாடமும் கடைசி வரை மறக்காது என்பதை, அப்பெண் எனக்கு உணர்த்தினாள்.

இனி, நாமும் இதுபோன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே!

க. சரவணகுமார், நெல்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us