PUBLISHED ON : ஜூலை 18, 2010

வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in
என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*ஜூலை 4, 2010 வாரமலர் இதழில், மானக்கஞ்சாறர், கலிக்காமர் புராணக்கதைகள் வாயிலாக, 'முடிகாணிக்கை கொடுப்பது ஏன்?' என்பதற்கு விளக்கம் கூறி தெளிவுப்படுத்தினார் தி.செல்லப்பா. நீண்ட நாட்களாக அனைவருக்கும் இருந்த ஐயப்பாட்டுக்கு விடை கிடைத்தது. - எஸ்.விஜயா, விருகம்பாக்கம்.
*திண்ணை பகுதியில் நடுத்தெரு நாராயணன் எழுதிய, 'எலே' என்ற நெல்லை சொல்லின் விளக்கம் ரொம்பவும் அருமை. - கே.கருப்பசாமி, கோவை.
*இ.உ.இ., பகுதியில், பெங்களூரு வாசகி கு.ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் எழுதிய, பெண்கள் சேர்ந்து, வக்கிரபுத்தி கொண்ட ஒரு ஆணை, 'பளார்' என தைரியமாக கன்னத்தில் அறைந்த செய்தி படிக்கையில், 'மகாகவி பாரதியின் பெண்மை வெல்க என கூத்திடுவோமடா... பெண்மை வாழ்க என கூத்திடுவோமடா...' என்ற வீர வரிகள் தான் நினைவுக்கு வந்தன. - இளங்கோ, மதுரை.
*இ.உ.இ., பகுதியில் பெங்களூரு வாசகி கு.ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் எழுதிய, 'இப்படி பலர் தேவை!' கடிதம் படித்தேன். பெண்கள் என்றால் கை எடுத்து கும்பிடுவது போன்று இல்லை என்றாலும், கண்றாவியாக உடை உடுத்தாமல், அங்கத்தை மறைக்கும்படி உடை உடுத்தியிருந்தால், இந்த அசிங்கம் ஏற்பட்டிருக்குமா?
- ம.ராஜலட்சுமி, சென்னை.
*பா.கே.ப., பகுதியில் வெளியான செய்தியில், ஆண்டவன் சன்னதியில் அரசனும், ஆண்டியும் ஒன்றுதான் என்று, ஒரு நீதிபதியை நிறுத்திக் கேட்ட பெண்மணியின் தைரியம் பாராட்டப்பட வேண்டியது. அப்படி கேட்ட பின்னும் உரைக்காத நீதிபதியின் செய்கை, நீதித்துறைக்கே அவமானமானது. - ஜே.சி.வர்ஷா, சென்னை.
*தமிழின் பெருமைகளை கடல் தாண்டி கொண்டு சேர்த்து, தமிழ்மொழி இலக்கணங்களை, இலக்கியங்களை மியான்மரில் பரவச் செய்தது மட்டும் இல்லாமல், அங்குள்ள லட்சக்கணக்கான தமிழரின் மனங்களையும், குணங்களையும் கண்டறிந்து, நம்முடன் பகிர்ந்து கொண்ட கோ.வேணுகோபாலின், 'பர்மா எனும் மியான்மரில் ஒரு திங்கள்!' கட்டுரை படித்து, மெய்சிலிர்த்து போனேன். - செ.திருமாவளவன், விழுப்புரம்.
*'ஆருயிர் நண்பனே ஆனாலும், வீட்டுக்கு வந்தால் வாசலுக்கு வெளியே நிறுத்து... குடும்ப அந்தரங்க விஷயங்களை அவனிடம் சொல்லாதே!' என்ற உயர்ந்த தொரு கருத்தை இந்த வார, 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் சொல்லாமல் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள். - ம.கிரிஜா, கடலூர்.
*தனக்கென வாழாமல், பிறருக்கென வாழும் மனதுள்ள மனிதர்கள் மறைந்தாலும், வாழ்கின்றனர் எனும் கருத்தை ஜே.செல்லம் ஜெரினா எழுதிய, 'மனசெல்லாம் மாயா!' சிறுகதை உணர்த்தியது.- டி.பத்மா, ராம்நகர்.
*சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், அதன் சீற்றம் குறைவதில்லை என்பது போல், கால் ஊனமாகிவிட்ட நிலையிலும், பொய் கால் மாட்டி, கராத்தேயில், 'பிளாக் பெல்ட்' வாங்கியுள்ளார் அமெரிக்காவின் டோமன் என்ற ஜோல்னா பையனின் தகவல், ஊனமுற்றவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்
- என்.பரமகுரு, பெரியகுமட்டி.
*இடைகால் வாசகி பி.மாயா எழுதிய, 'கண்களும் வேண்டாம்!' கவிதை, காதல் உணர்வுகள் செறிந்து வித்தியாசமாக இருந்தது. 'என் கண்கள் இரண்டையும் நீ குத்தகைக்கு கொள்ளத் தயாரென்றால் தூக்கம் கூட வேண்டாம்... கனவுகள் மட்டும் போதுமெனக்கு!' என்ற வரிகள் காலத்திற்கும் நிற்கும்!
- விஜய நிர்மலன், மணப்பாக்கம்.
*சுற்றுப்புறச் சூழலும், சுற்றி இருக்கும் மக்களும் தான் நம் உலகம்; நம் வாழ்க்கை. பூமியில் களங்கமில்லாத நாடு ஏதுமில்லை, நாட்டுப்பற்றும், நம்பிக்கையும் இருந்தால் நம் நாட்டையும் சொர்க்கமாக்கலாம் என்று எடுத்துக் கூறிய, வி.உஷாவின், 'மக்களின் தேசம்' சிறுகதை, 'நச்'சென்று நம்பிக்கை தந்தது.
- எஸ்.செந்தில்குமார், குரோம்பேட்டை.
மின் அஞ்சல் அர்ச்சனை!
*ஜூலை 11, 2010 வாரமலர் இதழில், ஜே.சி.மெல்வின் எழுதிய, 'விண்வெளி சுற்றுலா கட்டணம் ரூ.90 லட்சம்!' கட்டுரை படித்தேன். அடுத்த மாநிலத்துக்கு போகவே வசதியில்லை; இதில், விண்வெளி சுற்றுலாவுக்கு எங்கே போவது? 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சி போல், எந்த, 'டிவி' சேனலாவது, விண்வெளி சுற்றுலாவுக்கு செல்ல போட்டி வைப்பர்; அதில் ஜெயித்து, போய் கொள்ளலாம். இப்படி ஒரு சுற்றுலா இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி. - கே.சிவசங்கர், நெய்வேலி.
