PUBLISHED ON : ஜூலை 18, 2010

* ஆணும்,பெண்ணும் ஓரினம் ! - பரிசு ரூ.1500
ஒரு குழந்தை தான் எனக்கு. இருந் தாலும், பிரசவ காலத்தில் உடம்பைக் கொஞ் சம் கவனிக்காமல் விட்டதால், தொப்பை விழுந்து விட்டது. இதனால், ஆபிசில் எனக்கு என்ன பட்டப் பெயர் என்றும் தெரியும். எப்படி தளர்வாக சேலை கட்டினாலும், மீறி நிற்கும் வயிறு தான் என் ஒரே எதிரி! அதற்காக சில பயிற்சிகளை வீட்டில் செய்தால், போனசாக கணவரின் சந்தேகம்... 'இத்தனை வயசுக்கு அப்புறம் எதற்கு இதெல்லாம்?' எனக் கேட்கிறார். தன் மனைவி தொப்பையுடன் இருந்தால் தான், யாரும் பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறாரோ என்னவோ? எந்த வயதிலும் இளமையாய் இருக்க விரும்பும் ஆண்கள், சம்பாதிக்கிற தன் மனைவியை சீக்கிரம் கிழடு கட்டையாகவே பார்க்க விரும்புகின்றனர். தனக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டமா? யோசியுங்கள் ஆண்களே! - கிரிவலம் வந்த நல்லூர் வாசகி.
* டூ வீலர்காரர்களே நீங்களும் இதை பின்பற்றலாமே ! - பரிசு ரூ.1000
சில ஆண்டுகளுக்கு முன், என் தந்தை என்னை டூ வீலரில் அழகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வருகையில், ஒரு மரத்தின் அருகில், ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு ஒரு தம்பதியர் கவலையுடன் அங்குமிங்கும் பார்த்தவாறே நின்று கொண் டிருந்தனர். அவர்கள் அருகில் வண்டியை நிறுத்திய என் அப்பா, 'ஸ்கூட்டர் ரிப்பேரா...' என்று கேட்டார். அதற்கு அவர், 'பெட்ரோல் தீர்ந்து விட்டது, மனைவியை தனியாக விட்டுச் செல்ல முடியாததால் நின்று கொண்டிருக்கிறேன்... பக்கத்தில் பெட்ரோல் பங்க் எங்காவது உள்ளதா?' என்று கேட்டார். உடனே, அவர்களிடம், கவலை வேண்டாம் எனக் கூறி, எங்கள் டூ வீலர் பாக்சில் வைத்திருந்த ஒரு பாட்டில் பெட்ரோலை அவர்களிடம் கொடுத்து, போட்டுக் கொள்ளச் சொன்னார் என் தந்தை. அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'ஆண்டவனாகப் பார்த்து உங்களை அனுப்பி இருக்கிறார்...' என கும்பிட்டவாறு, அதற்கான பணத்தை கொடுக்க முன் வந்தனர். என் தந்தை வாங்க மறுத்து, 'மனிதனுக்கு மனிதன் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்; அதைத்தான் நான் செய்தேன்...' எனக் கூறியவாறு, வண்டியைக் கிளப்பினார். அன்று முதல், நானும், இதேபோன்று என் வண்டியில் இன்று வரை, அவசர தேவைக்காக எப்போதும் கொஞ்சம் பெட்ரோல் பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்துள்ளேன். வழியில் பெட்ரோல் இல்லாமல் தவிப்போருக்கு, பிரதிபலன் பாராமல் என் தந்தை வழியில், உதவி செய்து வருகிறேன். இதில் ஏற்படும் மனத்திருப்தியே அலாதி. நீங்களும் இதைப் பின்பற்றலாமே! - டி.டி.சாந்தமூர்த்தி, மதுரை.
* பயனுள்ள டிப்சை தாங்கப்பா... - பரிசு ரூ.500
பத்திரிகைகளில், பெயர் வரவேண்டும் என்பதற்காக, இப்போதெல்லாம் எதையாவது எழுதி விடுகின்றனர். மகளிருக்கான பத்திரிகை ஒன்றில் வாசகி ஒருவர், 'அழும் குழந்தையை சமாதானப்படுத்த, வாஷிங் மிஷினை ஓடவிட்டு, அதன் மேல் குழந்தையை உட்கார வைத்தால், அழுகையை நிறுத்திவிடும்...' என்றும், இன்னொரு வாசகி, 'சாமி படங்களுக்கு வைக்கும் பூக்களை உப்புத் தண்ணீரில் அமிழ்த்தி, அதை படத்திற்கு வைத்தால், நீண்ட நேரம் பூ வாடாமல் இருக்கும்...' என்றும் எழுதி, ஏனைய வாசகர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்திருக்கின்றனர். வாஷிங் மிஷின் மேல் குழந்தையை உட்கார வைப்பது பாதுகாப்பானதா...? உப்பு
தண்ணீரில் அமுக்கிய பூவை வைத்தால், படம் வீணாகி விடாதா...? பூ வாடாமல் இருப்பதை விட, படம் முக்கிய மில்லையா... கொஞ்சம் யோசித்து, நாம் எழுதும் செய்தி பிறருக்கு பிரயோஜனப் படுவது போல் இருக்க வேண்டுமே தவிர, விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை உணர வேண்டும்! ஏதோ வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ... என்று எதையாவது எழுதி விடுகின்றனர். பத்திரிகைகாரர்களும் இடத்தை சரிக்கட்ட எதையாவது வெளியிட்டு விடுகின்றனர். இனியாவது உணர்ந்து செயல்படுவரா? - நீலாம்பரி, சென்னை.
