தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முடிவுகளை திணிப்பதை விட...

முடிவுகளை திணிப்பதை விட...

முடிவுகளை திணிப்பதை விட...


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறர் சொல்லும் முடிவுகளை ஏற்று, அதன்படி செயல்படுவோரை மூன்று ரகங்களாக பிரிக்கலாம்...

முதலாமவர், 'கேக் க்ரீம்' மீது வைக்கப்படுகிற, செர்ரி பழம் போன்றவர்கள். அதாவது, பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வர்.

அடுத்த ரகத்தினர், மரக்கதவில் பொருத்தப்படுகிற, தாழ்ப்பாள் போன்றவர்; போட்டு, முடுக்கி அழுத்தினால் மட்டுமே மனதில் பதித்துக் கொள்வர்.

அடுத்தவர்கள், தங்கத்தில் பதிக்கிற வைரம் போன்றவர்கள்; தங்கத்தை உருக்கி, சரியான அளவு எடுத்து, அதில், துல்லியமாக செதுக்கிய வைரத்தை பதித்து, அது, விழுந்து விடாதபடி, தக்க ஏற்பாடும் செய்வது போல் வித்தியாசமானவர்கள்.

நம் முடிவை நிராகரிப்போரை பற்றி, இங்கே பேசப் போவதில்லை; மூன்றாவது ரகத்தினரை பற்றி, சற்று விரிவாக பேசுவதே, இக்கட்டுரையின் நோக்கம்.

எவ்வளவு கவனமாக பதித்தாலும், சமயங்களில், வைரக் கல், ஏனோ உதிர்ந்து விடுகிறது. இதற்கு, தொழில்நுட்ப கோளாறே காரணம்; இதை, நன்கு அறிவர், நகை கலைஞர்கள்.

அதேபோன்று, நம் முடிவுகளை, சில பல ஆட்சேபங்களுடன் ஏற்றுக் கொள்வோரின் மனநிலையும் இதுதான். நம் யோசனைகளை நிராகரித்து, தங்களது செயலை நியாயப்படுத்த தக்க காரணம் தேடுவர்.

காரணம், இதை, அவர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட முடிவாக கருதுவது தான்.

வசதியான, படிக்காத மாப்பிள்ளை; வசதி குறைவான, ஆனால், படித்த மாப்பிள்ளை.

மகள் விரும்பியதோ, இரண்டாவது பையனை; தந்தை திணித்ததோ, முதல் பையனை. பிய்த்து கொண்டு விட்டது, திருமண பந்தம். தந்தை, தெளிவுபட பேசியிருக்க வேண்டும்; மனம் விட்டு உரையாட, மகளை அனுமதித்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்காததால், பந்தம், தீப்பந்தமாகி விட்டது.

'ஏம்மா, அந்த பையனை வேண்டாங்குறே; காலமெல்லாம், எங்களோட கஷ்டப்பட்டே வாழ்ந்துட்டே... நீ, நல்லா வசதியா வாழணும்ன்னு தானம்மா, நாங்க ஆசைப்படுவோம். மறுபடியும், ஒரு சம்பளக்காரன் கையில போய் மாட்டி, மாத கடைசியில் திண்டாடுற வாழ்க்கை வாழணுமா... நீ சம்மதிச்சேன்னா, பெரிய இடத்து சம்பந்தம்ன்னு எனக்கும், நம்ம குடும்பத்துக்கும் பெருமை கிடைக்கும்; நல்லா யோசிச்சு முடிவெடு.

'படிச்சவன்கள்ல, குண கேடன்களும் படிக்காதவர்களில், பண்பாளர்களும் இல்லயா... கல்யாணம் செய்த பின், அன்பா சொல்லி, 'கரஸ்பான்டன்ஸ்'ல படிக்கச் சொல்லி, அவனை பட்டதாரியா ஆக்கிட முடியாதா... நல்லா யோசிச்சு முடிவெடும்மா...' என்று, அவளிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய தந்தை, நேர்மாறாக, 'நான் நினைச்சது தான் இந்த வீட்ல நடக்கணும்; இல்லன்னா, நடக்குறதே வேற...' என்று ஆதிக்கம் செய்தார்; அதனால் தான், மண்ணை கவ்வினார்.

வெளிநாடு பிடிக்காத மகனை, கட்டாயப்படுத்தி, சில லட்சம் கொடுத்து, துபாய் வேலைக்கு அனுப்பினர், பெற்றோர். அந்த பயல், ஏதோ துபாயை சுற்றிப் பார்க்க போனவன் போல், பதினைந்தே நாளில் திரும்பி வந்து விட்டான். கேட்டதற்கு, 'வேலை கடுமை; வெயில் கொடுமை; சாப்பாடு பிடிக்கல...' என்றான்.

திணிக்கப்படுகிற முடிவுகள், வெகுகாலம் தாக்கு பிடிப்பதில்லை. புளி போட்டு, விளக்கி புரிய வைத்து, தக்க மனிதர்களை கொண்டு அறிவுரை வழங்கி, சிந்திக்க அவகாசம் கொடுத்து, அரை மனதை, முழு மனதாக்கி, கேட்கிற சவுகரியங்களை முடிந்த வரை செய்து கொடுத்து, பயலை மடக்கிப் போட்டால், பழியாய் கிடந்திருப்பான் துபாயில்!

உறவுகள் என்றில்லை... ஊழியர்கள், முதலாளிகள், நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களை சரி செய்யக் கூட, ராணுவ, 'கமாண்டு'கள் பயன்படாது.

முடிவுகளை திணிப்பவர்கள், இன்னொரு தவறும் செய்கின்றனர்... உடனே, இன்றே, இப்போதே, இக்கணமே என்கின்றனர். முடிவுகளை அவசரப்படுத்தவே கூடாது; அவசியம், அவகாசம் தரப்பட வேண்டும்.

இப்படியெல்லாம், காய்களை நகர்த்தினால், நீங்களும், 'விஸ்வநாதன் ஆனந்த்' தான்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us