PUBLISHED ON : ஜூன் 04, 2017

கிழக்கு பதிப்பகம் வெளியீடான, 'சிரிப்பு டாக்டர்' நூலிலிருந்து: சென்னை மாகாண சிறு சேமிப்புத் திட்டத்தின் அதிகாரி, ஒரு கூட்டம் நடத்தினார். அதில், சிறப்புரை ஆற்றிய என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு கதை சொன்னார். அது:
ஒரு ஓட்டலுக்கு வந்த பயணி, தான் ஊருக்கு போகும் போது வாங்கிக் கொள்வதாக கூறி, நூறு ரூபாய் நோட்டை கேஷியரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில், மளிகைப் பாக்கியை கேட்டு வந்த மளிகைக் கடைக்காரரிடம், பயணி கொடுத் திருந்த, நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார், கேஷியர்.
அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார், மளிகைக் கடைக்காரர். அப்போது, தனக்குச் சேர வேண்டிய பில் தொகையை கேட்டு, ஆள் அனுப்பியிருந்தார், குடும்ப டாக்டர். உடனே, தன் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை கொடுத்தனுப்பினார், மளிகைக் கடைக்காரர்.
முன்பு, ஒரு பார்ட்டி நடத்திய வகையில், அந்த ஓட்டலுக்குச் சேர வேண்டிய பாக்கிக்காக, அந்த நூறு ரூபாயை ஓட்டலுக்கு கொடுத்தனுப்பினார், டாக்டர். பின், பயணி, ஊருக்குப் புறப்பட்ட போது, அதே நூறு ரூபாய் நோட்டை கொடுத்தார், கேஷியர்.
நோட்டை வாங்கிய பயணி, 'இது, செல்லாத நோட்டு; உங்களிடம் கொடுத்தால், செல்லுபடியாகும் என்று கொடுத்தேன். என்னிடமே திரும்பி வந்து விட்டதே...' என்று வருத்தப்பட்டார்.
இக்கதையை கூறிய கலைவாணர், அருகில் இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம், 'இதில் யாருக்கு நஷ்டம் என்பதை தலைவர் தெரிவிக்க வேண்டும்...' என்றார்.
'பயணிக்கு தான் நஷ்டம்...' என்றார் செட்டியார்.
'அது தான், செல்லாத நோட்டாயிற்றே...'
'அப்படியானால், யாருக்கும் நஷ்டம் இல்லை...' என்றார்.
'ஓட்டல்காரர், மளிகை கடைக்காரர், டாக்டர் ஆகியோரது, நூறு ரூபாய் கடன்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனவே...' என்றார், என்.எஸ்.கே.,
'அதற்குப் பெயர் தான் நாணயம்; நோட்டின் மதிப்பு என்பது, காகிதத்தின் விலை தான். ஆனால், அதற்கு, நாம் நூறு ரூபாய் மதிப்பு கொடுக்கிறோம்...' என்றார், ஆர்.கே. சண்முகம்.
சிவாஜி நாடக மன்ற நடிகர் எஸ்.ஏ.கண்ணன், ஒரு பேட்டியில் சொன்னது: சக்தி நாடக சபாவில், ஆறு ஆண்டுகள் இருந்தார், சிவாஜி. மதுரை மாவட்டம், பெரியகுளம் என்ற ஊரை, எங்களால் மறக்க முடியாது. கம்பெனி அங்கே முகாமிட்டிருந்த போது தான், கஷ்ட காலம் உச்சத்தை அடைந்தது; ஒருவேளை சோற்றுக்கே கஷ்டம்.
பெரியகுளம் அருகில் உள்ள தேவதானப்பட்டியின் மிராசுதாரர், பழனி, ஒரு மூட்டை அரிசியை எங்களுக்குக் கொடுக்க முன்வந்தார். ஆனால், அதை சமைத்து சாப்பிட விறகு வேண்டுமே... எங்களிடமோ விறகு வாங்க காசு இல்லை. எனவே, மறுநாள், மிராசுதாரர் தரவிருக்கும் அரிசியை, நான் வாங்கி வருவதென்றும், சிவாஜியும் மற்றும் சிலரும் அருகில் இருக்கும் மலைக்குப் போய், விறகு வெட்டி வருவது என்றும் திட்டமிட்டோம்.
அதிகாலை, 4:00 மணிக்கு வண்டியில் அரிசி மூட்டையை கொடுத்தனுப்பிய பழனி, 'இதைக் கொண்டு போய் சேர்க்க வேண்டியது உன் பொறுப்பு...' என்று சொல்லிவிட்டார்; காரணம், அப்போது, ரேஷன் கெடுபிடி அதிகம். இரண்டு படி அரிசி கூட, ஒரு இடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு கொண்டு போக முடியாது.
அரிசி கொண்டு வரும் போது, 'செக்போஸ்டில்' மாட்டி, நிலைமையைக் கூறி தப்பித்து, அரிசியுடன் வந்து சேர்ந்தேன்.
விறகு வெட்ட போனவர்களோ, காலை, 11:00 மணி ஆகியும் வரவில்லை. வெயில் காரணமாக, நிழலில் உட்கார்ந்து, கையோட எடுத்துப் போயிருந்த கட்டுச் சோற்றை, பிரித்து சாப்பிட துவங்கியுள்ளனர். ஆனால், சாதத்தில் மண்ணெண்ணெய் வாடை. மறந்து போய் மண்ணெண்ணெய் பாட்டிலில், நல்லெண்ணெய் வாங்கி வந்து, புளி சாதம் கிளறியதன் விளைவு!
இரவில், நாடகத்தில் பலவித வேடங்களில் நடித்து, பகலில், தலையில் விறகுக் கட்டுடன் ஊருக்குள் நடந்து வந்தால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பர் என எண்ணி, வெட்கப்பட்டு, இருட்டும் வரை, அங்கேயே இருந்து, அதன்பின் வந்தனர்.
நடுத்தெரு நாராயணன்
