PUBLISHED ON : ஏப் 25, 2021

தெய்வம் பலவிதங்களில் எச்சரிக்கிறது; பலர் மூலமாகவும் எச்சரிக்கிறது. உணர்பவர்கள், உய்கின்றனர்; உணராதவர்கள்...
கைலாச மலையை துாக்கி, சாமகானம் பாடி, சிவபெருமானிடம் வரங்கள் பெற்ற, ராவணன், ஒருசமயம், புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருந்தான். அப்போது, அசும் நரகம் எனும் பாதாள உலகத்தை பார்த்து, அங்கு போனான்.
அங்கே, மகாபலியின் ஆஜானுபாகுவான உருவத்தை பார்த்ததும், வர பலத்திலும், தன் பலத்திலும் ஆணவம் கொண்ட ராவணன், 'உருவத்தை பார்த்தால் என்னவோ பெரிய வீரன் போல் இருக்கிறாயே... உண்மையான வீரனாக இருந்தால், நீ, என்னுடன் போருக்கு வா...' என்று கேலியாக, போருக்கு அழைத்தான்.
'அப்பா, நான் மகாபலி. மகாவிஷ்ணு என்னை இங்கே சிறை வைத்திருக்கிறார். என்னைப் போய் போருக்கு அழைக்கிறாயே...' என்றார்.
'கவலைப்படாதே, நான், உன்னை விடுவிக்கிறேன்...' என்றான், ராவணன்.
மகாபலிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
'என்னை சிறை வைத்தவனை வென்று, எனக்கு விடுதலையளிப்பது இருக்கட்டும். அதற்கு முன், அதோ என் எதிரில் இருக்கும் அந்த குண்டலத்தை துாக்கு, பார்க்கலாம்...' என்றார்.
அலட்சியமாக குண்டலத்தை நெருங்கிய, ராவணன், அதை துாக்க முயற்சித்தான். அசைக்க கூட முடியவில்லை. குண்டலத்தை துாக்க முயற்சித்து, வாயில் ரத்தம் கக்கி, மல்லாக்க விழுந்தான்.
'உன்னால் துாக்க முடியாத இந்த குண்டலம், என் தாத்தா இரணியகசிபு காதில் அணிந்திருந்தது. அப்படியென்றால், அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்திருக்க வேண்டும். அவரையும், அவரை சேர்ந்த ஏராளமான அரக்கர்களையும் கொன்ற அந்த மகாவிஷ்ணுவை வென்று, என்னை விடுவிப்பது உன்னால் செய்யக்கூடிய காரியமா என்ன...' என்று விவரித்தார், மகாபலி.
'அப்படியா... உன்னை இங்கே சிறை வைத்து, வாசல் காவலனாக இருப்பதாக நீ சொன்ன அந்த மகாவிஷ்ணுவை வென்று, நான் உன்னை விடுவிக்கிறேன்...' என்றான், ராவணன்.
'இவன், ஏதோ ஆணவத்தில் பேசுகிறான். திருந்துகிறானா பார்க்கலாம். இல்லாவிடில் அழித்து விடலாம்...' என்று எண்ணி, ராவணனின் பார்வையிலிருந்து மறைந்தார், பகவான்.
'மகாவிஷ்ணுவே என்னிடம் பயந்து, மறைந்து விட்டார்...' என்று கொக்கரித்தபடி, இலங்கை திரும்பினான், ராவணன்.
மகாபலி சொல்லியும்; இரணியகசிபு அணிந்திருந்த குண்டலத்தை அசைக்க முடியாமல் அவமானப்பட்டும்; இவனை இப்போது தண்டிக்க வேண்டாம் என்று, ராவணன் பார்வையில் படாமல் வாய்ப்பளித்து, மறைந்தும்; ராவணன் நல்வழிப்படுவதாக தெரியவில்லை.
விளைவு... தெரிந்ததுதானே!
தெய்வம் பலமுறை பலர் வாயிலாகவும், பலவிதங்களாக எச்சரித்து, மன்னித்து வழிகாட்டுகிறது; உணர்ந்து சற்றேனும் நல்வழியில் நடக்க முயற்சிப்பது, மானிடர்களான நம் பொறுப்பு.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்
ஏகாதசி, சஷ்டி, கார்த்திகையன்று விரதம் இருந்தால், எலுமிச்சை சாறு மற்றும் மோர் குடிப்பதை தவிர்க்கவும். இது, விரத பலனை குறைக்கும்.
