PUBLISHED ON : ஏப் 25, 2021

'அம்மா...' என்ற அலறலில், வாசலில் நின்றிருந்த, மொத்த குடும்பமும் ஓடி வந்தது. முதலில் வீட்டினுள் நுழைந்த மகள், வள்ளியம்மை தான் பார்த்தாள். எசகுபிசகாக விழுந்து கிடந்தாள், அம்மா.
புழக்கடை குறட்டோரத்தில் விழுந்து கிடந்த அம்மாவின் தலை, எதிலோ மோதியதில், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
ஆம்புலன்சுக்கு போன் போட்டான், மூத்த மகன் சேது. இளைய மகன் வாசுவின் மனைவி, தண்ணீர் எடுத்து வந்தாள்.
ரத்தப் போக்கை நிறுத்த, தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து, காயத்தில் அழுத்தி, கட்டு போட முயன்றார், அப்பா.
தலையை வாகாய் துாக்கிப் பிடித்தாள், வள்ளியம்மை.
பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்ததும், போட்டது போட்டபடி, மொத்த குடும்பமும் கிளம்பியது.
மூத்த மகனின் மாமனார் வீட்டில் விசேஷம் என்று, நேற்றிரவே போனவர்கள், இப்போது தான் வருகின்றனர்.
அம்மா வீட்டிலிருந்து, சாயந்திரம் கிளம்பி வருவதாக கூறியிருந்தாள், மூத்த மருமகள்.
நேராக வயலுக்கு போய் விட்டான், இளையவன் வாசு.
இன்று, விரத நாள் என்பதால், நேற்றே பெரிய சம்பந்தி வீட்டில் தலை காட்டி, கை நனைத்து, இரவே வீட்டுக்கு வந்து விட்டாள், அம்மா. ஆச்சாரம், அனுஷ்டானம் அதிகம். பூஜை முடியாமல் பச்சை தண்ணீர் கூட பல்லில் படாது. சுத்தம், கவுரவம், அந்தஸ்து பார்ப்பாள். யாரையுமே இரண்டடி தள்ளி நிறுத்தி, பேசி தான் பழக்கம்.
வெளியே வந்தார், டாக்டர்.
'என்னாச்சு டாக்டர்... கவலைப்படறாப்லே ஏதும் இல்லையே... இப்போ பரவாயில்லையா...' என, ஆளாளுக்கு சூழ்ந்து கொண்டனர்.
''சீரியஸ் தான். அவங்களுக்கு ரெண்டு சிறுநீரகமும் வேலை செய்யலை. அதனால தான் மயக்கமாகி இருக்குறாங்க. அடிபட்டதுல, ரத்தம் ரொம்பவே சேதாரமாகி இருக்கு. உடனே ரத்தம் கொடுக்கணும். காயத்துக்கான சிகிச்சை நடந்துகிட்டிருக்கு.
''உடனடியா அவங்களுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யணும். இல்லேன்னா, 'டயலிசிஸ்' பண்ணலாம். அவங்க உடம்பு தாங்காது. 'டோனரை' தேடுறதை விட, ரத்த உறவுகளின் சிறுநீரகம், 90 சதவீதம் ஒத்துப்போகும்.
''உடனடியா முடிவு பண்ணுங்க. நர்ஸ்கிட்ட சொல்லி, 'செக் - அப்' பண்ணிட்டு சொல்லுங்க; காலம் தாழ்த்தக் கூடாது. அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்,'' என்றார், டாக்டர்.
மகன்கள் வாசுவும், சேதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர, வாயை திறக்கவில்லை.
''அப்பா, நான் தரேன்பா... எனக்கு அம்மா வேணும்ப்பா,'' கதறிய மகளின் தலையை கோதினார், அப்பா.
''இல்லைடா, வள்ளிக்கண்ணு... அடுத்த மாசம், உனக்கு பரிசம் போட வர்றாங்க. அப்போ போயி ஆஸ்பத்திரி, படுக்கை, ஆபரேஷன்னு நின்னா நல்லாயிருக்காதுடா. அதான் ராசா கணக்கா ரெண்டு அண்ணனுங்க இருக்கிறாங்களே தாயீ... அவுங்க பார்த்துக்கிடுவாங்க.''
சேதுவும், வாசுவும் விழித்தனர்.
''சரி வாடா, வாசு... டாக்டர்கிட்ட இன்னும் விபரமா கேட்டு வரலாம்,'' என்று, வெளியே அழைத்து வந்தான், சேது.
தத்தம் மனைவியருக்கு போன் போட்டனர்.
சொல்லி வைத்தாற் போல, இருவரின் மனைவியருமே, 'சும்மா கிடக்கிற உறுப்பை அறுத்து எடுக்கிறதாவது...' என்றாள், ஒருத்தி.
'நல்லா இருக்கிற உடம்புல கத்தி வச்சு கீறணுமா... ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா...' என்று, பாய்ந்தாள், மற்றவள்.
ஏற்கனவே அரை மனதாயிருந்ததும், கட்டியவள்களின் ஆர்ப்பாட்டத்தில் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டனர்.
இவர்களின் சாக்கு போக்கும், மருமகள்களின் சுயநலமும் கிழவரை எரிச்சலுாட்டியது.
டயலிசிசில் நொந்து போனாள், அம்மா.
'ரெண்டு சிங்கக் குட்டிகளை பெத்திருக்கிறேனாக்கும்...' என்று, அடிக்கடி பீற்றிக்கொள்ளும் வார்த்தை, அர்த்தமிழந்து போனது.
'ஹூம்... மனசில்லாதவங்ககிட்ட என்னத்த மல்லுக்கட்ட?' மனம் விட்டுப்போனது.
தினமும் வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாய் அலைந்தாள், வள்ளியம்மை. சம்பந்தி வீட்டினர் வந்து பார்த்து, பேச்சளவில் சமாதானம் செய்து விட்டு, தத்தம் மகள்களிடம் வேண்டாத விஷயங்களை எல்லாம் வேண்டுமட்டும் ஓதிவிட்டே நகர்ந்தனர்.
அவ்வப்போது, பண்ணை ஆட்களும், அக்கம்பக்கத்தினரும் வந்து பார்த்து ஆறுதல் சொல்லிச் சென்றனர்.
நாட்கள் நகர்ந்தன. நாளுக்கு நாள் நலிய ஆரம்பித்தாள், அம்மா.
''அப்பா... வங்கியிலிருந்து பணம் எடுத்து வரச்சொன்னீங்களாமே... பொட்டப் புள்ளையை போயி அவ்ளோ ரொக்கம் எடுத்து வரச்சொல்லி, ஒத்தையிலே அனுப்பியிருக்கீங்களே... எங்ககிட்ட சொன்னா, நாங்க செய்ய மாட்டோமா... எதுக்கு அம்மாம் பணம், 'டோனரு'க்கா?'' படபடத்தான், வாசு.
''வள்ளிக்கண்ணு... பணத்தை ஆஸ்பத்திரியில கட்டிட்டு, ரசீதையும், மிச்ச பணத்தையும் கவனமா வச்சுக்கோ... பத்திரம்,'' என்றார், அப்பா.
''நாளைக்கு காலையில ஆபரேஷனாமே... நர்சம்மா சொல்லுச்சு... 'டோனர்' யாருப்பா, எவ்ளோ தொகை பேசினீங்க, எவ்ளோ தரப்போறீங்க... நம்ம அவசரத்தை பயன்படுத்திக்கிட்டு எக்கச்சக்கமா கேட்பாங்கப்பா... நீங்க ஆளை காட்டுங்க, நாங்க பேசிக்கிடுறோம். தரகர் கூட்டி வந்திருந்தா, அவருக்கு வேற கமிஷன் அழணுமே,'' மூச்சு இரைத்தது, சேதுவுக்கு.
''ஆமாம்பா... ஆம்புள புள்ளைகளா நாங்க நின்னு பேச மாட்டோமா... எவ்வளவு தர்றேன்னு சொன்னீங்க... அனாவசியமா ஏமாந்துட கூடாதுப்பா.''
அற்ப புழுவை பார்ப்பது போல, அருவருப்புடன் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார், கிழவர்.
''பெத்த பிள்ளைகளிடம் ஏமாந்ததை விடவா?'' என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டார்.
இருவருக்குமே, 'சுருக்'கென்றது.
சேதுவும், வாசுவும் தோள்களை குலுக்கியபடி நகர்ந்தனர்.
'செக் - அப் செஞ்சிட்டோம். ஒத்துப்போகலையாம்...' என்று, இருவருமே, 'செக் - அப்' செய்து கொள்ளாமலேயே பூசி மெழுகி, வருத்தத்தோடு முகத்தை வைத்து, அப்பாவிடம் கூறி விட்டனர்.
மறுநாள்-
காலையிலேயே ஆபரேஷன் துவங்கியது. பேரப் பிள்ளைகளை தவிர, மொத்த குடும்பமும் அங்கிருந்தது. மருத்துவர் குழு மலர்ச்சியோடு வெளியே வந்தது.
அப்பாவின் கையை பற்றி, ''ஆபரேஷன் வெற்றி. புது கிட்னி பொருத்தியாச்சு. அது வேலை செய்யணும். அதை, அம்மா உடம்பு ஏத்துக்கணும். அதுவரை, 'அப்ஸர்வேஷன்'ல இருக்கணும்.
''ஐ.சி.யூ.,வில் யாருக்கும் அனுமதி கிடையாது. இன்னும் மயக்கம் தெளியலை. கண்ணாடி தடுப்பு மூலமா பாருங்க, கடவுள்கிட்ட வேண்டிக்கிடுங்க... எல்லாம் நல்லா நடக்கணும். ஆமா, எங்கே அந்த பெரியவர்?'' என்றார், தலைமை மருத்துவர்.
சற்றே ஒதுக்கமாய் குறுகி நின்றிருந்தவரை அருகில் அழைத்தார்.
''கவலைப்படாதீங்கய்யா... உங்க மகனும் இப்போ நல்லா இருக்கார். இன்னும் முக்கால் மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சுடும் அவருக்கு. வார்டுக்கு மாத்திடுவாங்க, போய் பாருங்க.''
''ரொம்ப நன்றிங்கய்யா,'' என்று கையெடுத்து கும்பிட. அவர் தோளில் தட்டிக் கொடுத்தார், டாக்டர்.
''அட, மாதையா... நீ அம்மாவை பார்க்க வந்திருக்கேன்னு நினைச்சேன். உன் மகனுக்கு என்ன உடம்பு?''
''அண்ணே, ஒண்ணு கவனிச்சியா... நாட்டு மருத்துவன்கிட்ட லேகியம் வாங்கித் திங்கிறவனெல்லாம் இம்மாம் பெரிய ஆஸ்பத்திரியில வச்சு வைத்தியம் பார்க்கிற அளவுக்கு வளர்ந்துட்டாங்க.''
''வளர்த்து விட்டுருக்கோம்டா... யாரு வீட்டு காசு, எல்லாம் நம்மகிட்ட அடிச்ச காசு. நம்மகிட்ட ஒரு கணக்கு காமிச்சுட்டு நவுத்துன பணம் தானே. அதான் ஆஸ்பத்திரிக்கு தண்டமா அழ வேண்டியதா போச்சு.
கடவுள் இருக்காருடா.''
தலையை தாழ்த்தி, கூனி குறுகினார், பெரியவர்.
அவர்கள் வீட்டு பண்ணையாள், மாதையன். தோட்டம், தோப்பு எல்லாமே இவருடைய மேற்பார்வை தான். இவர்களிடம் சிறிது நிலம் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
''மாதையா, இப்படி வந்து உட்காரு... ஆத்தா, வள்ளிக்கண்ணு... காபி இருந்தா, மாதையனுக்கும் குடு.''
''பரவாயில்லைங்கையா... ஒண்ணும் வேணாம்.''
''அப்பா... இதென்ன, பண்ணையாளை போய் நமக்கு சமதையா உட்கார கூப்பிடறீங்க?''
''மாதையா, உனக்கு காபி வேணாம்னா, எனக்கும் வேண்டாம். ஆனா, நான் மாத்திரை போட்டுக்கணும்.''
வள்ளியம்மை நீட்டிய தம்ளரை பெற்றுக் கொண்டது, மாதையனின் கரங்கள்.
'என்னடா நடக்குது இங்கே...' சகோதரர்கள் கண்களால் கிசுகிசுக்க, மருமகள்களோ சன்னமாக குசுகுசுத்தனர்.
''வள்ளிக்கண்ணு, அந்த பணத்தை எடுத்து மாதையனுக்கு கொடு.''
''மாதையா, உம் மவனுக்கு சத்தான ஆகாரம், மருந்து, மாத்திரை கொடுக்கணும். இப்போதைக்கு வேலைக்கு போக முடியாது. உடம்பு தேறணுமில்ல. இதை வச்சுக்கோ,'' என்றார்.
பதட்டத்தோடு மறுப்பாய் இரண்டடி பின்னால் நகர்ந்தார், மாதையன்.
''சொல்றதை கேளு.''
''மன்னிக்கணும்யா. இது வேணாம். நானும், என் மகனும் பணத்துக்காக இத செய்யலை. இப்போ இந்த பணத்தை வாங்கினா, என் பையன் உடல் உறுப்பை வித்து தின்னதுக்கு சமானம். அய்யா, இது நன்றிக் கடன். பாட்டன், முப்பாட்டன் காலத்துலருந்து, உங்க உப்பை தின்னுட்டு வாரோம்.
''இப்ப, அம்மாவுக்கு உதவுறதுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சுதுங்களே, அது எங்க கருப்பண்ண சாமி தந்த வரமுங்க. காசை கொடுத்து, எங்களை அசிங்கப்படுத்திடாங்கய்யா. இது, எங்க செஞ்சோற்றுக் கடன். எங்க கடமைய்யா,'' மாதையன் உடல் அதிர்ந்தது.
''ஹூம்... சரி வள்ளிக்கண்ணு, இனிமே, மாதையன் பையன் சங்கரனும், உனக்கு ஒரு அம்மா மாதிரி தான். அவனையும், உங்க அம்மாவை காப்பாத்தறது போல, கண்ணுல வச்சு பார்த்துக்கிடணும். உங்கம்மா இன்னிக்கு உசிரோட இருக்க காரணமே, இந்த மாதையன் போட்ட பிச்சை தான்.
''மாதையா... உன் வளர்ப்பு ஒசந்ததைய்யா. உன் பையனை அருமையா வளர்த்திருக்கே. உன் பேச்சை எதுத்து பேசாம, நீ கை காட்டினதுமே தலையாட்டி நிற்கிற ஒசந்த புள்ளையை பெத்து வளர்த்திருக்கே. நீயும், உம் மவனும் நல்லாயிருக்கணும்,'' துண்டால் கண்ணீரை ஒற்றிக்கொண்டார், அப்பா.
''வள்ளியம்மை, இங்கே என்னதான் நடக்குது?''
''இன்னுமா உனக்கு புரியலை அண்ணா... குத்தகை பணத்தை குடுக்க, மாதையனோடு, டவுனுல வேலை பார்க்கிற அவங்க புள்ளை சங்கரனும் வந்தாக. அம்மா நிலைமையை பார்த்துட்டு, 'நாம ஏதும் உதவ முடியுமா'ன்னு கேட்டாரு, மாதையன்.
''டாக்டரை பார்த்து பேசி, உண்மையா, 'செக் - அப்' பண்ணிட்டு வந்தாரு. எல்லாமே சரியா இருக்குன்னு, டாக்டர் சொன்னதும், அவரே முன் வந்து, தன்னோட சிறுநீரகத்தை அம்மாவுக்கு தரேன்னுட்டாரு. இப்போ, ஆபரேஷனும் முடிஞ்சுது. அதான், பணத்தை வாங்கிக்க சொன்னார், அப்பா.
''வாங்க மாட்டேன்னு ஒத்தை கால்லே நிக்கிறாரு, மாதையன். செஞ்சோற்றுக் கடன், நன்றி கடன்னு என்னென்னவோ பேசுறாரு... ஹூம்... பெத்த கடனை கழிக்க கூட, இங்க நிறைய பேருக்கு மனசு இல்லியே அண்ணே...
''நாம தான், நம்மை நிரந்தரம்ன்னு நினைச்சுகிட்டு ஆடறோம். ஆனா, நாளைக்கு நமக்கு என்ன நடக்கும்ன்னு யாருக்கு தெரியும். பெத்த ஆத்தாவை விட, நமக்கு ஏதேதோ பெரிசா தெரியுது,'' வள்ளியம்மை போட்ட போடில், முகம் சிறுத்தது. அண்ணிகளும் முகத்தை நொடித்துக் கொண்டனர்.
கண் விழித்தாள், அம்மா. இயல்பாக சிறுநீர் பிரிய, பாரம் நீங்கிய மனதின் நிம்மதி முகத்தில் தெரிந்தது.
எல்லாரும் சந்தோஷத்துடன் அறையினுள் நிற்க, மூலையில் ஒதுங்கி நின்றார், மாதையன்.
அனைவரையும் தவிர்த்து, அம்மாவின் பார்வை மாதையன் மீது நிலைத்தது. அருகில் வர, சைகை செய்தாள்.
''வா, மாதையா,'' அப்பாவின் கம்பீர குரல் நெட்டி தள்ளியது.
அம்மாவை பார்த்து கை கூப்பினார், மாதையன்.
அம்மாவும் கும்பிட்டாள்.
மாதையன் பதற, அம்மாவின் கண்களிலிருந்து, 'சர சர'வென உப்பு நீர் நிறைந்து வழிந்தது.
மனதிலிருந்த அத்தனை கர்வமும், கசடுகளும் கரைந்து போய் விட்டிருந்தது.
மாதையனின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொள்ள முயல, சங்கோஜத்துடன் நகர்ந்தார்.
மகன்களையும், மருமகள்களையும் ஏறிட்ட அம்மாவின் விழி வீச்சில், ஏளனமும், அந்நியமும் தெரிந்தது. அவர்கள் தலை தானாகவே தாழ்ந்தது.
இது, ஒரு அழகான சாயங்கால உதயம்!
ஜே. செல்லம் ஜெரினா
