PUBLISHED ON : ஏப் 25, 2021

முன்கதை சுருக்கம்: கேபிள் 'டிவி' பிசினஸ் நடத்தி வரும், மைத்துனரின் மகன் சுகுமாரை, தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அப்பா கூற, மறுப்பு தெரிவிக்கிறாள். அச்சமயம், ரிஷி போன் செய்து, எம்.டி.,க்கு, 'மெயில்' அனுப்பிய விபரத்தை கூறி கொண்டிருக்கையில், நடிகர் சுஜித்குமாரிடமிருந்து தமிழ்ச்செல்விக்கு அழைப்பு வந்தது-
சுஜீத்குமார் என்ற எழுத்துகள், 'மிஸ்டு காலில்' வந்து மறையவும், கிள்ளப்பட்ட மாதிரி ஆனாள், தமிழ்.
''ரிஷி... ஒரு அழைப்பு வருது, சார் தான் வர்றார். 'கட்' பண்ணு, பேசிட்டு, நானே கூப்பிடறேன்,'' என்றவள், சில நொடிகளில், சுஜீத்தை பிடித்தாள்.
''வணக்கம் சார்.''
''வணக்கம்... உங்க அம்மாவுக்கு, 'சீரியஸ்'ன்னு, மதுரைக்கு போயிட்டதா கேள்விப்பட்டேன். இப்ப எப்படிம்மா இருக்கு?''
''பரவால்ல சார், உயிருக்கு ஆபத்து இல்லை... ஆனாலும், ஐ.சி.யு.,வில் தான் இருக்காங்க.''
''நானும் பிரார்த்தனை பண்ணிக்கறேன்; நிதானமா, இருந்து கவனிச்சுட்டு வாங்க. என்னோட, 'அசைன்மென்ட்'டுக்காக அவசரப்பட வேண்டாம். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.''
''உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. உங்க விசாரிப்புக்கும் ரொம்ப நன்றி சார். மற்றபடி, வர்ற தமிழ் வருஷப்பிறப்பு அன்னிக்கு, உங்க, சிறப்பு நிகழ்ச்சி வரணும்ங்கிறது தான், என் எண்ணம். அன்னிக்கு விடுமுறை. 'டிவி' நிகழ்ச்சிகளை பார்க்கும் ரசிகர்களும் அதிகமிருப்பர். இது ஒரு கிடைக்காத வாய்ப்பு. இதை பயன்படுத்திக்கிறதுல தான் சார், ஒரு, 'டிவி'யோட சாதுர்யமே இருக்கு.''
''அப்படின்னா, நீங்க சீக்கிரமே கிளம்பி சென்னை வந்துடுவீங்களா?''
''ஒருவேளை, என்னால வர முடியாம போகலாம். அதனால, என்ன சார்... ரிஷி, உங்களை பிரமாதமா, 'ஹேண்டில்' பண்ணுவான்.''
''அந்த, 'ஜென்டில் மேன்' நிச்சயம் நல்லா பண்ணவார். ஆனா, நீங்களும் இருக்கணும்; உங்க தோழி, அதாவது, அந்த, 'பிசியோதெரபிஸ்ட்' உங்கள பத்தி சொன்ன விஷயங்கள், என் மனைவியை ரொம்பவே, 'டச்' பண்ணிடுச்சு. 'அந்த பொண்ணுக்கு, நீங்க கட்டாயம் உதவி பண்ணணுங்க'ன்னு ரொம்ப அழுத்தமா சொல்லிட்டா, என் மனைவி. அதனால, நீங்க இல்லேன்னா, நானும் இல்ல... 'யு மஸ்ட்' தமிழ்ச்செல்வி.''
சுஜீத்தின் அந்த விளக்கம், தமிழை நெகிழ்த்தியது.
''இங்க, அம்மாவோட உடல்நிலை மட்டுமில்ல... என் கல்யாண ஏற்பாடு, அது இதுன்னு ரொம்பவே சிக்கல்கள் சார்... இதுல இருந்து நான் ரொம்ப சாதுர்யமா வெளிவரணும்; வந்துருவேன்.
''ஒருவேளை, வரமுடியலைன்னா, நீங்க அதை பெருசா எடுத்துக்கக் கூடாது. ரிஷிக்கும் ஒரு எதிர்காலம் தேவை. அது, உங்களால அமைஞ்சா, அதைவிட சந்தோஷம் எனக்கு வேற இல்லை சார்.''
''எப்பவும் அவரை விட்டுக் கொடுக்காம பேசறீங்க. தன்னையே நினைக்கிறவங்களுக்கு நடுவுல, நீங்க ரொம்ப வேறுபடறீங்க. இது ஒரு நல்ல, 'குவாலிடி!' நான் எப்பவும், 'வேல்யூசை' ரொம்ப மதிக்கிறவன். போகட்டும்... உங்களை ஒண்ணு கேட்கலாமா?''
''என்ன சார்... தாராளமா கேளுங்க.''
''ஏதோ கல்யாண ஏற்பாடுன்னு சொன்னீங்களே... அது, நீங்க விரும்பற ரிஷி கூட தானே?''
இப்படி ஒரு கேள்வி, சுஜீத்திடமிருந்து வரும் என்று, தமிழ்ச்செல்வி எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வினாடி பேச்சே வரவில்லை.
''என்ன தமிழ்... நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?''
''அ... ஆமாம் சார்.''
''அப்படின்னா?''
''ரிஷி, என் நண்பன்... எங்களுக்குள்ள அந்த மாதிரி ஒரு எண்ணம் சுத்தமா இல்லை சார்.''
''ஐ ஆம் சாரி... ரிஷி மேல உங்களுக்கு இருக்கிற அக்கறையை பார்த்து, நான் தப்பா நினைச்சுட்டேன். ஐ ஆம் வெரி சாரி.''
''நட்புல கூட ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கிறதும், அக்கறை காட்டறதும் உண்டே சார்.''
''யெஸ்... நான் மறுக்கல. ஆனா, ஆண் - பெண் நட்பை பெருசா நான் பார்க்காததால, உங்க விஷயத்துல ஏமாந்துட்டேன். இட்ஸ் ஓ.கே., ஐ ஆம் சாரி.''
''சாரியெல்லாம் எதுக்கு சார்... நினைக்கிறதை ஒளிக்காம பேசிடறது, ரொம்ப நல்லது சார். நீங்க, வெளிப்படையா பேசிடறீங்க. எனக்கு, அது ரொம்ப பிடிச்சிருக்கு.''
''சந்தோஷம்... திரும்பவும் சொல்றேன். என் நிகழ்ச்சிக்காக, உங்க அம்மா விஷயத்துல சமரசம் வேண்டாம். முடிந்தளவு முயற்சி பண்ணுங்க... இல்லைன்னா பரவாயில்ல, ரிஷியே பார்த்துக்கட்டும். 'இன்பாக்ட்' உங்களுக்கு, நான், ஓ.கே., பண்ணினது, எப்படி மத்த சேனலுக்கு தெரிஞ்சதுன்னு தெரியல.
''அவங்க சார்பா நிறைய அழைப்புகள் வருது. ஒரு சேனல், '50 லட்சத்தை இன்னிக்கு தர்றோம்... எங்களுக்கு, ஓ.கே., பண்ணுங்க'ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. நான் பிடி கொடுக்கல... ரிஷிகிட்டயும் இதை சொல்லியிருக்கேன். அதனால, பார்த்து பக்காவா, 'பிளான்' பண்ணுங்க. வெச்சிடறேன். பை.''
சுஜீத் பேசி முடித்ததும், தமிழ்ச்செல்வி முகத்தில் ஒரு இனம் தெரியாத உணர்வலை. காத்திருந்த மாதிரி, வந்து எதிரில் நின்றார், அப்பா சந்தானம்.
''யாரும்மா போன்ல... என்னம்மா, ஏதாவது பிரச்னையா?''
''சேச்சே... அதெல்லாம் எதுவுமில்லப்பா,'' என்று சமாளித்தாள், தமிழ்.
''உன்னை பார்க்க பார்க்க, எனக்கு வயிறு எரியுது. எப்படி இருப்பே நீ... இந்த ஆறு மாசத்துல, சீக்கு கோழி மாதிரி சொணங்கி போயிட்டியே... புறப்படும்மா, வீட்டுக்கு போய் குளிச்சு, நல்லா சாப்பிட்டு, துாங்கு.
''நாளைக்கு, கந்தசாமியும், மாப்ள சுகுமாரும் வர்றாங்க. இப்படி உன்னை, மாப்ள பார்த்தா, 'ஐயோ, இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்'ன்னு சொன்னாலும் சொல்லிடுவாரு. அப்படி இருக்கே நீ.''
அப்பாவின் அக்கறை பேச்சில், சுகுமார் பிடிக்காது என்று சொல்லி விடுவான் என்பது தான், அவளுக்கு பிடித்திருந்தது.
ஒருமாதிரி பார்த்தவள், ''ப்ளீஸ்ப்பா... இப்ப, கல்யாணப் பேச்செல்லாம் வேண்டாம்... என்னை கட்டாயப்படுத்தாதீங்கப்பா,'' என்றாள்.
''நான் எங்கம்மா கட்டாயப்படுத்தறேன்... உங்க அம்மா உடல்நிலையை பார்த்தேல்ல?''
''அப்ப, அவங்கள குணப்படுத்தி, பலப்படுத்தறத விட்டுட்டு, எதுக்குப்பா கல்யாணப் பேச்செடுக்கறீங்க?''
''உனக்கு, கல்யாணம் முடிவு செய்தா தான், உங்கம்மா நல்லபடி பொழச்சு வீடு வருவா. நீ முரண்டு பிடிக்கிறது தெரிஞ்சா, அவ்வளவு தான்.''
''அம்மாகிட்ட நான் பேசிக்கறேம்ப்பா... தயவுசெய்து, கல்யாண பேச்சை எடுக்காதீங்க.''
''என்னம்மா, கீறல் விழுந்த, 'ரெக்கார்டு' மாதிரி அதையே சொல்லிகிட்டிருக்கே... சென்னைக்கு போன இடத்துல எவன்கிட்டயாவது மாட்டிகிட்டியா?''
இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று, கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை, தமிழ்.
''அப்பாாா...''
''என்ன அப்பா... இப்பல்லாம் நீங்க எடுக்கறது தானே முடிவு. எந்த வீட்ல பெரியவங்க பார்த்து கல்யாணம் நடக்குது. நடக்கற கல்யாணங்கள எல்லாம், நான் பார்த்துகிட்டு தானே இருக்கேன்?''
''அப்பா, இப்படியெல்லாம் பேசாதீங்க... அப்படியெல்லாம் நான் யாரையும் காதலிக்கல; காதலிக்கவும் மாட்டேன். எனக்கு, என், 'கேரியர்' தான்பா பெரிசு.''
''என்ன பெரிய, 'கேரியர்!' உங்கம்மா இப்படி பேசியிருந்தா, நீ பொறந்திருப்பியான்னே தெரியாது. எல்லாம் என் தப்பு... நீ, கணக்கு, விஞ்ஞானம்ன்னு படிக்காம, 'விஷுவல்' படிக்கறேன்னு சொன்னப்பவே, நான் சுதாரிச்சுருக்கணும்.
''அப்புறம், அதுக்கான வேலைக்கு சென்னைக்கு போயாகணும்ன்னு சொன்னப்பவும், நான் சுதாரிக்கல... இப்ப அதெல்லாம் தான், என் முன்னால வந்து நிக்குது.''
சந்தானத்தின் முகத்தில், கோபத்தின் சிவப்பு நன்கு தெரியத் துவங்கியது.
''என்னப்பா... படிக்க வெச்சதே தப்புங்கிற மாதிரில்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க... இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா.''
''அப்ப, சொல்றத கேள்... எங்களுக்கு தெரியாது, எது நல்லது, எது கெட்டதுன்னு?''
''அப்பா.''
''பேசாம கிளம்பும்மா.''
அவளது, 'லக்கேஜை' எடுத்து, வேகமாய் நடக்கத் துவங்கினார். அப்போதைக்கு பின் தொடர்வதை தவிர, அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
''ஜனா சார் கூப்பிடறார்,'' என்ற அழைப்பை தொடர்ந்து, அறை கதவை திறந்து, அவர் முன் போய் நின்றான், ரிஷி.
அவன் நிழல், டேபிள் மேல் விழுந்தது. அதை பார்த்தபடியே பேசத் துவங்கினார், ஜனா.
''என்ன சார்... சுஜீத் புரோகிராமை, 'டிசைன்' பண்ணிட்டீங்களா... எப்ப, அவர் நம்ப ஸ்டுடியோவுக்கு வரப்போறார்... நாங்கள்லாம் அதுக்காக உங்களுக்கு என்ன செய்யணும்?'' மூன்றாம் மனிதனிடம் பேசுவது போல பேசினார்.
ரிஷிக்கும் புரிந்தது. பதிலுக்கு மசிந்து கொடுக்காமல், ''அல்டிமேட் கிங் சுஜீத்... இதான் சார் தலைப்பு. இன்னும் சிறப்பா இருக்கலாம்ன்னா, 'நான் நாம் சுஜீத்'ன்னு வைக்கலாம். பொதுவா இந்த மாதிரி பேட்டியில, நாம தான் கேள்வி கேட்போம்.
''ஆனா, இது அப்படி இல்ல சார்... சுஜீத் சாரை, 25 பேர், 25 கேள்வி கேட்கப் போறாங்க... அவங்க, யாரோ இல்ல... சுஜீத்தோட ஸ்கூல் மேட், ஸ்கூல் டீச்சர், எதிர் வீட்டுக்காரர், அவர் தெருவில் உள்ள சலவைகாரர்...
''அவரை முதல் முதலா இயக்கியவர், அவரோட மாமனார் இப்படின்னு, 25 கேரக்டர்களை சந்திச்சு, அவங்கள கேள்வி கேட்கச் சொல்லி, 'வீடியோ'வா எடுத்து, அதை பேட்டி சமயத்துல காட்டி, பதிலை வாங்கறோம்,'' ரிஷி சொல்லி முடிக்கவும், வேறு வழியின்றி, நிமிர்ந்து, அவனை பார்த்தார், ஜனா.
அவனும் அசராமல் பார்த்தான்.
''ஆமா... தமிழ் தான் பேட்டி எடுக்கணும்ன்னு சொன்னதா சொன்னீங்களே... இதுல, அந்த நான், நீங்களா, இல்லை தமிழ்ச்செல்வியா?''
''சந்தேகமே இல்லாம தமிழ் தான் சார். அவங்க அம்மா உடம்புக்கு இப்ப ஆபத்து இல்ல. ரெண்டு, மூணு நாள்ல, 'டிஸ்சார்ஜ்' ஆகி வீட்டுக்கு போயிடுவாங்க. அதனால, நிச்சயமா, தமிழ் வந்து பேட்டி எடுப்பா.''
''இவங்கல்லாம், வித்தியாசமா கேள்வி கேட்பாங்களா?''
''அதை நான் பார்த்துக்கறேன் சார். ஒண்ணு மட்டும் நிச்சயம். கேள்விகள் நிச்சயம் கனமானதா, சிந்திக்க துாண்டற மாதிரி இருக்கும்.''
''எக்ஸாம்பிள்?''
''சாரி சார்... அது, 'சஸ்பென்ஸ்' ஆகவே இருக்கட்டும்.''
இந்த பதில், அவர் கன்னத்தில் செல்லமாய், அவன் அறைந்தது போலவே உணர்ந்தார், ஜனா.
மெல்லிய கோபத்துடன், ''இது ஒண்ணும் யாருக்கும் தோணாத ஐடியாவாவே, புதுசாவோ இல்லையே... வழக்கமான பேட்டி தானே... கேள்விகளை மட்டும் அவரை சார்ந்தவங்க கேட்க போறாங்க... அவங்கள விட சிறந்ததா நாமளே கேட்கலாமே?''
''நீங்க ஏற்பாடு செய்யும்போது அதை செய்துக்குங்க சார்... பேட்டி சமயத்துல, தமிழகத்துல இருக்கற, 100 நுாலகத்திற்கும், தலா, 100 'டாபிக்'ல, 100 புத்தகம்ன்னு, மொத்தம், 10 ஆயிரம் புத்தகங்களை, சுஜீத் சார் தரப்போறார்.
''இதை, 'ஸ்க்ரோலிங்'கா இப்பவே அறிவிக்கலாம். நம் சேனல் சார்பா, நாம, 'கிரியேட்' பண்ணப்போற, 'மெயில்' ஐ.டி.,க்கு, நுாலகம் நடத்தறவங்க விண்ணப்பிச்சா போதும்,'' நிஜமாலுமே சற்று இன்ப அதிர்ச்சியளித்தான், ரிஷி.
ஜனாவால் அதற்கு மேல் அவனிடம் பேசத் தோன்றவில்லை. இருந்தும், ''விட்டா, அவரை அரசியலுக்கு இழுத்து, அடுத்த, சி.எம்.,ன்னு கூட சொல்லிடுவீங்க போலிருக்கே?'' என்று, கேட்டார்.
''இந்த கேள்விக்கு, சுஜீத் சாரே பதில் சொல்வார் சார்,'' என்று, அதற்கும் ஒரு பதிலை, ரிஷி சொல்லவும், விஷயம் நிச்சயம் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என்று தோன்றியது, ஜனாவுக்கு.
— தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்
