PUBLISHED ON : பிப் 13, 2022

அம்மைவைக் கண்டதும், பூரணிக்கு நெகிழ்வு. கண்மாய் உடைப்பெடுத்த மாதிரி அவள் கண்களில் சீறி வந்தது, கண்ணீர்.
''இப்பத்தான் நா இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சதாம்மா?'' ஓடிச்சென்று அம்மாவை கட்டிக் கொண்டாள்.
மகளை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள்.
அந்த சில நிமிடங்கள் நிசப்தம். சிறிது நேரத்தில் இருவரும் விம்மும் சத்தம், அந்த நிசப்தத்தைக் குலைத்தது.
''ஸாரிம்மா... நா தப்பு பண்ணிட்டேன். நா காதலிச்சது தப்பு; ரகுவ கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு; இந்த வீட்ல வந்து வாழ நேர்ந்தது தப்புலயும் தப்பு.''
மகளை பிடியிலிருந்து விலக்கி, ''பைத்தியம். இதைத்தான் நானும், உங்க அப்பாவும் ஆரம்பத்துல சொன்னோம். நீ கேக்கலே, அப்போ புரட்சி பேசினே. இப்போ கெடந்து அனுபவிக்கறே.''
''எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்ங்கற அளவுக்கு வெறுப்பா இருக்கும்மா. உன் கூட வந்துடறேன். நம் வீட்டுக்குப் போயிடலாம்,'' அழுகையினுாடே ஆத்திரமும் பீறிட்டது, பூரணிக்கு.
''உஹூம் இது தீர்வு இல்ல. நீ எந்தவிதத்துல- யாரால பாதிக்கப்படறே... மொதல்லே அதைச்சொல்லு. உன் புருஷன் உன்னை இம்சிக்கிறானா?''
- ''இல்லம்மா... அவரால எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா, இந்த வீடு நரகம்மா. ஒரு மாமியார், மூணு ஓரகத்திகள், ஒரு நாத்தி, அய்யய்யோ... வதையறேன்மா.''
அந்த நேரம், ஹாலில் இருந்து மாமியாரின் குரல், ''பூரணி, ரூமுக்குள்ள புகுந்து என்ன பண்ணிகிட்டிருக்கே... காலைல வந்த உன் அம்மா, மதியம் கூட சரியா சாப்பிடல. டிபன் பண்ணிக்குடு. வராத மகராசி வந்திருக்கா.''
''பார்த்தியாம்மா, மாமியார் எப்படி அதிகாரம் பண்றாங்கன்னு. இந்த வீட்டு கிச்சன்ல, 90 சதவீத வேலைகள நான் தான் பண்ணணும். மொத்த பேர்களோட துணிகள துவைச்சு இஸ்திரி பண்ணணும், பெருக்கணும்,- துடைக்கணும், கழுவணும்,- மெழுகணும். இப்படி எல்லா வேலைகளும் என் தலைல தான் விழும். இது தவிர, ஆபீசுக்கு ஓடணும். அங்கே ஒரு சிடுமூஞ்சி
எம்.டி.,யை சமாளிக்கணும். ஒரு வழியா அக்கடான்னு வீட்டுக்கு வந்தா இங்கே இவங்களால் தொல்லை. நா மனுஷியா, மிஷினா... நீயே சொல்லும்மா.''
மனதில் இருந்ததையெல்லாம் கொட்டினாள், பூரணி.
''அவசரப்படாதே, ஒரு தடவை அவசரப்பட்டு விபரீத முடிவு எடுத்ததுனால இப்படி கிடந்து தவிக்கிறே. மறுபடியும் அவசர முடிவு வேணாம். ரெண்டு நாள் பொறுமையா இரு. நான் உன்கூட தங்கணும்ன்னு வந்திருக்கேன். இவங்கள கண்காணிக்கறேன். பூரணிக்கு சப்போர்ட் இருக்குங்கறதை அவங்களுக்கு புரிய வைக்கிறேன்.''
அம்மா சொல்லை ஏற்றாள், பூரணி.
மகள் சொன்னது உண்மை என்று பட்டது அவளுக்கு. ஒரு பக்கம் மாமியார், மறு பக்கம் ஓரகத்திகள், இன்னொரு பக்கம் நாத்தி.
சதா அமளி துமளியில் தான் இருக்கிறது, வீடு. பொழுது விடியும்போதே வேலைகள் பூரணியை துரத்துகின்றன.
காலையில் பாத்திரம் அலம்புதல். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் காபி தயாரித்து வினியோகித்தல். அதற்கடுத்து டிபன் செய்தல்,- பங்கிடுதல். மறுபடி பாத்திர பண்டம் அலம்புதல். அடுத்த நிமிடமே ஒரகத்திகளின் குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட எத்தனித்தல்.
சிலருக்கு தலைவாரி விட, சிலருக்கு யூனிபார்ம் மாட்டி விட, இரண்டு பொடிசுகளுக்கு, கால் கழுவி விடணும். இந்த லட்சணத்தில் குழந்தைப் பட்டாளம் எதற்கெடுத்தாலும், சித்தி தான் எனக்கு இதைச் செய்யணும், சித்தி தான் எனக்கு அதைச் செய்யணும் என்கிற மாதிரி அழிச்சாட்டியம்.
முகம் சுளிக்காமல் அத்தனை பணிகளையும் செய்தாள், பூரணி.
'பார்த்தியாம்மா என் நெலைமைய...' தாயை பார்த்தாள்.
மறு பார்வையில், 'ம். பொறுத்துக்கோ...' என்றாள்.
பெரும்பாலும் அந்த வீட்டு ஆண்கள் கூட எதற்கெடுத்தாலும் பூரணியையே எதிர் பார்க்கின்றனர்.
பூரணியின், 'பர்பாமென்ஸ்' நன்றாக இருக்கிறது என்பது அவர்கள் அபிப்ராயம்.
சமைப்பதில் ஓரளவு நளபாகம் வரும். அதே தரத்தோடு பரிமாறவும் செய்வாள், பூரணி.
மாமியாருக்கும் இவள்தான் இளக்காரம்.
''நீதான், 10:00 மணிக்கெல்லாம் ஆபீசுக்கு போயிடறியே... வீட்ல இருக்கற நேரம் இதையெல்லாம் செய்யேன்,'' என்று சொல்லி வைத்திருக்கிறாள்.
அலுவலகத்தில் சிக்கி தவிப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. அந்தக் கொடுமைகளை விளக்க முடியாமல் தவித்தாள், பூரணி.
இரவு, 11:00 மணியாகும் படுக்கைக்குச் செல்ல. அப்போது தான் கணவனோடு கொஞ்சம் பேச முடியும்.
'தனிக்குடித்தனம் போயிடலாம்க...' என சொல்லி அழுவாள்.
'நீ ஒண்ணு... மூணு அண்ணனுங்களும் வாய் பேசாம கெடக்கறாங்க. நான் எப்படி கேக்கறதாம்... என்னால முடியாது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... ப்ளீஸ்...' என்பான் கணவன்.
அவன் குரல் கெஞ்சுகிற மாதிரி இருக்கும். கடுப்பாக இருந்தாலும் அந்த நேரம் வெளிப்படுத்தத் தோன்றாது. கரைந்து போவாள், பூரணி.
மூன்று நாட்களுக்கு பின், ''பூரணி... நான் வர்றேன்,'' கிளம்பினாள், அம்மா.
''அம்மா, என்னை இந்த சிறையிலேயே விட்டுட்டா?'' மறுபடியும் வெடிக்க முனைந்தாள், பூரணி.
''ஆமாடீ. உன்னை இந்தச் சிறையிலேயே தான் விட்டுட்டு போகப் போறேன். நீ பொறுத்துக்கத்தான் வேணும். இது, அன்புச் சிறை; பாசச்சிறை; பண்புச்சிறை; ஆனந்தச் சிறை. கொடுத்து வெச்சவடீ நீ!''
''அம்மா...'' அலறினாள், பூரணி.
''கேட்டுக்கோடி, நானும் உன் வயசுல, 'லவ்' பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். ரெண்டு வீட்லயும் எதிர்ப்பு நிலை. 'ரிஜிஸ்டர் மேரேஜ்' பண்ணிகிட்டு, நீ விரும்பற மாதிரியான தனிக்குடித்தனம் போனவடி. சொகமா ராஜா - ராணியா வாழ முடியல. கொஞ்ச நாள் தான் சொகமா வாழ்ந்தேன். அப்புறம் பெரிய அவஸ்தை. உதவிக்கு -சப்போர்ட்டுக்கு ஒரு துணையும் இல்லே. தனியே கிடந்து தான் எதையும் சமாளிக்கணும்.
''நீ பொறந்த, நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறோங்கிறதாலே உன்னை, 'கிரீச்'ல அடைச்சோம். பெத்த பொண்ணு யாரோட அரவணைப்பிலயோ... எத்தனை மன வலி பட்டிருப்பேன்... கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு.
''அன்பா, ஆதரவா, மனச வருடற மாதிரி ஒரு சொந்தம் இல்லே, துணை இல்லே. தவிச்சு, நொந்து போய் பழசையெல்லாம் நெனைக்கவே பயமா இருக்கு.
''உனக்கு எல்லா குடுப்பினையும் இருக்கு. அனுபவி. மனச மாத்து. சொந்தங்களை சுகம்ன்னு நெனை, சோதனைன்னு நெனைக்காதே. இப்ப உனக்கு கெடைச்ச வாழ்க்கை சொர்க்கம். நான் வர்றேன்,'' என சொல்லி வேகமாக வெளியேறினாள், பூரணியின் அம்மா.
பூரணி சிந்திக்க ஆரம்பித்தாள். இனி, தெளிவு வராமல் போகுமா என்ன!
எம். கே. சுப்ரமணியன்
