தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கண்மணியே, காதலென்பது...

கண்மணியே, காதலென்பது...

கண்மணியே, காதலென்பது...


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்., 14 -

''காதலர் தின வாழ்த்துக்கள், பாரதி...'' கையிலிருந்த சிவப்பு ரோஜா பூங்கொத்தோடு அவள் முன்னே நின்றான், ரிஷி.

எரிச்சல், சந்தேகம், கோபமென்று பல கலவைகளோடு ஏறிட்டாள். கை, தானாகவே இடது பக்க முகத்தை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டது.

'கொழுப்புடா உனக்கு...' என்ற பாவம், அவள் பார்வையில்.

அவனோ,''பாரதி... உன்னோடு கொஞ்சம் பேசணும்,'' என்றவன் அங்கே, ஹாலில் சூழ்ந்து நின்ற குடும்பத்தினரிடம், விழிகளால் அனுமதி வேண்டினான். இந்த வழக்கு காரணமாக, பாரதியின் குடும்பத்தாரோடு நன்கு பழகியிருந்தான், ரிஷி.

அவளின் தமையனோ,''மாடிக்கு போங்க,'' என்றதும், எரிப்பது போல் பார்த்தாள், பாரதி.

அவரவர் கிச்சனுக்கும், அறைக்குள்ளும், வாசலுக்கும் போய்விட, படியேறினான்.

பாரதியும் தொடர்ந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம்.

அறைக்குள் நுழைந்ததுமே, எரிச்சலோடு பார்த்தாள்.

''பாரதி... வில் யூ மேரி மீ?'' என்று, காலொன்றை மடித்து, முழங்காலிட்ட பாவனையோடு பூங்கொத்தை நீட்டினான்.

'கிறுக்கனா இவன்?' என எண்ணியபடி, ''என்ன அனுதாப காதலா?'' என்றாள்.

''இல்லை, ஒன்பதாண்டுக்கும் மேலான காதல்.''

''என்ன உளறல்?''

''உளறலில்லை நிஜம். நீ, முதல் ஆண்டு கல்லுாரியில் சேர்ந்தப்போ, நான் மூன்றாம் ஆண்டு. முதன்முதலாய் உன்னைப் பார்த்தபோதே, உன்னிடம் மனசு விழுந்து விட்டது. அப்புறம், பி.எல்., முடித்து, வெளிநாடு போயிட்டேன். அப்போதும், நீ மட்டுமேதானிருந்தாய் மனம் நிறைய.

''இந்தியா வந்ததும், இங்கே, 'பிராக்டீஸ்' துவங்கும்போது உன்னைத்தேட அவசியமேயின்றி, காக்கிச் சட்டை கிளியாக என் கண்ணெதிரே கோர்ட்டு வளாகத்தில் சிறகடித்தாய். உன்னிடம் காதலை சொல்ல நினைச்சப்போதான், என் கண் முன் அந்த விபத்து நடந்தது.''

திகைத்தாள், பாரதி.

ஆனாலும், மீண்டும் மூர்க்கமே எழுந்தது.

''இருக்கலாம் ரிஷி... இப்போ நான் சரிப்பட மாட்டேன்.''

''ஏன்... இப்போ என்னாச்சு?''

''இந்த மூஞ்சிக்கு காதல் ஒரு கேடா... என்னால வெளியுலகத்தையே பார்க்க முடியலை... நீங்களும், நானும் ஒன்னா போனா, உங்களையும் பரிதாபமா பார்ப்பாங்க. நாளடைவில் உங்களுக்கே தப்புப் பண்ணிட்டோமோன்னு தோணும். தேவையா... கிளம்புங்க.''

''பேசிட்டியா... உன் முக அழகுக்காக மட்டுமே காதலிச்சேன்னா, அது காதல்ல சேர்த்தியில்ல; அதுக்கு பேரு வேற. என் நேசத்துக்கு உரியவளை அப்படியே நிறைகுறையோட ஏத்துகிட்டு அன்பு வைச்சு வாழறதுதான் காதல்ன்னு நான் நினைக்கிறேன். யாரோ நாலுபேர் பேசுற வார்த்தை எனக்குத் தேவையில்லாதது. எனக்கு தேவை உன் சம்மதம். வேணும்னா கல்யாணம் பண்ணிய பிறகு என்னை மட்டும் காதலியேன்.''

''எனக்கு வேண்டாம்.''

''அப்போ, இதே மாதிரி முக்காடு போட்டுக்கிட்டு மூலையிலேதானிருப்பே... வெளியே வரமாட்டே.''

''உங்களுக்குத் தெரியுமா, என் வேதனை. என்னைப் பார்த்தாலே முகஞ்சுளிக்கிறாங்க. என் ரணத்தை உங்களால் உணர முடியுமா சொல்லுங்க, ரிஷி. எனக்கே என்னைப் பார்க்க அசிங்கமாயிருக்கு. பார்க்கிறவங்க அருவருப்பா ஒதுங்கிப் போறாங்க. இல்லேன்னா, பரிதாபமாப் பார்க்கிறாங்க. எனக்கு எதுவுமே வேண்டாம். நான் வெளியே வந்து ஆகப்போறது என்ன?''

''சபாஷ் பாரதி... உன்கிட்டே இதை நான் எதிர்பார்க்கலை. உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே நியாயத்துக்காக போராடுகிற உன் குணம். கூடவே ஒரு ஆண்டு மட்டுமே உன்னோடு காலேஜில் பயணிச்சாலும், பி.எல்., படிப்பின்போது உன்னை நான் துார நின்று கவனிச்சிருக்கேன். நியாயத்துக்காக உயரும் உன் குரல், எனக்குப் பிடிக்கும். நீயும் சட்டம் படிக்கக் கூடாதான்னு ஏங்கியிருக்கேன்.

''வெளிநாட்டுல படிப்பை முடிச்சுட்டு வந்தபோது, நீ காவல்துறை அதிகாரியா எதிரே வந்து நின்னே. என் முதல் வழக்கே உன்னோடு தான். அந்த பாவப்பட்ட சிறுமி வழக்கு.

''ஞாபகமிருக்கா, மூளை வளர்ச்சியில்லாத சிறுமியை, அந்த கட்டடத்து ஊழியர்களே சீரழித்தபோது, அதைக் கண்டுபிடிச்சு, நீதிக்காக போராடினது, நீதானே... அவளின் பெற்றோருக்கும் உத்வேகம் தந்து, அவளுக்கு நியாயம் கிடைக்க போராடின. இப்போ அது எங்கே போச்சு?

''பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து மடிய பிறந்தவளில்லை.

யோசிச்சு பார், இந்த மாதிரி அநியாயம் உன் ஒருத்திக்கு மட்டுமே நடக்கலை. நடந்து முடிகிற அதர்மத்தின் சிறு துளி நீ. உன் சர்வீசின் போது நீயே காப்பாற்றிய குழந்தைகளை நினைச்சுப்பாரு...

பெண்களை யோசிச்சுப்பாரு... சுயநலமாய் உன் வலியே பெரிசுன்னு நினைச்சு நீயே ஒடுங்கிப் போயிட்டா எப்படி...

''காக்கி யூனிபார்மை காதலிச்சு உடுத்திக்கிட்டு, அதற்கான மரியாதையை கொடுத்தவள் நீ. அதுக்காக உன் வலியை, உணர்வை கொச்சைப்படுத்துறேன்னு நினைச்சுடாதே... புரியுது எனக்கு, கண்ணெதிரே அந்த வலியை பார்த்து துடிச்சவன் நான். இதோ இந்தக் கையிலேதான் உன்னை தாங்கினேன். என் கையிலே கொஞ்சமாய் பட்ட அந்த அமிலத்துளிகளின் எரிச்சலே எனக்கு தாங்க முடியாமலிருந்ததுன்னா...''

அவன் விழிகளின் ஓரம் லேசாய் கண்ணீர் கசிந்தது. பின்னந்தலையை கோதிக் கொண்டான்.

அன்றைக்கு...

சிக்னலுக்காக காத்திருந்த நேரம். இவனும் நண்பனும் பைக்கில் காத்திருக்க... அடுத்து, ஸ்கூட்டியில் பாரதி. யாரோ அருகில் வந்து அவளிடம் ஏதோ கேட்க, அவள் இயல்பாய் தன் தலைக்கவசம் கழற்றிய நொடி, அவளின் அலறல்தான் கேட்டது. எவனோ ஒருவன் வாகனங்களுக்கிடையே புகுந்து ஓடி மறைவதும், இவள் புழுப்போல துடிப்பதும், சிக்னல் விழுந்த களேபரத்தில் ஒரே கந்தர்வகோளம்.

அதன்பின்...

யார் எவர் என்று விசாரணை முடுக்கி விடப்பட, முனைந்து நின்றான், ரிஷி.

காதலை மறுத்ததன் காரணமாய் அவளுடன் பணிபுரியும் சக அதிகாரியே இந்த கொடுமையை செய்தது கண்டு, மாதர் அமைப்புகள் பொங்கியெழ, அவனுக்கு ஆயுள் தண்டனை தந்தது, நீதித்துறை.

இன்னும் மனம் ஆறாமல் ரிஷி, அந்த குற்றவாளி வெளியே வரவே முடியாதபடி அவனை ஆதியோடந்தமாக கிண்டி கிழங்கெடுத்ததில், இன்னும் சில வழக்குகள் போட்டு இரட்டை ஆயுள் தண்டனையாக நீண்டது. பிறகு தான், ரிஷியால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

வெட்கமோ தயக்கமோயின்றி லகுவாய் ஒத்துழைத்தாள்; சாட்சி சொன்னாள், பாரதி.

தண்டனை வாங்கிக் கொடுக்கும் வரை உத்வேகமாய் போராடியவள், அதன்பிறகு, தன்னை சிறை படுத்திக்கொண்டாள். டிபார்ட்மென்டும் அவள் நிலையை உத்தேசித்து, சலுகை தந்து, விடுப்பை நீட்டித்துத் தந்தது.

ப்பா... மனதால், உடலால், மற்றவர் வார்த்தைகளால், எத்தனை அவஸ்தை.

மடிந்து உட்கார்ந்து, முழங்காலில் முகம் புதைத்தாள், பாரதி. உடல் குலுங்கியது. அவனும் அவளருகே அமர்ந்து அவளின் முதுகை வருடித் தந்தான்; நெற்றிக் கேசத்தை ஒதுக்கி விட்டான்.

''ரதி கண்ணம்மா, இங்கே பாருடா... உன்னை ரொம்பவே பிடிக்கும்டா எனக்கு. என் உயிர்ப்பூவின் ஜீவ வாசம்டா நீ... இந்த பூமியிலே எல்லாருமே வாழ உரிமையிருக்கு. எந்த உருவமாயிருந்தாலும், நிறமாயிருந்தாலும், அங்கஹீனமாயிருந்தாலும் எல்லா நிறைகுறைகளோடும் வாழ்கிற உரிமையோடு சுதந்திரமிருக்குடா... தப்பு செஞ்ச நாதாரிகளே நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறபோது, தப்பே செய்யாத நீயேன் தலைகுனியணும், ஒதுங்கி மறையணும்?

''நீ தான் முன்னுதாரணமா நிக்கணும். உன்னை தாங்க, உன் குடும்பத்தோடு உன் கணவனாக நானும் நிற்கிறேன். யாருமேயில்லாத உதவிக்கு ஏங்குகிறவர்களை நினைச்சுப்பாரு. அவங்களுக்காக உன் குரல் உயர வேணாமா?

''நிமிர்ந்து பார் இந்த உலகத்தை.

மோசமான முன்னுதாரணமா ஆகிடாதே. அற்புதமான போராளியாய் நில்லுடா. சுயப்பச்சாதாபத்திலே தேங்கி நிற்காதே. எல்லாத்தையும் உதறு, நேர்கொண்ட பார்வையோடு சமுகத்தைப் பார்.

கூசாமல் பேசுகிற அந்த அற்பப் பதர்களின் வாயை திறக்க முடியாதபடி உன் செயல்திறத்தால், நிமிர்வால், கம்பீரத்தால் காட்டு. பாரதிங்கிற பெயருக்கேற்றார் போல பார்... அதிர சுற்றி வந்து, உன் கடமையை செய்மா.''

அழுகை தேம்பலாகி, மெது மெதுவே அடங்கியது.

லேசாய் தலை நிமிர்த்தாள். இடது பக்க கதுப்புகள் நிறம் கறுத்து உருமாறி முடிச்சு போல் ஆங்காங்கே ஜல்லி போட்ட சாலை போலிருக்க, ஒருபக்க மூக்கும், சப்பையாய் சிறு துளை போலிருக்க, இதழ்கள் லேசான கோணலாய் இருக்க, மனம் கனத்தது.

ரிஷியின் விரல்கள், மெதுவே அந்தக்கதுப்பில் ஊர்வலம் போக, பாரதிக்குள் சின்னதாய் சிலிர்ப்பு ஓடியது.

உச்சந்தலையில் தன்னிதழ்களைப் பதித்தான், ரிஷி. பாரதிக்குள்ளே ஒரு மின்னல் கிளை விட்டது.

வாழ்வின் பற்றுக்கோடாய் ஒருவன், அவளை மட்டுமே, அவளையுமே விரும்புகிறான்.

ஆண்டுக் கணக்கில் காதலித்து அதை இப்போது இந்தச் சூழலில் கால்களில் வைத்து, அவளின் நலம் நாடுகிறான்.

புற அழகை புறந்தள்ளி, மனதால் அவளை வரித்துக்கொள்ளத் தவிக்கிறான்.

அவளின் சம்மதம் வேண்டி நிற்கிறான்.

அந்த நிதர்சனம் புரிந்த கணம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிக் கூட்டம் சிறகடித்தது.

சிவப்பு ஏறி உடலே செங்கொழுந்தாய் கனன்றது.

பாரதியின் வெட்கம், ரிஷிக்கு கர்வம் தந்தது.

சட்டம், காவல்துறையை தன் கைகளால் கைது செய்து, கையணைவில் நிறுத்தி தனை மறந்து நின்றது.

வார்த்தைகள் விடைபெற்றுக்கொள்ள மவுனம் அழகான பூக்காடாய் அவர்களிருவரையும் மோனவெளியில் சூழ்ந்து நின்றது.

பாரதியின் கைகளில், சிவப்பு ரோஜா பூங்கொத்து சிரித்தது.

ஜே. செல்லம் ஜெரினா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us