
ரேஷன் கடையில், அன்றும் நிறையக் கூட்டம். வரிசையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார் முத்துராமன். வெயில் உக்கிரமாக இருந்தது. அவருக்கு வேர்த்துக் கொட்டியது. தலையில் உற்பத்தியான வியர்வை, உடம்பு வழியாக இறங்கி பாதத்தை நனைத்தது.
மூன்று தினங்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறார். கூட்டத்தை பார்த்து மிரண்டு, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விடுவார். இன்று, அப்படி போக முடியாது. கடைசி நாள், இன்று விட்டுவிட்டால் மாதம் திரும்பிவிடும். அதுவுமில்லாமல், இன்று, அரிசி பருப்பு வாங்கினால்தான், இரவு சாப்பாடு செய்ய முடியும். மீனாட்சி எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.
வரிசை, ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. நம் முறை எப்போது வரும் என்று, அவர் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆள், அவரையே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டம் எவ்வளவு நகர்ந்திருக்கிறது என்று பார்க்கிறார் போலிருக்கிறது என்று நினைத்தார் முத்துராமன். ஆனால், அந்த ஆள், அடுத்து செய்த காரியம், அங்கு இருந்த எல்லாரையும் திகைப்படையச் செய்தது; முத்துராமனையும் சேர்த்து. தன் இடத்திலிருந்து விலகி, தயக்கமுடன் அவரை வந்து பார்த்தவன், ''நீங்க... குறிஞ்சி முத்துராமன் தானே,'' என்று கேட்டான்.
குறிஞ்சி என்பது, முத்துராமன் ஒரு காலத்தில் நடத்தி வந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோர். அந்த நாளில், அந்த ஸ்டோர் மிக பிரசித்தம், பொருள் தரமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். வாடிக்கையாளர் அலை மோதுவர். 20 பேர் வேலை பார்த்தனர். பணம் புரண்டது. தாராளமாக சம்பளம் கொடுத்தார். தானும், வீடு, கார் என்று வசதியாக வாழ்ந்தார். இப்போது, ரேஷன் அரிசிக்கு கால்கடுக்க நிற்கும் நிலை வாய்த்திருக்கிறது. ஊரும் உறவுமே, அவரை மறந்துவிட்ட நிலையில், தன்னை அடையாளப் பெயரோடு கேட்கிற இந்த மனிதர் யாரோ... என்று ஆச்சரியமாகப் பார்த்து, ''ஆமாம். நான் குறிஞ்சி முத்துராமந்தான். நீங்க...'' என்று சொல்லும் போதே, அந்த ஆள் தடாலென்று அவர் கால்களில் விழுந்தான்.
''கடவுளே... உங்களை நான், இந்த நிலையிலா பார்க்கணும். நீங்க சீரும், சிறப்புமா இருப்பிங்கன்னுல்ல நினைச்சுகிட்டிருந்தேன். கடைசியில், இந்த பாவிக்கு ஏற்பட்ட கதியா உங்களுக்கும் ஏற்படணும்,'' என்று கதறினான்.
அங்கிருந்த ஒட்டு மொத்தப் பேரின் கவனமும், அவர்கள் பக்கம் திரும்ப, ''இந்தாப்பா... யார் நீ, எதுக்கு இப்படியெல்லாம் செய்ற, எழுந்திரு,'' என்று தோளைத்தொட்டு எழுப்பினார். கிட்டத்தில் பார்த்த போது தான், அது பாஸ்கர் என்று அறிந்து, முத்துராமனும் திகைத்தார். ''நீயா?''
சூடாக டீ போட்டு கணவருக்கும், அந்த பாஸ்கருக்கும் கொடுத்தாள் மீனாட்சி. ''எனக்கு எதுக்கு அம்மா உபசாரம். ஒரு துளி விஷத்தை கொடுங்கம்மா. செத்துப் போறேன்,'' என்று குலுங்கினான் அவன்.
''அழறத நிறுத்து, சின்ன புள்ள மாதிரி... கண்ணைத் துடை. நடந்தது நடந்து போச்சு. எல்லாம் விதின்னு மனச தேத்திகிட்டு, காலத்தை கடத்திகிட்டிருக்கோம். நீயாவது நல்லா இருப்பேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். நீயும் பையத் தூக்கிகிட்டு ரேஷன் கியூவுல நிக்கற.''
''நல்லதே செய்த உங்களுக்கே, இந்த நிலைன்னா... துரோகம் செய்த எனக்கு வராதா. என்னைக்கோ செத்திருப்பேன். பொண்டாட்டி புள்ளைங்கன்னு ஆயிருச்சு, அதோடு என்னைக்காவது, ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன். பாவமன்னிப்பு வாங்கிகிட்டுதான் உயிரை விடணும்ன்னு, ஒரு சங்கல்பம். அது இன்னைக்கு நிறைவேறியிருக்கு.''
''டீ ஆறப்போகுது.''
''மனசு ஆறலையேங்க,'' என்று பழைய நினைவில் ஆழ்ந்தவனாய், ''எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்த அனாதை நான். என்னையும், ஒரு மனுஷனா மதிச்சு கடையில சேர்த்துகிட்டிங்க, வியாபாரம் சொல்லிக் கொடுத்தீங்க; என் உழைப்பையும், நேர்மையும் பார்த்து, கடை சம்பந்தமான பொறுப்புகள் ஒவ்வொண்ணா ஒப்படைச்சிங்க, பேங்க்ல பணம் போடறதுலருந்து, ஆபீஸ் போய்ட்டு வர்றது, சரக்கு எடுக்கறது, சம்பளம் பட்டுவாடா செய்றதுன்னு, ஒவ்வொண்ணா கத்துக்கொடுத்து, ஒரு கட்டத்துல கடையையே என்கிட்ட ஒப்படைச்சி, கல்லாவுல உட்கார்த்தினிங்க. அப்ப என் மனசுல என்ன ஓடிச்சி தெரியுமா சார். எந்த பிறவியிலோ செய்த புண்ணியம் தான், உங்ககிட்ட கொண்டு சேர்த்திருக்கு. இதற்கு நன்றியாய், காலம் முழுக்க உங்களுக்கு உழைச்சு விசுவாசமாய் இருந்துட்டு போகணும்ன்னுதான் சார் மனசில வைராக்கியம். அப்படிதானே இருந்து வந்தேன்.''
தலையசைத்தார் முத்துராமன்.
''அப்பத்தானே... அந்த சைத்தான் வாழ்க்கையில குறுக்கிட்டான். நாளைக்கு சாகப் போறவன் மாதிரி, உடம்பை வச்சுகிட்டு உதவி கேட்டு வந்தான். எட்டனாவைக் கொடுத்து விரட்டியடிக்காம, சோத்துக்கும், துணிக்குமாக பணம் கொடுத்தது என் தப்பு. கெட்டியாய் பிடிச்சுகிட்டான். ஒரு வேலை போட்டுக் கொடுன்னு கெஞ்சினான். ஒரு நேரத்தில், நானும் அந்தக் கோலத்தில்தான் உங்கள் முன் நின்றேன். என்னை அரவணைச்சிங்க, அதை எண்ணிதான், அவன் கருநாகம்ன்னு தெரியாம இடம் கொடுத்தேன். நீங்ககூட யோசனை செய்திங்க. போதுமான ஆள் இருக்கே, பிறகு பார்க்கலாமேன்னு. நாந்தான் பலமா சிபாரி” செய்து சேர்த்தேன். அப்ப எனக்கு தெரியாது, அவன் என்னையும், என் மூலம் உங்களையும் கவிழ்க்கப் போறான்னு.
''ஆசையைத் தூண்டிவிட்டான். 'அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவ தட்டும். என்னதான், இங்க உழைத்தாலும், இதுல நீ முதலாளி மாதிரி தான் இருக்க முடியுமே தவிர, முதலாளி ஆக முடியாது. மேலும், இது நிரந்தரமில்லை. வியாபாரம் நல்லா போகிறவரை உன்னை உயர்த்தி வைப்பாங்க. கொஞ்சம் சுணங்கினாலும், உன்னை இறக்கி விட்டுட்டு முதலாளி கல்லாவுல உட்கார்ந்துடுவார். உன் மேல, அவர் காட்டுற அன்பும், பிரியமும் காரணத்தோட தான். நீ ஒரு நல்ல வேலைக்காரன். அவ்வளவுதான்...' என்றான். 'கொஞ்சம் பணத்தை புரட்டி தனிக்கடை போட்டு நிஜ முதலாளியாயிடு. நான், உனக்கு உதவி செய்றேன்...' என்றான். ஐடியாவும் கொடுத்தான். 'வரவு செலவு மொத்தமும், உன் கட்டுப்பாட்டில்தான் இருக்கு. கையெழுத்துப் போட்ட ப்ளாங்க் செக்புக்கும், உன்கிட்ட இருக்கு. ஒரு அஞ்சு லட்சத்தை எடு போதும்'ன்னான்.
''அப்பவும், 'இது தப்பு. தனியா போக விரும்பறேன்னு சொன்னாலே போதும், முதலாளி எனக்கு தேவையானதை ஏற்பாடு செய்து கொடுத்துடுவார்'ன்னேன். 'வெகுளியா இருக்கியேடா. அப்படி மட்டும் சொன்னா, முதலாளி உஷாராயிடுவார். நேரம் பார்த்து, சொற்பமா கையில் கொடுத்து வழியனுப்பிடுவார்டா'ன்னான். 'அதுக்காக, அவருக்கு தெரியாமல் பணம் எடுக்கறது தப்பில்லையா'ன்னேன். அதுதான் தொழில் தர்மம்னான். ஆண்டாண்டு காலமாய் வியாபார உலகத்துல இதுதான் நடக்குது. உன் முதலாளிகூட, அவர் வேலை செய்த இடத்தில் இப்படி கை வச்சிருப்பார்'ன்னான். மனசு மாறிப்போச்சு. அப்பவும் நான், 'முதலாளி பாவம்டா, அவரைக் கெடுத்து நான் வாழ்வதா'ன்னேன். அவன் சிரித்தான். 'உன் முதலாளியை என்னன்னு நினைச்சே. அவர் திறமைசாலி, இழப்பை நாலு மாசத்துல சரி செய்து, முன்னை விட சிறப்பா எழுந்துடுவார். அவர் குதிரை மாதிரி. கீழே விழுந்தால், 'சக்'குன்னு எழுந்துடுவார்டா'ன்னான்,'' 'என்று பாஸ்கர் சொல்ல... முத்துராமன் சிரித்தார்.
''நான் குதிரை இல்லை, யானை. விழுந்தேன், எழுந்திருக்கவே இல்லை,'' என்றார்.
வேதனையாகப் பார்த்தான் பாஸ்கர்.
''உங்க பணத்தை அடிச்சுட்டனே தவிர, ஒரு நாள் கூட நிம்மதியில்லே சார். நீங்க புகார் செய்து, எந்த நேரமும் போலீஸ் தேடி வரும்ன்னு பயந்தே பாதிகாலம் ஓடிடுச்சு. ஆனால், நீங்க ஏதும் அப்படி புகார் செய்யல. மேலும், 'ஏன் இப்படி செய்தான். கேட்டிருந்தால், நானே கடை வச்சு கொடுத்திருப்பேனே...'ன்னு சொன்னிங்களாம். என் காதை எட்டிச்சு. அப்பவே நான் செத்துட்டேன் சார். அப்பவே வந்து உங்க கால்ல விழணும்ன்னு தான் நினைச்சேன். ஆனால், ஊரை விட்டே போய்ட்டிங்க. எந்த ஊருக்கு போனாலும், அங்கே எந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோரை பார்த்தாலும், இது, 'குறிஞ்சி'யாய் இருக்குமோ, கல்லாவில் நீங்க இருப்பிங்களோன்னுதான் பார்ப்பேன்.''
''விடு. எனக்கு தெரியும் உன் மனசு. கெட்ட சகவாசத்துல கெட்டே. நீ என்ன செய்தே, கடை போட்டியா, வியாபாரம் என்ன ஆச்சு. ஏன் நீயும் என்னை மாதிரி பையை தூக்கிகிட்டு வந்தே.''
''ஐயா ஒரு கடை இல்லை, நாலுகடை போட்டேன். எல்லாம் நாசமா போச்சு. இப்ப தனியார் கம்பெனியில, செக்யூரிட்டியா இருந்து, போற வர்றவங்களுக்கெல்லாம் சல்யூட் அடிக்கறேன். நாலாயிரம் தர்றான். மனைவி தையல் வேலை பார்க்கறா. இரண்டு பெண் பிள்ளைகள். ஒண்ணு டிகிரியும், இன்னொன்னு ஒன்பதாவதும் படிக்குது. அவங்களை, நீங்க அவசியம் பார்க்கணும்,'' என்று வற்புறுத்தி, ஆட்டோ வைத்து அழைத்துப் போனான்.
அந்தக் குடும்பத்தை மொத்தமாக பார்க்கும் போது, மனதில் இனம்புரியாத பரிவு உண்டாயிற்று முத்துராமனுக்கும் - மீனாட்சிக்கும்.
''உங்களைப் பார்க்க, கடவுளை பார்க்குறாப்ல இருக்கு. இனியாவது, இவர் நிம்மதியானால் சரி. ஒவ்வொரு நாளும், தன் தவறை நினைத்து வருந்துவார். சரியா சாப்பிடக் கூட மாட்டார்; தூங்க மாட்டார். எங்களுக்குமே சித்ரவதையா இருக்கும்,'' என்றாள் பாஸ்கர் மனைவி பத்மா.
''உங்களையும் கஷ்டப்படுத்தியிருக்கானே; பாவம். ஆனால், நாங்கள் ஒரு நாளும், அவனை நிந்தனை செய்ததே இல்லம்மா.''
''அது உங்கள் பெருந்தன்மை ஐயா. அவரும் அப்படிதான் சொல்வார். முதலாளி மோசமான ஆளா இருந்திருந்தால், எனக்கு இத்தனை குற்ற உணர்ச்சி இருந்திருக்காது. அவர் மிக நல்லவர். அதுதான், எனக்கு அதிக வேதனைன்னு சொல்வார்,'' என்று, அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போ@த, பாஸ்கர் ஒரு பத்திரத்தை கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தான்.
''உங்ககிட்ட இருந்து அடிச்ச பணத்துல வாங்கின வீடு ஐயா இது. மொத்த பணத்தையும் என்னால, இந்த பிறவியில திருப்ப முடியாது. குறைந்தபட்சம், இந்த வீட்டையாவது நீங்க ஏத்துகிட்டு, என்னை மன்னிக்கணும்,'' என்று வேண்டி நின்றான். அவரும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
பாஸ்கருக்கு திருப்திதான். ஆனால், பத்மாவுக்கு கொஞ்சம் உறுத்தல். ''ஒரு பேச்சுக்குக் கூட பரவாயில்லை வச்சுக்கோன்னு, ஒரு வார்த்தை சொல்லாமல் பத்திரத்தை எடுத்துகிட்டு போய்ட்டாரே,'' என்றாள்.
''அப்படி சொல்லியிருந்தால், நான் மேலும் கடனாளியாகவே இருந்திருப்பேன். என்னால், அவருக்கு எவ்வளவு இழப்பு. இதுவாவது திரும்பிச்சே என்று வாங்கிக்கிட்டாரே. அதுவே, பெரிய விஷயமாகத்தான் நினைக்கிறேன். மேலும், அவருக்கு இந்த வீடு அவசியம். பாவம் வாடகைக்கு ஒரு ஓட்டு வீட்டில் இருக்கிறார். இங்கு வந்தாவது சவுகரியமாய் இருக்கட்டும்.''
''நாம எங்க போறது,'' என்று குழந்தைகளைப் பார்த்து கலங்கினாள்.
''பார்ப்போம்,'' என்று வேலைக்கு கிளம்பினான்.
மறுநாள் அதிகாரிகள் சிலர் வந்து வீட்டை பார்த்தனர். ''நீங்க யார், எங்கிருந்து வர்றிங்க?'' என்று கேட்டதற்கு, ''பேங்க்லருந்து வர்றோம். பில்டிங்கை அஸஸ் செய்ய வந்திருக்கோம்,'' என்று சொல்லி, வீட்டை மேலும் கீழும், நீள, அகலமும் அளந்து போயினர். அடுத்த நாளில், வேலையாட்கள் வந்து, வீட்டின் முன்புறத்தை அளவு போட்டு இடிக்கத் துவங்கினர்.
''என்ன செய்றீங்க. வீட்டை ஏன் இடிக்கறீங்க, காலி செய்யக்கூட அவகாசம் கொடுக்காம இடிச்சா எப்படி?'' என்று, பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கதறினாள் பத்மா.
''மொத்தமும் இடிக்கலைம்மா. முன் பக்கம் கடை வைக்க தகர்க்கறோம்,'' என்றனர்.
பாஸ்கர் அவசரமாக வீடு தேடினான்; கிடைத்தது.
''எல்லாம், 'பேக்' செய்யணும் பத்மா. நான் போய் வண்டி கொண்டு வர்றேன். இன்னைக்கே காலிசெய்துடுவோம்,'' என்று சொல்லிவிட்டு, வெளியில் வரும்போது, ஒரு வண்டி, பொருட்களுடன் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து, முத்துராமனும், மீனாட்சியும் இறங்கினர்.
''முன் கூட்டியே தகவல் சொல்லாம வந்துட்டிங்க சார். நாங்க காலி செய்ய, ஒரு நாள் அவகாசமாவது கொடுத்திருக்கலாம்,'' என்று பாஸ்கர் வருத்தப்பட...
''உங்களை யார் காலி செய்யச் சொன்னது. உங்களோடு சேர்ந்து இருக்கலாம்ன்னு, நாங்க வீட்டை காலிசெய்துட்டு வந்தால், இப்படி சொல்றியேப்பா. ஏன், நாங்க இங்க வர்றது உனக்கு பிடிக்கலையா?''
''ஐயா... என்ன சொல்றிங்க?''
''ஆமாம் பாஸ்கர். தனிமை எங்களைக் கொல்லுது. பிள்ளை குட்டிகளும் இல்லை, இங்கே, நீங்க எல்லாம் இருக்கிங்க. உங்களோடு இருந்தால், எங்களுக்கும் உற்சாகமா இருக்கும். அது மட்டுமில்ல, பேங்க்ல, இந்த வீட்டு பத்திரத்தைக் காட்டி, லோன் கேட்டேன். வீட்டை மதிப்பிட்டு, பத்து லட்சம் வரை தருவதாக சொல்லியிருக்காங்க. வீட்டின் முன் பக்கமே, நமக்கு தெரிஞ்ச வியாபாரத்தைத் துவங்கிடலாம்ன்னு தோணுச்சு. வீட்டோடு இருந்தாப்லயும் இருக்கும்; வியாபாரம் செய்த மாதிரியும் இருக்கும். கடைக்கு பேர் கூட முடிவு செய்துட்டுதான் வந்திருக்கேன். என்னன்னு சொல்லு பார்ப்போம்,'' என்றார் முத்துராமன்.
''குறிஞ்சி...'' என்று மகிழ்ச்சியாய் சொன்னான் பாஸ்கர். அங்கிருந்த அனைவர் மனம் முழுக்கவும் மகிழ்ச்சி பரவியது.
***
படுதலம் சுகுமாரன்

