PUBLISHED ON : ஜன 30, 2022

''கல்யாணி மாமி... மங்கலிப்பொண்டுக்கு எல்லாரும் காத்திண்டிருக்காளாம்... அம்மா, உங்களை கையோட அழைச்சுண்டு வரச்சொன்னா... நீங்க வந்துதான் நலங்கு, மஞ்சள் எடுத்து தரணுமாம்... சீக்கிரம் வாங்கோ மாமி,'' என்றாள், வர்ஷா.'ரங்கநாதன் ப்ளாட்ஸ்' குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து முதல் மாடிக்கு, 'லிப்டில்' வந்தாலும், மூச்சிறைக்க ஓடி வந்த வர்ஷாவை, சிரித்தபடி பார்த்த கல்யாணி, ''இதோ வரேன்டா செல்லம்... ஆமா, நீ பள்ளிக்கூடம் போகலையா?'' என்றாள். வாய் கேட்டாலும், கை விரல்கள் பூவை அழுத்தமாய் தலையில் பதிய வைத்து, மடிசார் புடவையை சரி செய்து கொண்டன. வெள்ளி மெட்டிகளின் சதங்கைகள் கிணுகிணுத்தன.''போகல மாமி... அடுத்த வாரம் எங்க சித்திக்கு கல்யாணமாச்சே,'' என்ற வர்ஷா, ''மாமி, நீங்க ரொம்ப க்யூட்,'' என்றாள், வெகுளியாக.''போதுமே, வயசு, 60ஐ தாண்டியாச்சு... நேக்கென்னடி கண்ணு அழகு... நீதான் தங்க விக்ரகமாட்டம் இருக்கே. சரி, மாட்டுப்பெண்கிட்ட சொல்லிண்டு வந்துடறேன்... நீ போய் அம்மாகிட்ட, கல்யாணி மாமி வந்துண்டே இருக்கான்னு சொல்லு.''''ஓ.கே.,''பட்டுப் பாவாடையை விசிறி போல ஆட்டியபடி, வந்த வழி ஓடினாள், வர்ஷா.சமையல் அறையில் காஸ் அடுப்பை அணைத்து விட்டோமா என்று சரி பார்த்து, ஹாலை ஒட்டிய அறை வாசலில் ஒருக்களித்து மூடியிருந்த கதவை மெல்ல தட்டினாள்.சரேலென கதவைத் திறந்த உத்ரா, ''ஆஹா, என் மாமியார். வழக்கம்போல உலா கிளம்பியாச்சா?'' என்றாள், எகத்தாளக்குரலில்.''உலா இல்லைம்மா... வசுந்தரா ஆத்துல, சுமங்கலிப் பிரார்த்தனை. தளிகை இன்னபிற விஷயங்களுக்கு ஒத்தாசைக்கு கூப்பிட்டிருக்கா.''''ஓடிப்போன உங்க புருஷன், உசுரோட இருக்காரா இல்லையாங்கற கவலையே இல்லாம, நீங்களும் பல ஆண்டுகளாக எல்லா விசேஷங்களுக்கும் ஜம்முனு, 'டிரெஸ்' பண்ணிண்டு கிளம்பிடறேள். உங்க சின்ன மாட்டுப்பொண்ணு, ரம்யாவும், வேலை பார்க்கற சாக்குல, தினம் வெளில போயிடறா... நாந்தான் வீட்ல கிடந்து தவிக்கறேன்; அதுவும் பாழாப்போற, 'ஆக்சிடென்டா'ல...'' உத்ராவின் அமில வார்த்தைகள், கல்யாணிக்கு பழகிப் போனதால், புன்னகை மாறாமல் நின்றாள். சாதாரணமாகவே துடுக்காய் பேசுகிறவள் தான். விபத்திற்கு பிறகு, தாழ்வு மனப்பான்மையால், பேச்சில் விஷத்தை கொட்டுகிறாள். இன்னொரு மருமகள் ரம்யாவோ, '30 ஆண்டுக்கு மேலா உங்களை திரும்பிக் கூட பார்க்காதவருக்காக, மஞ்சள் - குங்குமத்தை நீங்க அப்பிக்கிறதை பார்க்க சகிக்கல...' என்பாள். வீட்டை விட்டு போகும்போது, மாதவன், சந்நியாசியாக போனானே தவிர, சவமாக போகவில்லையே... சுமங்கலியாய் இருக்கும் பாக்கியத்தை கொடுத்திருப்பதால் தான் அந்த தோற்றத்திற்கான அந்தஸ்து கிடைத்து, அந்த தகுதியில் கிடைக்கும் வருமானத்தில் இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து, முன்னுக்கு வர முடிந்தது. இப்போதும், அந்த சுமங்கலி கோலம் தான் அவளுக்கு சமூகத்தில் அந்தஸ்தை தந்திருக்கிறது.''தளிகை எல்லாம் பண்ணி வெச்சுட்டேன். மதியம், தேசிகன் சாப்பிட வரதுக்குள்ள வந்துடறேன். லேட்டானா அவனுக்கும் சாப்பாடு போட்டுடும்மா,'' என்ற கல்யாணி, உத்ராவின் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்.'லிப்டில்' ஏறும்போது, எவ்வளவு முயன்றும், கண்கள் நனைவதை தவிர்க்க இயலாமல், புடவைத் தலைப்பால் இமைகளை ஒற்றிக்கொண்டாள்.ஒரு பெண்ணுக்கு கணவன் இருந்தும், இல்லாமல் இருக்கிற நிலைமையை விட கொடியது வேறெதுவுமில்லை. 40 ஆண்டுகளுக்கு முன், கல்யாணம் ஆகிறபோது, நல்ல வேலையில், நல்ல குணங்களுடன் தான் இருந்தான், மாதவன்.ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவனாக இருந்தது, கல்யாணிக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இரண்டாவது மகன் பத்ரி பிறந்த நான்கு மாதத்தில், திடீரென ஒருநாள், 'நான் என்னைத் தேடிப் போகிறேன்...' என்று சுருக்கமாய் எழுதி வைத்து விட்டு, காணாமல் போய் விட்டான். இது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என, நினைத்து பார்க்கவில்லை, கல்யாணி. கல்யாணியின் ஒரே அண்ணன் ஆராவமுதன், தங்கையின் பரிதாப நிலை கண்டு, பத்திரிகை, 'டிவி' என எல்லாவற்றிலும், காணவில்லை விளம்பரம் கொடுத்து, தேடியது தான் மிச்சம். மாதவன் காணாமல் போன சில ஆண்டுகளில் உயிரை விட்டான், ஆராவமுதன்.சில ஆண்டுகளுக்கு பிறகு, குடும்ப நண்பரும், உள்ளூர் பள்ளி தமிழ் ஆசிரியருமான பட்சிராஜன், ஹரித்வாருக்கு போனார். அப்போது, கங்கைக் கரையில், தாடி, மீசையுடன் சந்நியாசக் கோலத்தில் மாதவனை பார்த்து அழைக்க, அவன் சட்டென விலகி, கங்கா ஆரத்திக் கூட்டத்தில் புகுந்து, மறைந்து விட்டதாக சொன்னார்.அதற்குப்பின், திருவண்ணாமலையில், கல்யாணியின் துாரத்து உறவினர் ஒருவர், மாதவனை பார்த்து கரம் பிடிக்க, உதறித்தள்ளி, வேகமாய் ஓடி விட்டதாக தெரிவித்தார்.அண்மையில், தன், 80 வயது வைபவத்திற்கு, கும்பகோணம் போனபோது, மகாமகக் குளக்கரையில் மாதவனைப் பார்த்தார், பட்சிராஜன். அவனும், அவரை அடையாளம் கண்டு, மவுனமாய் நகர்ந்து விட்டான். அப்போதும் விடாமல் அவனை துரத்தி, கல்யாணி கஷ்டப்படுவதை சொல்லி, வீட்டுக்கு வருமாறு கெஞ்சினார். பதிலே சொல்லாமல் போய் விட்டான், மாதவன்.'மாதவன், என்கிட்ட படிச்சவன்; மகாபுத்திசாலி. மூளை அதிகம். அதுதான் ஆபத்தாய் போய் விட்டது...' என்று சொல்லி, வருத்தப்பட்டார்.அப்போதும், 'அந்த காலத்தில் ராஜாக்கள், புத்திரர்கள் பிறந்ததும் வனவாசம் போவார்களாம். அப்படி நினைத்துக் கொள்கிறேன்...' என்றாள், கல்யாணி.'விடும்மா. அப்பாவைதான் பார்த்தாரான்னு சந்தேகமா இருந்தாலும், அவர் எங்கயோ உயிரோட இருந்தால் சரி...' என்று பிள்ளைகள் சொல்லி விட்டனர். அவர்களை வளர்த்து, ஆளாக்கி, அவர்களின் முன்னேற்றத்துக்கு தனி ஒருத்தியாய் தான் சமாளித்ததை நினைத்துப் பெருமூச்சு விடுவாள், கல்யாணி.பலருக்கு கல்யாணியின் சிரித்த முகமும், வலிந்து மற்றவர்களுக்கு உதவும் குணமும் பிடித்திருந்ததால், அந்த குடியிருப்பு பகுதியில், அவளுக்கு நல்ல பெயர் தான்.''என்ன, 'லிப்ட்'லேயே நின்னுட்டேள்... வாங்கோ,'' வாயார வரவேற்றாள், வசுந்தரா.சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள், கல்யாணி.வசுந்தராவின் வீட்டில் எல்லா உதவிகளையும் செய்துவிட்டு, மறுபடி, 'லிப்ட்' ஏறும்போது, கால் தடுக்கியது, தலை சுற்றியது. வீட்டுக்குள் வந்து ஆசுவாசமாய் சோபாவில் உட்கார்ந்தாள். யாராவது ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்களா என்றிருந்தது.பேரன் ரகுவும், பேத்தி சுமதியும், வீட்டிலிருந்தால், கேட்காமலேயே ஓடி வந்து தண்ணீரென்ன, 'பிரிஜ்'ஜை திறந்து ஜூஸ் கொண்டு வந்து கொடுத்திருப்பர். எழுந்திருக்கலாமென முயன்றபோது, மொபைல் கூவியது. தேசிகன் என்று திரையில் பளிச்சிட, கால் வலி, தலை வலியை மறந்து, ''சொல்லுப்பா தேசி, சாப்பிட்டியா... உனக்குப் பிடிச்ச உசிலி, பத்ரிக்குப் பிடிச்ச மோர்க்குழம்பு வச்சிருந்தேன். அவன், இன்னிக்கு சாயந்திரம் வந்து சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டான்,'' என்றாள். ''போய்ட்டான்மா,'' அலறினான், தேசிகன்.அதன் தாக்கம் அறியாது, ''போனவன் திரும்ப வந்துடுவானே?'' என்றாள், கல்யாணி.''இல்லம்மா, வர மாட்டான். கொஞ்ச முன்ன, கார் விபத்துல செத்துப்...'' தேசிகன் சொன்னதை, கல்யாணியால் அதற்குப் பிறகு கேட்க முடியவில்லை. அழ இயலாத ஆற்றாமையில், பெற்ற வயிறு பிசைந்து தவித்தது.ஆயிற்று... பத்ரி மறைந்து இன்றோடு, 13 நாட்களாகி விட்டன. அவனுக்கு, வைகுண்ட பதவி கிடைக்க, சுபம் எனும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.''பத்ரி போனதை, இந்தியா முழுக்க எல்லா, 'டிவி'லயும், பத்திரிகைகளிலும் போட்டாச்சு. 'பேஸ் புக், வாட்ஸ் - அப்'லயும் எல்லாருக்கும் செய்தி அனுப்பி, அப்பாவின் போட்டோவைப் போட்டு கண்டுபிடிச்சி கொடுக்க வேண்டிக் கொண்டாயிற்று.''ஹரித்வார், காசி, திருவண்ணாமலை, கும்பகோணம்ன்னு, எல்லா இடத்துலயும் இங்கிலீஷ்ல, 'கண்ணீர் அஞ்சலி' நோட்டீஸ் ஒட்டியாச்சு... அப்பா, அதைப் பார்த்துட்டு வந்துடுவார்... புத்திரபாசம் லேசுப்பட்டதில்லம்மா,'' நம்பிக்கையுடன் அம்மாவை சமாதானம் செய்தான், தேசிகன்.பட்சிராஜன் வேகமாக ஓடி வந்து, ''அம்மாடி கல்யாணி, விஷயம் தெரியுமோ... நேற்று, மூலிகை வைத்தியர் முகுந்த சாமியுடன், மூலிகை இலை பறிக்க, மதுராந்தகம் காட்டுப் பக்கம் நானும் போனேன். அங்கே, சாட்சாத் மாதவன், ஒரு அசோக மரத்தடியில் கண் மூடி உட்கார்ந்திருந்தான்.''அவனிடம், பையன் போனதைச் சொல்லி கதறி, 'புறப்பட்டு வாடா'னேன். எல்லாத்தையும் காது கொடுத்து கேட்டவன், வழக்கம்போல எழுந்து போயிட்டான். சொட்டுக் கண்ணீர் வரல; உடல் பதறவே இல்ல,'' என்று சொல்லி, கண் கலங்கினார்.''அப்பா ஞானியாகிட்டார்... அவருக்கு எதுவும் பாதிக்காது தான்,'' என்றான், தேசிகன்.ஒருகணம் அங்கே மவுனம் பேசிக் கொண்டிருக்க, சட்டென அறைக்குள் போனாள், கல்யாணி. அடுத்த சில நிமிடங்களில், பாழும் நெற்றி, மூளிக்கழுத்து, விரித்த கூந்தல், வெள்ளைப் புடவையுமாய் வந்து நின்றாள்.''அம்மாடி கல்யாணீ...'' வீறிட்டார், பட்சிராஜன்.''அ... அம்மா?'' திடுக்கிட்டான், தேசிகன்.தீர்மானமான குரலில், ''கட்டினவளையும், பொறந்த குழந்தைகளையும் காப்பாத்த முடியலேன்னா கூட பரவாயில்லை... பெத்த மகன் போயிட்டான்னு காதுல விழுந்தும், கல்லாய்ப் போற தகப்பன் இருந்தென்ன, இறந்தென்ன...''எந்த சாஸ்திரம் சொல்லியிருக்கு, இல்லற தர்மத்தில் ஈடுபட்டதும், அதை பாதியில கைவிட்டுப் போவது நியாயம்ன்னு... இப்போ, குழந்தை போயிட்டான்னு தெரிஞ்சும், அதென்ன கல் மனசு... நானும் இதுநாள் வரை பொறுமையாத்தான் இருந்தேன்; இனிமே தாங்க முடியலடா...''என் பையனே போயிட்டான், உங்கப்பாவும் செத்துப் போயிட்டார்டா... இன்னிலேருந்து அவர் காரியத்தையும் ஆரம்பிச்சு முடிச்சுடு,'' என்றாள், கல்யாணி.
ஷைலஜா
