தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெரியவர்களை மதியுங்கள்!

பெரியவர்களை மதியுங்கள்!

பெரியவர்களை மதியுங்கள்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 13 - கூர்ம ஜெயந்தி

பெரியவர்களை தாத்தா, பாட்டி என அழைத்த காலம் போய், 'பெருசு' என்று அழைக்கிற காலம் இது. பெரியோரை அவமதித்தால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை இக்கூர்ம அவதாரக் கதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...

தேவலோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள் உள்ளனர். கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவர்கள் வித்யாதரர்கள்.

ஒருமுறை, வித்யாதரப் பெண் ஒருவர், திருமாலையும், லட்சுமியையும் துதித்து பாடி, வீணை மீட்டினாள். இதனால், மனம் மகிழ்ந்த லட்சுமி, தான் சூடியிருந்த பாரிஜாத மாலையை, அவளுக்கு வழங்கினாள். அதை பிரசாதமாக ஏற்ற வித்யாதரப் பெண், அங்கிருந்து புறப்பட்ட போது, வழியில், துர்வாச முனிவரைச் சந்தித்தாள்.

அவர் லட்சுமியின் தீவிர பக்தர். அவரிடம், தனக்கு லட்சுமி தேவியே நேரில் தந்ததாக கூறி, அம்மாலையை அவருக்கு அளித்தாள். அதை வாங்கிய துர்வாசர், தன் ஜடாமுடியில் சுற்றிக் கொண்டார்.

எதிரே, ஐராவதம் எனும் யானையின் மீது வந்து கொண்டிருந்தான் இந்திரன். அவனுக்கு அம்மாலையைக் கொடுத்தார் துர்வாசர். அவன் அதை கண்களில் ஒற்றி, யானையின் மத்தகத்தின் மீது வீசினான்.

மாலை, யானையின் மீது விழுந்ததும், அதற்கு ஞானம் வந்து, தவமிருக்க காட்டிற்கு ஓடியது. ஓடிய வேகத்தில், மாலை கீழே விழுந்து யானையின் காலடியில் மிதிபட, அதைப் பார்த்ததும், துர்வாசருக்கு கோபம் வந்து, 'இந்திரா... செல்வ செருக்கில், அப்புனிதமான மாலையின் பெருமையை உணராமல், யானை மீது வீசி விட்டாய். அது தரையில் விழுந்து புனிதம் கெட்டு விட்டது. உன் இத்தகைய அலட்சிய மனோபாவத்திற்காக, நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழப்பீர்களாக...' என சாபமிட்டார்.

பலமிழந்த இந்திரனும், தேவர்களும் அசுரர்களிடம் சிக்கி அல்லல் பட்டனர்.

திருமாலைச் சரணடைந்து தங்கள் கஷ்டத்தைக் கூறி கதறினர். பாற்கடலைக் கடைந்து, அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைச் சாப்பிட்டால், இழந்த பலத்தைப் பெற்று அசுரர்களை வெல்லலாம் என, யோசனை கூறினார் திருமால். அதனால், மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்த போது, மலை சீராக இல்லாமல் சாய்ந்தது. அதை சீராக்க வேண்டி மீண்டும் திருமாலிடம் சரணடைந்தனர்.

திருமால், ஆமை வடிவம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று, மலையை தன் முதுகில் தாங்கி சீராக்கினார். அப்போது பாற்கடலில் மறைந்திருந்த லட்சுமி தோன்றி, தேவர்களை மன்னித்து, திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.

தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அந்த அமிர்தம், தேவர்களுக்கு கிடைக்கும்படி செய்வதற்காக, திருமால் மோகினி வடிவெடுத்து, அசுரர்களை ஏமாற்றினார்.

ஆனால், இரு அசுரர்கள், ஏமாறாமல் அமிர்தத்தைப் பருக, அவர்கள் திருமாலால் தண்டிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் அமுதம் பருகியதால், ராகு மற்றும் கேது என்ற கிரக அந்தஸ்தைப் பெற்றனர்.

பெரியவர் தந்த பிரசாதத்தை, உரிய முறையில் பயன்படுத்தாமல் அவமதித்ததால், அந்த தேவர்களே சிரமப்பட்டிருக்கின்றனர். ஆனால், இன்றோ, தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை அவமதித்து, வீட்டை விட்டு வெளியேற்றுவதுடன் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர் இளைய தலைமுறையினர்.

இந்நிலை தொடர்ந்தால், திருமால், கூர்மமாய் வந்து அமிர்தம் தர மாட்டார்; கல்கியாய் வந்து கடுமையாய் தண்டித்து விடுவார்.

பெரியவர்களை மதிக்க இனியேனும் கற்றுக் கொள்வோமா!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us