தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் விளையாட்டுக்கள்!

சம்மர் விளையாட்டுக்கள்!

சம்மர் விளையாட்டுக்கள்!


PUBLISHED ON : மே 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உள்ளே வெளியே!

ஒரு வட்டம்; சுற்றிலும் நெருக்கமாக பிள்ளைகள் நிற்பர். நடுவில், ஒருவர் நின்று, 'உள்ளே' என்று சொன்னதும், அதற்கு எதிர்மறையாக, வட்டத்தில் நிற்பவர்கள், கோட்டை விட்டு வெளியே குதிக்க வேண்டும். 'வெளியே' என்றால், கோட்டின் உள்ளே குதிக்க வேண்டும். 'வெளியே' சொல்லும்போது, உள்ளே குதித்தால் அவர், 'அவுட்!'

பச்சைக் குதிரை!

சிறுவர்கள் குதிரை போல் குனிந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் பச்சைக் குதிரை விளையாட்டு. சிறுவன் ஒருவன் குனிந்து நிற்கும்போது, குதிரை போன்று காட்சி அளிப்பதால், இதற்கு பச்சைக் குதிரை என்று பெயர் ஏற்பட்டது.

இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும், சாட் பூட் த்ரீ போட்டு தோல்வியுற்ற சிறுவனில் இருந்து விளையாட்டை ஆரம்பிப்பர். தோல்வியுற்ற சிறுவன் காலை நீட்ட, மற்ற சிறுவர்கள் அனைவரும் தாண்டிச் செல்வர். அடுத்து, அவன் கால் மேல் கால் வைத்து உட்கார்ந்திருப்பான். அதையும் ஒவ்வொருவராக தாண்டிச் செல்வர். அதற்கு பின், கால்களுக்கு மேல் ஒரு கையை நீட்டுவான். அதையும் அவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும். பின், மற்றொரு கையை வைப்பான். இவ்வாறு முறையே உட்கார்ந்தும், குனிந்தும், நிமிர்ந்தும், எழுந்தும் நின்று குனிந்து படிப்படியாக உயர்ந்தும் நிற்க வேண்டும். எந்நிலையிலும் ஒருவன் தாண்ட முடியாமல் போனால், அவன் முன்னவன் போலவே காலை நீட்டி படிப்படியாக உயர்ந்தபடியே ஆட்டம் தொடரும்.

இதில், இன்னொரு வகை ஆட்டமும் உண்டு.

இடைவெளி விட்டு பலர் வரிசையாக குனிந்து நிற்பர். அவர்கள் ஒரு கோடியில் இருப்பவன், மற்றவர்களைத் தாண்டித் தாண்டி மறுகோடியில் போய்க் குனிந்து நிற்பான். இவ்வாறு வரிசைப்படி தாண்டிப் போய் நிற்பர். ஆட்டம் தொடரத் தொடர இடம் பெயர்ந்து கொண்டே இருப்பர்.

ஆடும், புலியும்!

பலர் வட்டமாய் கை கோர்த்து நிற்க, ஒருவர் உள்ளேயும், மற்றொருவர் வெளியேயும் நிற்பர். உள்ளே நிற்பவர் ஆடாகவும், வெளியே நிற்பவர் புலியாகவும் கருதப்படுவர். புலிக்கும், வட்டமாய் நிற்பவர்களுக்கும் இடையே பின்வருமாறு உரையாடல் நிகழும்:

புலி: சங்கிலி புங்கிலி கதவைத் திற!

பிள்ளைகள்: நான் மாட்டேன் வேங்கைப்புலி!

புலி: வரலாமா? வரக் கூடாதா?

பிள்ளைகள்: வரக் கூடாது!

பிள்ளைகள் இப்படி வழி மறித்த பின், எப்படியாவது உள்ளே நுழையப் பார்க்கும் புலி. பிள்ளைகள் அதற்கு இடம் விட மாட்டார்கள். பலமுறை அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்த பின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். அச்சமயம், ஆடு உடனே வெளியே விடப்பட்டுவிடும். ஆட்டைப் பிடிக்கப் புலி மீண்டும் வெளியேறும்போது, ஆடு மீண்டும் உள்ளே விடப்படும். இப்படி மாறி மாறி இரண்டொரு முறை நிகழ்ந்த பின், இறுதியில், புலி ஆட்டைப் பிடித்துக் கொள்ளும்.

வளையல் குச்சி விளையாட்டு!

கலர் கலர் வளையல்களைத் தூக்கிப் போட்டு, புறங்ககையில் நிறுத்த வேண்டும். பின், ஒவ்வொரு வளையலாக, அவை கீழே விழுந்து விடாமல், கைவிரல்களுக்குள் மாட்ட வேண்டும்.

அதேபோல், மெல்லிய குச்சிகளைத் தரையில் பரப்பி, ஒரே ஒரு குச்சியைக் கொண்டு ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.

அப்படி எடுக்கும் போது, மற்ற குச்சிகள் அசைந்து விடக் கூடாது. இந்த விளையாட்டில், கண்ணும், கைகளும் ஒன்றாகச் செயல்படுவதால், கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us