
காதல் ஒரு சுகமான அனுபவம். அதன் இனிமையும், வலியும், காதலர்களுக்கு மட்டுமே தெரியும்.
காதலர்கள் அனைவருமே, தங்கள் காதலும், இணைப்பும் காலம் காலமாய் தொடர வேண்டும் என்றே விரும்புவர்.
வெளிநாட்டு காதல் ஜோடிகள், ஒருபடி மேலே போய், அது என்றென்றும் நீடிக்க, ஒரு சின்னமாய், காதல் பூட்டு போடுவர்.
காதல் ஜோடிகள், திருமணம் முடிந்ததும், முதல் வேலையாக, ஒரு பூட்டு - சாவி வாங்கி, அதில் தங்கள் பெயர், திருமண தேதி ஆகியவற்றை செதுக்கி பூட்டுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும், நதியின் மேல் உள்ள பாலங்களில், பாதசாரிகள் நடக்க பயன்படும் சிறிய பாலங்கள் மற்றும் பாலத்தின் நடுவே வைக்கப்படும் செயற்கை மரங்கள் ஆகியவற்றில், பூட்டை பூட்டுகின்றனர். அடுத்து, 'எங்கள் காதல் என்றென்றும் தொடர வேண்டும்' என, மனமுருக வேண்டி, சாவியை, நதியில் துாக்கி எறிந்து விடுகின்றனர்.
சரி... இந்த பூட்டுகள், காலம் காலமாக நீடிக்கிறதா என்றால், காதல் நீடிக்காமல் பிரிந்து விடும் ஜோடிகளில் ஒருவருக்கு தெரியாமல், மற்றவர் வந்து, பூட்டை எப்படியோ திறந்து, துாக்கி எறிந்து விடுகின்றனர்.
காதலர்கள், இப்படி, எங்கெங்கு, காதல் பூட்டு பூட்டுகின்றனர் என, சில பிரபலமான இடங்களை பார்ப்போம்...
* ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர், பாரீஸ் நகரில் உள்ள சியன் நதி மீது கட்டப்பட்டுள்ள, பான்ட்டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தில், காதலர்கள் பக்கவாட்டு தடுப்பு தகடுகளில் உள்ள கம்பிகளில், காதல் பூட்டுகளை பூட்டுகின்றனர். 2014ல் பூட்டிய தகடு, 93 டன் அளவுக்கு அதிகரிக்க, தகடே விழுந்து விட்டது. இதனால், 2015ம் ஆண்டிலிருந்து, அவ்வப்போது இந்த பூட்டுகளில் சிலவற்றை, அகற்றி வருகின்றனர், நகர ஊழியர்கள்.
* ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள, ரினி நதியின் மேல் கட்டப்பட்டுள்ள, ஹோகன் ஷோ லெரன் பாலத்தில், காதலர்கள், காதல் பூட்டு போடுகின்றனர். இதுவரை, எதுவும் கழற்றப்படவில்லை.
* கிழக்காசிய நாடான சீனாவின், ஹுயான்ஹான் மலை பாதை தடுப்பில் உள்ள, செங்குத்தான இடத்திலிருந்து, ஒரு காதல் ஜோடி குதித்து, தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் ஆன்மாக்கள் இங்கு உலவி வருவதாக ஐதீகம். இதனால், காதல் ஜோடிகள், மலை ஏறும் பாதையின் இருபுறமும் உள்ள தகடுகளில் காதல் பூட்டுகளை பூட்டி, பள்ளத்தாக்கில் சாவியை எறிந்து விடுகின்றனர்.
* ஐரோப்பிய நாடான செர்பியா, லிஜுபாவி நகரில், பாதசாரிகள் நடக்கும் பாலத்தில், காதலர்கள், காதல் பூட்டு போடுகின்றனர். இங்கு, 100 ஆண்டுகள் நிறைந்த பூட்டுகள் கூட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், இந்த நடை பாலத்தை, 'காதல் பாலம்' என்றே அழைக்கின்றனர்.
* அமெரிக்காவில் உள்ள, நியூயார்க் மேன்ஹட்டன் - ப்ரூக்லைன் நகர்களை இணைக்கும் பாலம், கிழக்கில் அமைந்துள்ளது. இங்கும், காதல் பூட்டுகள் போடப்பட்டு, சாவிகள் நதியில் எறியப்படுகின்றன. ஆனால், அவ்வப்போது, பாலம் தாங்காது என, சில பூட்டுகள் அகற்றப்படுவதும் சகஜம்.
* தென் கொரிய தலைநகர், சியோல் நகரில் உள்ள, என்.சியோல் கோபுரத்தின் உச்சியில், ஏழு செயற்கை மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தான், காதலர்கள், பூட்டு போடுகின்றனர். இந்த செயற்கை மரங்கள், வலுவாக உள்ளதால், 'பேட்லாக்' வகை பூட்டுகளை நன்கு தாங்குகிறது. இந்த இடத்தில், ஒரு பெரிய பாத்திரம் உள்ளது. அதில், சாவியை போட்டு விடுகின்றனர், பல காதல் ஜோடிகள்.
* ஐரோப்பிய நாடான இத்தாலியின் வடக்கு ரோம் பகுதியில், பான் டீ மில் வியோ பாலம் அமைந்துள்ளது. இத்தாலியின் ரோமை, மகாராஜாக்கள் ஆண்டபோது, பாலத்தை காப்பாற்ற யுத்தங்கள் நடந்துள்ளன. இங்கு, காதலர்கள், பூட்டி விட்டு, அடியில் ஓடும், 'டைபர்' நதியில், சாவியை எறிந்து விடுகின்றனர்.
* ரஷ்யா தலைநகர், மாஸ்கோ நகர தொழிற்சாலை பகுதியில், வோடூத் வாட்னி என்ற கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய், 4 கி.மீ., நீளமும், 30 - 60 கி.மீ., அகலமும் கொண்டது. இங்கு, ஏராளமான செயற்கை மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பால் ஆன இவை, பூட்டுகளை நன்கு தாங்குகிறதாம். இதுவரை எதுவும் கழட்டப்படவில்லை.
* ஐரோப்பிய நாடான, ஸ்லோவேனியாவில், லிஜுபுல் ஜானிகா நதி மீது அமைந்துள்ளது, புட்சர் பாலம். இதில் உள்ள தடுப்பு கம்பிகளில், காதல் பூட்டு போடுகின்றனர், காதலர்கள்.
* செக் குடியரசு நாடான, மாலாஸ் டிரானா மாவட்டத்தில், ப்ராக் நகரில் உள்ள பாலத்தில், காதலர்கள், பூட்டு போடுகின்றனர். இங்கும் காதலர்கள், சாவியை துாக்கி எறிந்து விடுகின்றனர்.
உலகம் முழுவதும் காதல் ஜோடிகள், திருமணமாகி, பல காலம் மகிழ்ச்சியாய் வாழ,
மனமார வாழ்த்துவோம்!
- ஆர்.ராதா