sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை

/

திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : பிப் 09, 2020

Google News

PUBLISHED ON : பிப் 09, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஷ்ணு பிரபாகர் எழுதிய, 'சர்தார் வல்லபாய் படேல்' நுாலிலிருந்து:

'சர்தார் வல்லபாய் படேல், கடுமையாக பேசுபவர்...' என, எண்ணுவர், பலர். ஆனால், நகைச்சுவை, அவருடன் கூடப் பிறந்தது.

ஒரு விமர்சகர், காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில், 'உங்கள் காலத்தில் வாழும் துரதிர்ஷ்டம் பெற்றவன்...' என, குறிப்பிட்டிருந்தார்.

'இவருக்கு என்ன பதிலளிக்கலாம்...' என, படேலிடம் கேட்டார், காந்திஜி.

'விஷத்தை குடி என்று எழுதுங்கள்...' என்றார்.

'அப்படி வேண்டாம்... எனக்கு விஷத்தை கொடுத்து கொன்று விடு என எழுதினால்...' என்று கேட்டார், காந்திஜி.

'இதனால், அவருக்கு என்ன லாபம் கிட்டப் போகிறது... உங்களுக்கு விஷத்தை கொடுத்தால், நீங்கள் மடிந்து போவீர்கள்; அவருக்கும், துாக்கு தண்டனை கிடைக்கும். உங்களுடன் மறு பிறவியிலும் சேர்ந்து பிறந்து வைப்பார்; அதை விட, அவர், தாமே விஷத்தை குடித்து மடிவது மேல்...' என்றார், படேல்.

காந்திஜிக்கு மற்றொரு நண்பர், 'நாம், மூன்று மடங்கு சுமையுள்ள உடலுடன் நிலத்தில் நடக்கிறோம். எத்தனையோ எறும்புகளை நசுக்கி விடுகிறோம்...' என, எழுதியிருந்தார்.

காந்திஜியிடம், 'இனி, கால்களை தலை மேல் வைத்து நடக்குமாறு எழுதுங்கள்...' என்றார், படேல்.

காந்திஜியிடம், இன்னொரு நண்பர், 'மனைவி, குரூபி - அழகற்ற உருவம் உடையவளாக இருப்பதால், பிடிக்கவில்லை...' என, எழுதினார்.

'அவருடைய கண்களை பிடுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். அப்போது, அவளுடைய குரூபம் தெரியாது...' என்றார், படேல்.

ஆசிரியர் பா.ராகவன் எழுதிய, 'எக்ஸலன்ட்' நுாலிலிருந்து:

எழுத்தாளர் கல்கி கி.ராஜேந்திரன், எப்போதும் ஒரு, 'சூட்கேஸ்' வைத்திருப்பார். அதனுள், நிறைய தாள்கள் இருக்கும். அந்த பெட்டியில் உள்ள தாள்களை, செல்லமாக, 'சித்திரகுப்தன் கையேடு' என அழைப்பர், கல்கி அலுவலகத்தில்.

அலுவலகத்தில், தன்னுடன் பணியாற்றும், அத்தனை பேருடனும் தாம் பேசும் விஷயங்களை, சிறு குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வார். கல்கி இதழ் அலுவலக ஊழியர்கள் மட்டுமல்ல, வெளியே தான் சந்திக்கும் முக்கிய பிரமுகர்கள் சொல்வது, மற்றவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள், பேட்டிகளின் விபரம், தேதி என, ஒன்றையும் விட மாட்டார். உடனுக்குடன், அவற்றை தன் கைப்பட எழுதி வைத்து விடுவார்.

சுருக்கமாக சொல்வதென்றால், அலுவலகமே அந்த பெட்டி தாள்கள் தான்.

இப்போது புரிகிறதா, அவற்றை ஏன், 'சித்திரகுப்தன் கையேடு' என, குறிப்பிட்டனர் என்று!

திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:

ஒருநாள், கருணாநிதியோடு பேசிக் கொண்டிருந்தார், கலைப்புலி தாணு.

அப்போது, 'ஏன்யா இந்த ரஜினிக்கு, எவ்ளோ பெரிய, 'மாஸ்' இருக்கு. அவரு என்னடான்னா, 'ஷேவ்' கூட பண்ணாம, வெள்ளை தாடியோட வெளியே வந்து சுத்துறார். எம்.ஜி.ஆரை எடுத்துக்கோ, கண்ணுக்கு கீழே லேசா கரு வளையம் விழுந்ததும், 'கூலிங்கிளாஸ்' போட்டாரு.

'தலைமுடி உதிர ஆரம்பிச்சதும், குல்லா போட்டுக்கிட்டாரு. ரஜினியும், எம்.ஜி.ஆர்., மாதிரி பெரிய நடிகர். அவர்கிட்ட நான் சொன்னேன்னு, போய், 'ஷேவ்' பண்ணச் சொல்லுய்யா...' என்றார், கருணாநிதி.

அதை அப்படியே, ரஜினியிடம் கூறினார், கலைப்புலி தாணு.

ஆச்சரியப்பட்டார், ரஜினி.

மறுநாள், கருணாநிதி, ராஜாத்தியம்மாள், கனிமொழி ஆகியோர், 'குட்லக்' தியேட்டர் மாடியில் படம் பார்த்து, 'லிப்ட்' மூலம் கீழே வந்தனர். அதேசமயம், படம் பார்ப்பதற்காக, ரஜினி, 'லிப்ட்'டுக்கு காத்திருக்க, யதேச்சையாக இருவரும் சந்தித்து கொண்டனர்.

அப்போது, 'மழ மழ'வென்று, 'ஷேவ்' செய்யப்பட்ட தாடையை, கருணாநிதியிடம் காட்டி, 'தாணுகிட்ட சொன்னீங்களாமே... இப்போ, ஓ.கே.,வா...'ன்னு ரஜினி கேட்க, சிரித்துக் கொண்டே, கை குலுக்கிவிட்டு போனார், கருணாநிதி.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us