sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வேர் சிகிச்சை!

/

வேர் சிகிச்சை!

வேர் சிகிச்சை!

வேர் சிகிச்சை!


PUBLISHED ON : மார் 31, 2013

Google News

PUBLISHED ON : மார் 31, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போஸ்ட்' என்ற தபால்காரரின் குரலைக் கேட்டு, ஹாலில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரங்கசாமி, எழுந்து சென்று கையெழுத்திட்டு, கவரை வாங்கி வந்தார். கவரின் மீதிருந்த, அனுப்புனர் முகவரியை பார்த்தார். பார்த்ததும் பரபரப்படைந்தார்.

மத்திய அரசாங்கக் கடிதம் அது.

அவர் மகன் சரவணக்குமார் பெயருக்கு வந்திருந்தது.

பக்கத்தூரிலுள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறான் சரவணக்குமார்.

கடிதத்தை பிரித்து படிக்கும்போதே, அவருடைய முகம் பிரகாசமடைந்தது. படித்து முடித்ததும், ''ஜெயா...'' என்று கத்தினார். சமையலறையில் இருந்த அவர் மனைவி ஜெயலட்சுமி, இந்த காட்டுக் கூச்சலைக் கேட்டு திடுக்கிட்டாள். பதட்டத்துடன் ஹாலுக்கு வேகமாக வந்தாள்.

''என்னங்க?'' என்றாள் கணவனின் அருகே வந்து.

''இங்க பாத்தியா, உம்புள்ள பட்டபாடு வீண் போகல. சென்ட்ரல் கவர்மென்ட்ல இருந்து லெட்டர் வந்திருக்கு.''

''என்னன்னு லெட்டர் வந்திருக்கு?'' பதட்டம் குறையாமல் கேட்டாள் மனைவி.

அப்போதுதான், தன் தவறு புரிந்தது ரங்கசாமிக்கு. 'விஷயத்தைச் சொல்லாமல், மொட்டையாகச் சொன்னால் எப்படி புரியும் அவளுக்கு?'

''நம்ம சரவணக்குமார், ஐ.ஏ.எஸ்., பரீட்சை எழுதி இருந்தான் இல்ல, அதுல பாஸ் செய்துட்டான்.''

''என்ன நிஜமாவா?''

''பின்ன... இங்க பாரு, சென்ட்ரல்ல இருந்து, அப்பாய்மென்ட் ஆர்டர் அனுப்பி இருக்கான். வடமாநிலத்துல வேலை.''

''வடமாநிலத்திலா... அவ்வளவு தூரத்துலேயா?''

''தூரமென்ன தூரம்... பிளைட்ல போயிட்டு, பிளைட்ல வரப் போறான். இப்போ ட்ரெய்னிங் தான். போஸ்டிங் போடற போது, தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பிருக்கு.''

''ஏங்க... ஐ.ஏ.எஸ்., பாஸ் செய்தா, கலெக்டர் வேலை கிடைக்கும்ன்னு சொன்னீங்க?''

''இதுவும் கலெக்டர் வேலை மாதிரி தான்.''

''கலெக்டர் வேலை மாதிரி தானா?'' ஜெயலட்சுமி சற்றே ஏமாற்றத்துடன் கேட்டாள்.

''அடடா, உனக்கு எப்படி புரிய வைக்கறது... இதப் பாரு, உன் மகன் சீக்கிரமே கலெக்டரா வருவான்; நம்ம ஊருக்கே கலெக்டரா வருவான்... போதுமா?''

ஜெயலட்சுமியின் முகமெல்லாம் பூரிப்பு.

''சரி... போயி ஏதாவது ஸ்வீட் செய். இந்த சந்தோஷத்தக் கொண்டாடுவோம்.''

''சரிங்க,'' என உற்சாகத்துடன் திரும்பியவள், மீண்டும், அவர் பக்கம் பார்த்து, ''ஏங்க... முதல்ல சரவணனுக்கு போன் பண்ணிச் சொல்லுங்க,'' என்று சொல்லி, சமையலறையை நோக்கிச் சென்றாள்.

மொபைல் போனை கையிலெடுத்தார் ரங்கசாமி.

சரவணக்குமார், ரங்கசாமியின் மூத்த மகன். படிப்பில் படு சுட்டி. பள்ளி இறுதித் தேர்வில், மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்தான். கல்லூரியில் சேர்ந்து, எம்.ஏ., எம்.பில்; பிஎச்.டி., எனத் தடையின்றி பட்டங்கள் வாங்கினான். அதன் பின் தான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அந்த தேர்வை குறி வைத்து திட்டமிட்டு படிக்கத் தொடங்கினான்.

அதற்குள், அவன் படித்த கல்லூரியில் இருந்தே, அவனை வேலைக்கு அழைத்தனர். 'நல்ல வேலை. வேலையில் இருந்து கொண்டே, படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதலாமே...' என்று, அப்பா சொன்ன யோசனையை ஏற்று, வேலையில் சேர்ந்தான். ஓர் ஆண்டு கடுமையாக உழைத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதினான். இப்போது வெற்றியும் பெற்று விட்டான்.

நீண்ட நேரம் மணி அடித்த பின், சரவணன் மொபைல் போனை எடுத்தான்.

''சொல்லுங்கப்பா!''

''சரவணா... கிளாஸ்ல இருக்கியா?''

''கிளாஸ்ல இருந்து, இப்போதாம்ப்பா வந்தேன். போன் சைலன்ஸ்ல இருந்ததால, முதல்ல கவனிக்கல... வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?''

''எல்லாரும் நல்லா இருக்காங்க... ஒரு சந்தோஷமான சமாச்சாரம் சொல்லத்தான், இப்போ கூப்பிட்டேன்.''

''சொல்லுங்கப்பா.''

''நீ, ஐ.ஏ.எஸ்., பாஸ் செய்துட்ட.''

''ஓ காட்!''

''இப்போதான் லெட்டர் வந்திருக்கு, ட்ரெய்னிங்குக்கு வரச் சொல்லி இருக்காங்க, நீ உழைச்சு படிச்சது வீண் போகல, நீ ஜெயிச்சுட்டே சரவணா.''

''நன்றிப்பா.''

''எனக்கும், உங்கம்மாவுக்கும், ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா. நீ உடனே புறப்பட்டு வர்றியா?''

''உடனே வரணும்ன்னு சொல்லி இருக்காங்களாப்பா?''

''இல்ல இல்ல... இன்னும் பதினைஞ்சு நாள் டைம் இருக்கு. இனிமே எதுக்கு, அந்த காலேஜ் வாத்தியார் வேலை செஞ்சுகிட்டுன்னு தான் சொன்னேன்.''

''நாளைக்கு வெள்ளிக்கிழமை, ஒரு நாள்

தானேப்பா? நாளைக்கு ராத்திரி கிளம்பி வந்துடறேன்.''

''இல்ல சரவணா, நீ புறப்படறதுக்கு தயார் செய்யணும். எப்படியும் கொஞ்சம் புது டிரஸ் எடுக்கணுமில்லையா?''

''பாத்துக்கலாம்பா... டைம் இருக்கே?''

''சரிப்பா... நாளைக்கு நைட்டே வா. வச்சிடட்டுமா?''

''சரிப்பா.''

வெள்ளிக்கிழமை, அவன் வீடு வந்து சேர்ந்தபோது, வீடு கலகல வென்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் தம்பியும், திருமணமான அவன் தங்கை, தன் கணவன், குழந்தைகளோடு வந்திருந்தாள். அவன் வந்து சேர்ந்ததும், எல்லாரும் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வாழ்த்தினர். சற்று நேரம் கழித்து, மகனை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்தார் ரங்கசாமி. உள்ளே நுழைந்ததும், பீரோவை திறந்து, உள்ளேயிருந்து, ஒரு கவரை எடுத்து, அவன் கையில் கொடுத்தார்.

''இதுல, இருபதாயிரம் ரூபா இருக்குப்பா, வேணுங்கற டிரஸ் எடுத்துக்க.''

பணத்தை கையில் வைத்து, ஏதோ யோசிப்பது போல் நின்றான் சரவணன்.

''என்னப்பா... போதாதுன்னு நினைக்கறியா?''

''இல்லப்பா, இப்போ டிரஸ் எதுவும் எடுக்க வேணாம்ன்னு தோணுதுப்பா.''

''இதப் பார் சரவணா... பெரிய வேலைக்கு போகப்போற. டிரஸ்சும், அதுக்கு தகுந்தபடி இருக்க வேண்டாமா?''

''அதுக்கில்லப்பா,'' சரவணன் ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தயங்குவது போலிருந்தது.

''எதுக்கு தயங்கறே... என்ன விஷயம் சொல்லு.''

''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்பா.''

''சொல்லு சரவணா.''

''இப்போ வேண்டாம்பா... காலைல பேசலாம்.''

இப்போது குழப்பத்துடன் மகனின் முகத்தை பார்த்தார் ரங்கசாமி. மனதில் ஏதோ சந்தேகம் தட்டியது.

சரவணக்குமாரின் தோள்களை பிடித்து, கட்டிலின் மீது உட்கார வைத்தார். தானும் அருகே அமர்ந்தார்.

''சொல்லு, என்ன பேசணும்?''

''இப்போ வேண்டாம்பா... காலைல பேசுவோம்.''

''இல்ல சரவணா... இப்பவே சொல்லு, இல்லேன்னா எனக்கு தூக்கம் வராது.''

சற்று தயக்கத்திற்குப் பிறகு, மெல்ல சொன்னான் அவன்.

''நான் ஐ.ஏ.எஸ்., ட்ரெய்னிங்குக்கு போகலப்பா.''

அதிர்ந்து போய் மகனை பார்த்தார் ரங்கசாமி. சற்று நேரமாயிற்று, அவருக்கு தன்னை சுதாரித்துக் கொள்ள. ஆனாலும், உடனே பேச முடியாமல், திகைப்புடன் அவனைப் பார்த்தார்.

''இந்த லெக்சரர் வேலையே, எனக்கு திருப்தியா இருக்குப்பா,'' தெளிவாகவே சொன்னான் சரவணன்.

''சரவணா... நீ என்ன சொல்ற?''

''எனக்கிந்த காலேஜ் வாத்தியார் வேலையே போதும். ஐ.ஏ.எஸ்., ஆபீசராக எனக்கு இஷ்டமில்லப்பா.''

அதிர்ச்சி, திகைப்பு எல்லாம் மறைந்து, மெல்ல கோபம் ஏறியது அவருக்கு.

''டேய்... உனக்கென்ன பைத்தியமா? இதுக்காக நீ பட்ட பாடென்ன? ராப்பகலா கண்ணு முழிச்சு படிச்சியே? அப்படி பாடுபட்டு எழுதுன பரீட்சைக்கு, இப்போ பலன் கிடைச்சிருக்கு, வேண்டாம்ன்னு சொல்றியே.''

சரவணன் பொறுமையாகப் பேசினான். ''நீங்க சொல்றதெல்லாம் உண்மைதாம்பா. ஆனா, இப்போ என்னோட மனநிலை மாறிடுச்சே.''

சட்டென ரங்கசாமிக்கு, வேறொரு சந்தேகம் தோன்றியது. 'சரவணன் இந்தக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து, ஒரு வருடம் ஆகி விட்டது. இதற்குள் வேலை செய்யுமிடத்தில் யாராவது, ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்து விட்டானோ... அவளை பிரிய மனமில்லாமல் இப்படி சொல்கிறானோ...' இந்த எண்ணம் தோன்றியதுமே, அவருக்குக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. இந்த காலத்தில், இது சாதாரண விஷயம். இதற்குப் போய், ஒரு புத்திசாலிப் பையன் இப்படி முடிவெடுப்பானா?

''சரவணா... என்கிட்ட வெளிப்படையாப் பேசு, யாராவது பொண்ணுகிட்ட பழகிட்டிருக்கியா?'' அவரை வியப்புடன் பார்த்தான் சரவணன்.

''அதெல்லாம் இல்லப்பா,'' என, உடனே மறுத்தான்.

''இத பார், எங்கிட்ட மறைக்காதே; தயங்காதே. யாரா இருந்தாலும் சரி, எனக்கு சம்மதம். ஜாதி, மதம்ன்னு நான் பெரிசா பார்க்க மாட்டேன்னு உனக்கே தெரியும்.''

''அப்பா நிறுத்துங்க. என்னது சம்பந்தமில்லாம பேசறீங்க?''

''நீ தாண்டா சம்பந்தம் இல்லாம பேசற... வாழ்க்கைல எவ்வளவு பெரிய வாய்ப்பு வந்திருக்கு, அத வேண்டாம்ன்னு சொல்றியே, இதுக்கு வேற என்ன காரணம் இருக்கப் போகுது, பொண்ணத் தவிர.'' தந்தையை அமைதியாகப் பார்த்தான் சரவணக்குமார்.

''உங்க மகன இவ்வளவு மட்டமா புரிஞ்சு வச்சிருக்கீங்களேப்பா,'' என்றான் வருத்தத்துடன்.

''அது காரணமில்லேன்னா, ஏன் ஐ.ஏ.எஸ்., வேலைய வேண்டான்னு சொல்ற, அதவிட, இந்த காலேஜ் வாத்தியார் வேலை ஒசத்தியா?'' ஆத்திரமும், கிண்டலுமாகக் கேட்டார்.

''ஒசத்திதாம்பா, உண்மையிலேயே அதவிட இது ரொம்ப ஒசத்திதான்.''

''வேண்டாம் சரவணா... எம்பொறுமைய ரொம்பவும் சோதிக்காதே,'' ஆத்திரத்துடன் கூறினார் ரங்கசாமி.

''அப்பா... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க ப்ளீஸ்...''

அதற்கு மேல் அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை. எழுந்து நின்றார். ''முட்டாளாடா நீ, ஏதாவது பைத்தியம் புடுச்சு போச்சா,'' என்று அவர் போட்ட கூச்சலில், தங்கையும், அம்மாவும், தங்கை கணவனும் அறை முன் கூடி விட்டனர்.

ரங்கசாமி, என்றைக்கும் மகனை கோபித்துக் கொண்டது கிடையாது. அப்படிப்பட்டவர், இந்த சமயத்தில் ஏன் இப்படி கோபத்துடன் கத்துகிறார் என்று புரியாமல், திகைப்புடன் பார்த்தனர். முடிவாகச் சொன்னார் ரங்கசாமி.

''கடிதத்துல குடுத்திருக்கற தேதிக்குள்ள போயி, ட்ரெய்னிங்ல ஜாய்ன் செய்,'' என்று சொல்லி விட்டு வேகமாக வெளியேறினார்.

தங்கையும், அம்மாவும் பதட்டத்துடன் அவனை நெருங்கினர். அம்மா, அவனிடம் பேச வாயெடுத்தாள். அதற்குள் மீண்டும் அறைக்குள் வந்தார் ரங்கசாமி.

''யாரும் அவன இப்பொ தொந்தரவு செய்யாதிங்க. அவன் நிம்மதியா தூங்கி எந்திரிக்கட்டும்; காலைல பேசிக்கலாம்,'' என்று சொல்லிவிட்டு, அவர் அகன்றதும், இவர்களுக்கு வாயடைத்துப் போய்விட்டது. மவுனமாக அறையை விட்டு வெளியேறினர்.

இரவெல்லாம் தூக்கம் வராமல், புரண்டு கொண்டிருந்தார் ரங்கசாமி. என்றைக்கும் இல்லாதபடி, மகனிடம் இந்தளவுக்கு கோபித்துக் கொண்டோமே என்று, மிகவும் வேதனைப்பட்டார்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அப்பா, அம்மா சொல் தட்டாத நல்ல பிள்ளை சரவணக்குமார். தப்பான காரியம் என்று எதையும் அவன் செய்ததே இல்லை. அப்படிப்பட்டவன், இன்று, தானே முயன்று கிடைக்கும், இவ்வளவு பெரிய பணியை வேண்டாம் என்று சொல்கிறான் என்றால், அதற்கு ஏதாவது தகுந்த காரணம் இல்லாமலா இருக்கும். இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றி வெகுநேரம் அவரை வாட்டின. காலையில் மகனிடம் பேசி, என்ன காரணத்தால், அவன் ஐ.ஏ.எஸ்., வேண்டாமென்ற முடிவுக்கு வந்தான், என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த பின் தான், அவருக்குத் தூக்கம் வந்தது.

காலையில் மனைவி வந்து தட்டி எழுப்பிய பிறகே எழுந்தார். கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்ததுமே, ''சரவணன் எழுந்துட்டானா... காபி குடுத்தியா?'' என்று தான் கேட்டார்.

''அவன் காலைலயே கிளம்பி போயிட்டானுங்க.''

''கிளம்பிப் போயிட்டானா, எங்கே?''

''காலேஜுக்கு. முதல் பஸ்ஸப் புடிச்சுப் போறேன்னு சொல்லிட்டு போயிட்டான்,'' சொல்லியவள், டேபிள் மீது, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஒரு லெட்டரை எடுத்து வந்து, அவர் முன் நீட்டினாள்.

''என்னது ஜெயா?''

''சரவணன் குடுத்தது. இந்தாங்க.''

எந்தச் சலனமுமின்றி பேசிய மனைவியின் முகத்தை, ஒருமுறை பார்த்துவிட்டு, பின் யோசனையுடன் கடிதத்தை வாங்கிப் பிரித்தார். அவர் படிக்கத் தொடங்கும் முன் குறுக்கிட்டாள் ஜெயலட்சுமி.''இதப் பாருங்க, ராத்திரி நீங்க, அவன்கிட்ட அவ்வளவு முரட்டுத்தனமா பேசியிருக்கக் கூடாது. நீங்களோ, நானோ சொல்லி, அவன் ஐ.ஏ.எஸ்.,க்கு படிக்கல. அவனே படிச்சான். இப்போ அவனே வேண்டாங்கறான். எந்த வேலைக்குப் போனாலும், நம்ம புள்ள நல்லா இருப்பாங்க,'' என்று சொல்லி, கசியும் கண்களைத் துடைத்தபடி, அறையை விட்டு அகன்றாள் ஜெயலட்சுமி.

அதிகம் படிக்காத மனைவி, எவ்வளவு தெளிவான விஷயத்தை, எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டுப் போகிறாள். போகும் மனைவியையே சில வினாடிகள் பார்த்து விட்டு, கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.

அப்பா, முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மிக்க மகிழ்வோடு இருந்த உங்களிடம், நான், உடனே என் எண்ணத்தைச் சொல்லியிருக்கக் கூடாது. நீங்கள் ஏதோ சொன்னீர்கள். என் முடிவுக்குக் காரணம் அதல்ல. அப்படி எந்தப் பொண்ணுடனும் நான் பழகவில்லை. ஐ.ஏ.எஸ்., வேலை வேண்டாமென நான் முடிவெடுத்தது ஏன் என்ற காரணத்தை, இப்போது சொல்லி விடுகிறேன்.

இந்தக் கல்லூரியில், நான் வேலைக்குச் சேரும்போது, தற்காலிகமாகவே இந்தப் பணி என்று தான் சேர்ந்தேன். மனதில், ஐ.ஏ.எஸ்., ஆபீசர் ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கை உறுதியாக இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில், இந்த ஆசிரியர் பணி எனக்கு மிகவும் பிடித்து விட்டது. கல்லூரி நிர்வாகத்துக்கும், என்னை மிகவும் பிடித்து விட்டது. இதை விட, மாணவர்களின் அன்பு, என்னை கட்டிப் போட்டு விட்டது.

இங்கே ஒரு பேராசிரியர் பணிபுரிகிறார். என்னை விட மிக சீனியர். பெரிய கோடீஸ்வரர். அவருடைய மனைவி அமெரிக்காவில் டாக்டர். அவர் இன்னும், இங்கே பணியில் தொடருகிறார். அவர் அடிக்கடி கூறும் வார்த்தை, 'மாணவர்களுக்கு அறிவு புகட்டுவதை விட, புனிதமான பணி வேறு என்ன?' என்பது தான்.

அப்பா, இப்போது இந்தியாவில் எவ்வளவோ வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், பொதுவாக நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஒழுங்கீனம் ஏற்பட்டு விட்டது. ஊழலும், சுயநலமும் நாட்டையே சீரழிக்கத் துவங்கி விட்டன. இன்றைய நம் அரசாங்கங்களின் ஆட்சி முறை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனம் பற்றியெல்லாம், நீங்களே பலமுறை என்னிடம் பேசியுள்ளீர்கள். சட்டத்தினாலோ, பலாத்காரத்தினாலோ இவையெல்லாம் மாறுமா? மாறவே மாறாது. இவையெல்லாம் மாற, நம் நாடு, கொஞ்சம் கொஞ்சமாக தூய்மை பெற ஒரே வழி; நல்ல வழி என்ன தெரியுமா? வேர் சிகிச்சை! பல் கெட்டு விட்டது என்று, பல் மருத்துவரிடம் போனால், சொத்தையான பல்லை தூய்மையாக்க, அவர் செய்வது தான் வேர் சிகிச்சை.

மாணவர்கள்தான் நம் நாட்டின் வேர்கள். இவர்கள்தான் நாளைய இந்தியா. எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகும், இன்றைய இளைஞர்களுக்கு போதிக்கும் பணியை விட பெரிதாக, வேறு எந்தப் பணியையும் என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

தினம் தினம் வகுப்பறையில், என் முன், ஆர்வத்தோடு அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது, நான் என்னையே மறந்து விடுகிறேன். எல்லா ஆசிரியர்களுமே என்னை போலவே இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது. ராமருக்கு, அணில் உதவியதைப் போல, நான் என்னளவில் ஈடுபாட்டுடன் இப்பணியைச் செய்கிறேன்.

நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூறுகிறார், 'நல்ல மாணவர்களை உருவாக்குங்கள். அவர்கள் நல்ல இந்தியாவை உருவாக்குவார்கள்!'

இப்போது நமக்கு தேவையான அறிவுரை அல்லவா இது.

சொல்லுங்களப்பா. இந்தப் பணியை விட, ஐ.ஏ.எஸ்., ஆபீசர் வேலை உயர்ந்ததென நினைக்கிறீர்களா? அப்படி நீங்கள் நினைப்பதாக இருந்தால், உடனே எனக்கு போன் செய்யுங்கள், வந்து விடுகிறேன்.

— என்றும் தங்கள் அன்பு மகன்,

சரவணக்குமார்.

கடிதத்தை முடித்தபோது, ரங்கசாமியின் கண்களில் கண்ணீர் மல்கியது. இப்படிப்பட்ட மகனை கோபித்துக் கொண்டது எவ்வளவு தவறு என்பதை இப்போது உணர்ந்தார். அந்த ஓய்வு பெற்ற மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்.

***

ராகவன் தம்பி






      Dinamalar
      Follow us